ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்து வரும் இளம் வீராங்கனை சாதனா
கோவையைச் சேர்ந்த சாதனா (வயது 8) பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது 5 வயதிலிருந்து ஸ்கேட்டிங் பயிற்சியை


கோவையைச் சேர்ந்த சாதனா (வயது 8) பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது 5 வயதிலிருந்து ஸ்கேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் இவரின் சாதனைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்தக் கூடியவை. 8 வயதே பூர்த்தியான சாதனா 30 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள், 20 தனிநபர் சாம்பியன் பட்டம் என இவரது பரிசுப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஸ்கேட்டிங்கில் மட்டுமல்லாமல் பேச்சு, கட்டுரை, படிப்பு என அனைத்திலும் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது 5-ஆவது வயதில் பெற்றோருடன் கோவை வ.உ.சி பூங்காவுக்கு சுற்றிப் பார்க்கச் சென்றபோது அங்கு சிறுவர்கள் ஸ்கேட்டிங் செய்வதைப் பார்த்த சாதனா அன்றுமுதல் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தடைகளைத் தாண்டி, கண்ணுக்கு கீழ், காலில் என 7 முறை பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தபோதும் கலங்காமல் இந்தச் சிறுமி பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். நாக்பூரில் டிசம்பர் 2015-இல் நடைபெற்ற 4 போட்டிகளிலும் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்கள் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் கோவை நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் 2 போட்டிகளில் பங்கேற்று 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். புனே ஒலிம்பிக் ஃபெடரேஷன் சார்பில் கோவாவில் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 தங்கப் பதக்கங்களை வென்று, வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதே இவருடைய கனவு.
இதுகுறித்து, சாதனாவின் பெற்றோர் பேசியதாவது:
""5 வயதிலிருந்து சாதனா ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறாள். சில போட்டிகளில் கலந்துகொள்ளும்போது, பல் உடைந்து, பல காயங்களுடன் வருகையில் மிகவும் பயமாகவும், வருத்தமாகவும் தான் இருந்தது. ஒருமுறை காலில் ரத்தம் ஒழுக ஒழுக ஸ்கேட்டிங் செய்து தங்கப் பதக்கம் வென்றது எங்களால் மறக்கவே முடியாது. காயங்கள் ஏற்பட்டபோதும் அவள் ஒருமுறை கூட ஸ்கேட்டிங் வேண்டாம் என்று கூறியதே கிடையாது. அவளுடைய லட்சியமே ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அவளுடைய கனவுகளுக்காக நாங்களும் காயங்களைப் பொருட்படுத்துவதில்லை. அவளுடைய கனவை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. நாள்தோறும் காலை 5 முதல் 7 மணி வரை ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறாள். பள்ளிப் படிப்பிலும் முதலிடம் என்பதால் சாதனாவின் பள்ளியிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சாதனாவின் வெற்றிக்கு காரணம் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் சங்கர், பரமானந்தன். அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...