""குடிப் பழக்கத்திற்கு ஆளான எவரையும் இனி, குடிகாரன், நம்ப முடியாதவன், எதற்கும் லாயக்கில்லாதவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்! ஜுரமோ, அல்லது வேறு ஏதாவது நோயோ ஒருவரைத் தாக்கினால் நாம் அந்த நபரை மதிக்காமல் இருப்போமா? நோய்க்கு மருந்தளித்து அவரைத் தேற்றுவோம்...அல்லவா? அது போல குடிப் பழக்கமும் ஒரு நோய்தான்.ஒரு நோயாளிக்கு எப்படி ஆறுதல் அரவணைப்பு, சிகிச்சை எல்லாம் தேவையோ அப்படித்தான் நாம் குடி நோயாளியையும் பார்க்க வேண்டும்'' அது ஒரு நோய். மனோதத்துவ, மருத்துவ சிகிச்சைக்குக் கட்டுப்படும் நோய்! குடும்பத்தினரின் உதவியுடன் சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்தக் குடிநோயிலிருந்து விடுபடலாம். அதற்கு வழிமுறைகள் உள்ளது. சிறிது குடித்தால்தான் என்ன...? என்று விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம், அறுக்க முடியாத இரும்புச் சங்கிலியாக ஆகிவிடுகிறது. குடி நோயாளி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு விட்டால் எளிதில் இந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம். மொத்தம் மூன்று நிலைகளாக இந்நோயைப் பிரித்திருக்கிறோம். ஆரம்ப நிலை, இதில் மதுவின் தேவை அதிகரிக்கும், இரண்டாவது நிலை, மறதி நிலை, போதையில் செய்தது நினைவிலிருந்து அகன்று விடுவது, மூன்றாவது நிலை, தீவிர நிலை, இதில் உடல், மனம், மற்றும் சமூக ரீதியில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.