மிருணாளினி
சென்னையில் 1918 - ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி பிறந்த மிருணாளினியின் குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில்


சென்னையில் 1918 - ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி பிறந்த மிருணாளினியின் குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களாவர். தந்தை சுவாமிநாதன் தமிழர். பிரபல வழக்குரைஞர் மட்டுமல்ல, சென்னை சட்டக் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர். தாயார் அம்மு சுவாமிநாதன் காந்தியவாதி. 2012 - ஆம் ஆண்டில் காலமான சகோதரி லட்சுமி சேகல், நேதாஜியின் இந்திய தேசியப் படையில் கேப்டனாகப் பணியாற்றியவர். மிருணாளினியின் மூத்த சகோதரர் கோவிந்த், கோவிந்த சுவாமிநாதன் என்கிற பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல வழக்குரைஞராக இருந்தார். அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். அவசரநிலை காலத்தை எதிர்த்த வழக்குகளில் ஆஜரானவர். இளைய சகோதரர் சுப்ராம் மஹிந்திரா நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார்.

பிராமணரான இவரது தந்தை, மலபார் நாயர் சமூகத்தைச் சேர்ந்த அம்முவை திருமணம் செய்து கொண்டது அந்த காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவமாகும். 1930 - ஆம் ஆண்டு அவர் காலமானபோது தன்னுடைய சொத்துகளை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்து எழுதி வைத்தாராம். தன்னுடைய பெற்றோரின் கலப்புத் திருமணம்தான் தன் வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் துணிவையும் ஏற்படுத்தியதாக மிருணாளினி கூறுவதுண்டு. நான்கு வயதிலேயே நடனத்தில் ஈடுபாடுகொண்ட மிருணாளினி. தான் கேட்கும் பாடலுக்கு ஏற்ப நடனமாடுவதுண்டாம். அப்போதெல்லாம் இவர் நடனம் கற்றுக் கொள்வதில் இவரது தாயாருக்கு கொஞ்சம் விருப்பமில்லை. அந்தக் காலத்தில் தேவதாசிகள்தான் நடனம் ஆடுவார்கள் என்று அவர் கருதினார். சுவிட்சர்லாந்தில் பள்ளிப் படிப்பை முடித்த மிருணாளினி கொல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனில் ரவீந்திரநாத் தாகூரின் மாணவியாக நடனம், சங்கீதம், ஓவியம் ஆகிய கலைகளைக் கற்றார்.
நடனத்தை தன்னுடைய வாழ்க்கையாகவும், மேடையைத் தனது தாயாகவும் கருதிய மிருணாளினியின் 22-ஆவது வயதில் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை தோன்றியது. வாழ்நாளை நடனத்திற்காகவே அர்ப்பணிக்க நினைத்தவருக்கு, ஏற்கெனவே கலாசேத்திராவில் தனக்குக் குருவாக இருந்த முத்துக்குமரன் பிள்ளை, பெங்களூரில் ராம்கோபால் என்கிற கலைஞரால் தொடங்கப்பட்ட நடனப்பள்ளியை ஏற்று நடத்துவது தெரிந்தது. தன்னுடைய தாயாருடன் ஆறுமாத காலம் அமெரிக்கா சென்று திரும்பிய மிருணாளினியிடம் உனக்காகவே நடனப் பள்ளியைத் துவக்கியிருப்பதாக ராம்கோபால் கூறவே, ஏற்கெனவே தனக்குப் பழக்கமான முத்துகுமரன் பிள்ளையும் பெங்களூரில் இருந்ததால் ராம்கோபால் அழைப்பை ஏற்று பெங்களூர் வந்தார். பெங்களூரில் நடந்த நடன நிகழ்ச்சியொன்றில் இந்திய விண்வெளி மேதை எனக் கருதப்பட்ட விஞ்ஞானி விக்ரம் சாராபாயை, ராம்கோபால் மிருணாளினிக்கு அறிமுகப்படுத்தினார். நடனத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறிய மிருணாளினியுடன் பலமுறை சந்திக்க வேண்டிய வாய்ப்புகள் சாராபாய்க்குக் கிடைத்தது. ஆனால், இவர்கள் அடிக்கடி சந்திப்பதை ராம்கோபால் விரும்பவில்லை. அதேநேரத்தில் ராம்கோபால் நடன நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் கைதட்டலைப் பெற வேண்டுமென்பதற்காகவே தன்னை முன்னிலைப்படுத்தியதாக மிருணாளினி கருதினார். ராம்கோபாலுடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் சாராபாய், மிருணாளினியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். 1942-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. ராம்கோபால் நடன பள்ளியிலிருந்து வெளியேறினாலும் தொடர்ந்து நடனத்தில் ஈடுபாடு கொண்ட மிருணாளினியின் ஆர்வத்திற்கு சாராபாய் தடைவிதிக்கவில்லை. கணவருடன் அகமதாபாத்தில் குடியேறிய மிருணாளினி, 1949-ம் ஆண்டு "தர்ப்பணா' என்ற அகாதெமியை நிறுவி, அதன் மூலம் ஏராளமான நடனக் கலைஞர்களை உருவாக்கினார். வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தி சாதனையும் படைத்தார்.
1960-61-ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக பரதநாட்டியம் வாயிலாக பெண்ணுரிமை, ஊழல், வரதட்சணைக் கொடுமை, தலித் உரிமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மனித உரிமை மீறல் போன்ற பல சமூக நிகழ்வுகளை வெளிப்படுத்தினர். அதுவரை வரதட்சணைக் கொடுமை என்ற வார்த்தையைக்கூட கேள்விபட்டிராத இந்திய சமூகத்தினர், அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் வகையில் இந்திய அரசு அதை அங்கீகரித்தது, மிருணாளினி துவக்கிய "தர்ப்பணா'வை அவரது மகளும் நடனக்கலைஞரும், குஜராத்தி - இந்திப் படங்களில் நடித்த வகையில் நடிகையுமான மல்லிகா சாராபாய் தொடர்ந்து நடத்தி வருகிறார். பத்மபூஷண் விருது பெற்ற மிருணாளினி இந்த வயதிலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அகமதாபாத்தில் நடன நிகழ்ச்சியொன்றை நடத்தியது - நடனத்தின் மீதுள்ள அவரது ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
ஜனவரி 21-ஆம் தேதி தன்னுடைய 97 வயதில் அகமதாபாத்தில் காலமான மிருணாளினியின் விருப்பப்படி அவரது உடல் "தர்ப்பணா'வில் வைக்கப்பட்டு அவரிடம் பயிற்சிபெற்ற நடனக் கலைஞர்களுடன் அவரது மகள் மல்லிகா சாராபாயும் நடனமாடி அஞ்சலி செலுத்தியது மறக்க இயலாத நிகழ்ச்சியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...