ஆண்டுதோறும் சென்னையில் டிசம்பரில் இரும்பு மனிதன் போட்டி சில தன்னார்வ அமைப்புகளால் நடத்தப்படுகிறது. 3.9 கி.மீ நீச்சல், 180 கி.மீ. சைக்கிள், 42.2 கி.மீ ஓட்டம் இவற்றை தொடர்ச்சியாக ஆண்கள் 20 மணி நேரத்திலும், பெண்கள் 22 மணி நேரத்திலும் கடக்க வேண்டும் என்பதே போட்டியின் விதி. மேற்கண்ட தொலைவுகளை 20.30 மணி நேரத்தில் கடந்து பதக்கம் பெற்ற முதல் பெண் ஈஸ்வரி.
அதிகாலை பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரில் பணி, தொழில் என பல்வேறு தேவைகள் நிமித்தமாக பேருந்து, ரயிலை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் இளம்பெண்கள், குடும்பத் தலைவிகளுக்கு மத்தியில் உடல் ஆரோக்கியத்துக்காக ஓடிக்கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் பெயர் ஈஸ்வரி, 36 வயது நிரம்பிய, இரு குழந்தைகளுக்குத் தாயான, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் குடும்பத்தலைவி.
இத்தனைக்கும் இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டிலோ உடற்பயிற்சியிலோ ஈடுபட்டவரும் கிடையாது. இதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்பதற்கு இவர் சொல்லும் கதை சுவாரசியமானது. இவரது எட்டு வயது மகன் கிருஷ்ணாவுக்கு சுவாசப் பிரச்னை இருந்திருக்கிறது. அதற்காக பலமுறை மருத்துவமனையில் இரவுகளைக் கழித்திருக்கிறார்.
தொடர் சிகிச்சையும், தீவிர உணவுக் கட்டுப்பாட்டையும் பரிந்துரைத்தார் மருத்துவர். ஆனால் ஈஸ்வரியோ மாற்று வழியை யோசித்துள்ளார். கிருஷ்ணாவை முதலில் ஸ்கேட்டிங், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினார். ஒருமுறை நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணாவை சற்று வேகமாக நீந்துமாறு ஈஸ்வரி கூறியிருக்கிறார். நீங்கள் வந்து நீந்தி பாருங்கள், அப்பொழுது தெரியும் என்னுடைய கஷ்டம் என்ன என்று மகன் கூறியிருக்கிறார். தனது மகனுக்கு தானே நல்லதொரு முன்னுதாரணமாக இருக்க விரும்பிய ஈஸ்வரி நீச்சல் குளத்தில் குதித்தபோது அவருடைய எடை 75 கிலோ. இத்தனைக்கும் பள்ளி, கல்லூரிக் காலங்களில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் பெரிதாக
ஆர்வமில்லாத ஈஸ்வரி, மகனுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு தானும் நீச்சல், ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் தனது தம்பி ராமநாதனின் அறிவுரையின் பேரில் இரும்பு மனிதன் போட்டிக்கான பயிற்சிக்காக வேளச்சேரியில் உள்ள வைப்பிரண்ட் குழுவில் இணைந்துள்ளார். குடும்பத் தலைவியான ஈஸ்வரியை அனைவரும் உற்சாகமாக வரவேற்றதோடு மட்டுமன்றி நீச்சல், சைக்கிள், ஓட்டப் பயிற்சியில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தினர்.
போட்டிக்கு இரு நாள்கள் முன்னதாக சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காலில் சுமார் 1 செமீ ஆழத்துக்கு காயத்தை ஏற்படுத்திக்கொண்ட ஈஸ்வரியை போட்டியிலிருந்து விலகுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவரிடம் சரி என்று தலையசைத்துவிட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டியில் கலந்துகொண்ட ஈஸ்வரியின் கழுத்தில் இரும்பு மனிதனுக்கான பதக்கம் மின்னுகிறது. 22 மணி நேரத்துக்குள் கடக்க வேண்டிய மொத்த பந்தய தூரத்தை 20.30 மணி நேரத்தில் கடந்த ஈஸ்வரிக்கு வெளிநாடுகளில் நடைபெறும் இரும்பு மனிதன் போட்டியில் ஒருமுறையேனும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
உடலுக்கும், மனதுக்கும் பெரும் சவாலை தரக்கூடிய இரும்பு மனிதன் போட்டியில் கலந்துகொள்ள இடைவிடாத கடுமையான பயிற்சி தேவை. குடும்பம், வேலை என பல பொறுப்புகளுக்கு இடையே இதை எப்படி சாதித்தீர்கள் என்று ஈஸ்வரியிடம் கேட்டபோது, டி.வியில் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும்போது, காய்கறி நறுக்கிக் கொண்டே, செல்போனில் பெற்றோரிடம் பேசிக்கொண்டு, மடியில் இருக்கும் குழந்தைக்கு பாலூட்டுவது பெண்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்கிறார். தற்போது 61 கிலோவாக உடல் எடையைக் குறைத்துக்கொண்ட முதல் இரும்புப் பெண் ஈஸ்வரி. தொடர் உடற்பயிற்சியால் சுவாசப் பிரச்சினையிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த கிருஷ்ணா 8 வயதில் டிரையத்லான் போட்டியில் கலந்துகொண்ட முதல் சிறுவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


