மீண்டும் மீரா நாயர்
உகாண்டா நாட்டின் கம்பாலா நகரத்தை தனது இரண்டாவது தாயகமாக கொண்டுள்ள மீராநாயர் "" குயின் ஆப் காத்வே''


உகாண்டா நாட்டின் கம்பாலா நகரத்தை தனது இரண்டாவது தாயகமாக கொண்டுள்ள மீராநாயர் "" குயின் ஆப் காத்வே'' திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைகிறார். இந்த முறை சர்வதேச திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியுடன் இணைந்து ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த இளம்மேதை செஸ் சாம்பியனான பியோனா முடஸி என்ற சிறுமியை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார். தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பாராட்டுகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வரும் மீரா நாயருடன் ஒரு சந்திப்பு.
ஆவணப் படங்களிலிருந்து கமர்சியல் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி தோன்றியது?
துவக்கத்தில் நான் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஒடிசாவில் புவனேஷ்வரில் என்னுடைய பெற்றோர்களுடன் வளர்ந்த போது சுற்றிலும் இருந்த கோயில்கள், திருவிழாக்கள், இந்திய புராண கதைகளில் இருந்த ஆச்சரியமான சம்பவங்கள் என்னை கவர்ந்தன. கோயில் படிகளில் அமர்ந்து மனதில் தோன்றுவதை எழுதுவேன். அதுதான் பின்னாளில் எனக்கு அஸ்திவாரமாக அமைந்தது என்று கூட சொல்லலாம். சிம்லாவில் லோரிடா கான்வென்ட்டில் படித்தபோது நாடகங்களில் ஆர்வம் ஏற்பட்டது. என் உயரத்திற்கேற்ப ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஆண் வேடமேற்று நடிப்பேன். பின்னர் நமது கலாசாரத்தை விளக்கும் பாதல் சர்காரின் வீதி நாடகங்களில் நடித்தது ஆவண படங்களிலிருந்து கமர்ஷியல் படங்களை எடுக்கத் தூண்டியது.
சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று எப்படி முடிவெடுத்தீர்கள்?
1970-ஆம் ஆண்டு புதுடெல்லி ஓடியன் தியேட்டரில் "லவ் ஸ்டோரி' திரைப்படத்தை பார்த்தபோது எனக்கு 18 வயது. வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியபோது ரெயான் ஓ நீல் படித்த ஹார்வார்ட் யூனிவர்சிட்டியில் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். வெளிநாட்டில் படிப்பதற்காக விண்ணப்பித்தபோது கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடியில் முழு ஸ்காலர்ஷிப்புடன் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் ஹார்வார்ட் யூனிவர்சிடியை தேர்ந்தெடுத்தேன். அங்கு சென்றபோது வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்தது. படித்தோமா, கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு ஊர் திரும்பினோமா என்று நினைக்காமல் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது தான் சினிமாவைப் பற்றிய சிந்தனை எழுந்தது. 70 களின் இறுதியிலும் 80களின் துவக்கத்திலும் மொபைல் கேமரா மூலம் ஆவணப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். பொருளாதார ரீதியாக இதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியாது என்று தெரிந்தாலும், மக்களின் வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம் குறித்து அறிய முடிந்தது.
இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீண்டீர்கள்? இதற்காக வருத்தப்பட்டதுண்டா?
ஒரு திருப்புமுனையாக 8 மில்லியன் டாலர் தயாரிப்பு ஒன்று கிடைத்தது. "காம சூத்ரா' இதற்காக நாங்கள் அமைத்த திரைக்கதையே வேறு. சுருக்கம் காரணமாக படமாக்கியதே வேறு. என்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொளுத்தி விடலாமா என்று கூட தோன்றியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நாள்தோறும் காலையில் வெள்ளை உடையணிந்த ஒரு குரூப் ஓர் இடத்தில் சந்திக்கும் உண்மை சம்பவத்தை வைத்து "தி லாஃபிங் கிளப் ஆப் இந்தியா' என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். 1980- ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் "இந்தியன் கேபரே' என்ற ஆவணப் படத்தை எடுத்து வெளியிட்டபோது பெரும் பிரச்னைக்குரிய படமாக கருதப்பட்டது. இதன்பின்னரே நேரடியாக திரைப்படங்களை தயாரிக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். என்னுடைய நண்பர் சோனி தாராப்பூர்வாலாவுடன் இணைந்து "சலாம் பாம்பே' (1988) படத்தை தயாரித்தேன். இது ஒரு ஐந்தாண்டுகால முயற்சியாகும். நாணா படேகர், ரகுபீர் யாதவ் ஆகியோருக்கும் முதல்படம். கூடவே மும்பை தெருக்களில் இருந்த சிறுவர்களையே வைத்து தயாரிக்கப்பட்டதாகும்.
தொடர்ந்து இந்திய திருமணங்களில் நடக்கும் ஆடம்பரங்களை வைத்து "மான்சூன் வெட்டிங்' படத்தை தயாரித்தபோது மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்புக்கு தேவையான உடைகள், மற்ற பொருட்கள் அனைத்தையும் நண்பர்கள் கொடுத்து உதவினார்கள். படப்பிடிப்பு முடியும் வரை அனைவருக்கும் என் வீட்டில் அம்மாதான் சமைத்து போடுவார். இன்றும் அந்த படத்தில் என்னுடன் உதவிய கலைஞர்கள் கூறுவதுண்டு "மீரா நாயருடன் வேலை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதைவிட அவரது அம்மாவின் சமையல் ரொம்பவும் பிடிக்கும்.'
"மிஸிஸிப்பி மசாலா' படத்தில் சந்தித்த பிரச்னைகள்?
"மிஸ்ஸிஸிப்பி மசாலா' (1991) உகாண்டாவில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதாகும். உள்ளுர் மக்கள் தொகையுடன் நிறவெறிபேதமின்றி ஆப்ரிக்கர்களும் ஆசியர்களும் ஒன்றிணைந்து வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் உருவானதுதான் "மிஸ்ஸிஸிப்பி மசாலா' இதற்கு மூன்று சர்வதேச விருதுகள் கிடைத்தாலும், என் சமூகத்தினரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியதாயிற்று.
என்னை சந்தித்த இந்திய தந்தைகள், "" எங்களுடைய பெண்கள் ஆப்ரிக்கர்களை மணந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறாயா?'' என்று கோபத்துடன் கேட்டனர். வித்தியாசமான உலகத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இதன் அடிப்படையில் "வேனிட்டி ஃபேர்' ( 2004) மற்றும் "அமெரிக்கா' ( 2009) ஆகிய படங்களை தயாரித்தேன்.
சர்வதேச தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியுடன் இணைந்தது குறித்து சொல்லுங்கள்?
என் விருப்பப்படி எந்த குறிக்கீடுகளும் இல்லாமல் ஒரு கூட்டுத் தயாரிப்பு பணியை ஏற்றுக் கொண்டது சந்தோஷமாக இருக்கிறது. டிஸ்னி நிறுவனத்தினர் பல கருத்துக்களை சொன்னாலும் பெரும்பாலானவற்றை நிராகரித்துவிட்டேன். என்னுடைய கருத்துப்படி - விருப்பப்படி படத்தை தயாரிக்க விரும்பியதால் அவர்களது கருத்து நல்லவைகளாக இருந்தாலும் ஏற்க மறுத்துவிட்டேன். படிப்பறிவில்லாத இளம்மேதையான ஆப்ரிக்க சிறுமி பியோனா முடஸி, சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியனாக வெற்றி பெற்றதை அடிப்படையாக வைத்து " குயின் ஆப் காத்வே' படத்தை தயாரிக்கும் ஐடியா, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்து யோசித்தபோது உருவானதாகும். என்னுடைய திரைப்படங்களில் எப்போதுமே உறுதியான கருத்துக்களை கூறவே விரும்புகிறேன்.
இந்த உலகை மாற்றும் சக்தி சினிமாவுக்கு இருக்கிறதா?
நிச்சயமாக. இந்த நம்பிக்கைதான் மேலும் படங்களை தயாரிக்க ஊக்கமளிக்கிறது. " சலாம் பாம்பே' படத்திற்குப் பின்னர் தெருவில் திரியும் சிறுவர்கள் நலனுக்காக "சலாம் பாலக் டிரஸ்ட்' உருவாயிற்று. கம்பாலாவில், மைஷா பிலிம் லேப்'' அமைக்கப்பட்டு சினிமா பற்றி மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது.
என்னுடைய படங்களைப் பார்த்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதாக பலர் என்னிடம் கூறியுள்ளனர். திரைப்படங்கள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...