ஆனந்தத்தை அனுபவிப்பவர்கள்!
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை, நீங்கள் எதை ஆனந்தமாகக் கருதுகிறீர்கள், எந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையின் திசையைத் திருப்பிவிட்டது''


வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை, நீங்கள் எதை ஆனந்தமாகக் கருதுகிறீர்கள், எந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்க்கையின் திசையைத் திருப்பிவிட்டது'' என்று, விருந்தாளிகளை வரவேற்று, உற்சாகப்படுத்தி அவர்களிடமிருந்து உண்மைச் செய்திகளை வரவழைக்கும் உத்தியில் கைதேர்ந்தவர் எவிஸ் என்ற ஏ.விசுவநாதன். கூடவே அவருக்குக் கைகொடுக்க அவர் மனைவி வாணி. அவர் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு அடையாறு காந்தி நகரிலுள்ள ஒடிஸி புத்தகக் கடை மாடியில் நடத்தும் "பிளிஸ் காட்சர்ஸ்' என்ற நிகழ்ச்சியில் அக்டோபர் மாதம் உரையாடியவர், வி.ஆர். தேவிகா. யார் இந்த தேவிகா..?
பதினெட்டு வயதில் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்தவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. சேர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதற்காக அடையாறிலிருந்து பல்கலைக்கழகம் செல்ல பஸ்ஸில் அமர்ந்தவர், வயது முதிர்ந்த ஒரு பெண்மணி பைகளுடன் ஏறவே, தம் இடத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு, பக்கத்தில் நின்றுகொண்டு பயணம் செய்தார். வயது முதிர்ந்த பெண்மணிக்கு அருகே அமர்ந்திருந்த பயணி தம் இருக்கையை விட்டு எழுந்ததும், தேவிகா அவர் அருகே உட்கார்ந்துகொண்டார். வயதான பெண்மணி தேவிகாவை "எங்கே போகிறாய், என்ன செய்கிறாய்?' என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார். தேவிகாவும் பொறுமையுடன் அவருக்கு பதில் சொன்னாராம். இங்கேதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்ந்தது.
"நீ ஏன் என்னுடைய மழலையர் பள்ளிக்கூடத்துக்கு வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரக்கூடாது?' என்று கேட்டார். ஆகா, தாராளமாக என்று ஒப்புக்கொண்டு முகவரியை வாங்கிக் கொண்டார். மறு நாள் அந்த நர்சரி பள்ளிக்குப் போனபோது, குழந்தைகளை அழ, அழ, பெற்றோர் விட்டுவிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருந்தார். இந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்துவிட்டுப் போக வேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டார். குழந்தைகளுடன் பழகுவதும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. இவருடைய திறமையைப் பார்த்து மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் வேலைக்கு அழைத்தார்கள். அங்கே சேர்ந்தார். ஆனால் ஏராளமான நிகழ்ச்சிகளை வெளியே செய்ய வேண்டி வந்ததால், தன் ஆசிரியை பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாகம் இவரை விடவில்லை. அன்றைய கரஸ்பான்டென்ட் பி.சி. சேகர், இவருடைய பாட வகுப்பு அட்டவணையை மாற்றி அமைத்து, பிற்பகல் இரண்டரை மணிக்கு மேல் இவர் வெளியே செல்ல அனுமதி அளித்தார். எந்தப் பள்ளி இந்த மாதிரி ஓர் ஆசிரியைக்கு சாதகமாக நடந்து கொள்ளும்..?
தேவிகாவைப் பொருத்தவரை கல்வியும், கலைகளும் ஒன்றாக இணைந்தவை. கல்வியில் கலையை இழைத்து வகுப்பு எடுப்பதை விட்டுவிட்டு, அதை எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடியாக வைத்திருப்பது தவறு என்று சொல்பவர்.
அந்தப் பள்ளியில் நடனக் கலைஞர்கள் சாந்தா-வி.பி. தனஞ்சயன் தம்பதியின் மகனும் படித்துக் கொண்டிருந்தான். இசையிலும், நடனத்திலும் ஆர்வம் உள்ள தேவிகா, தானும் பரத நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தார். அரங்கேற்றம் செய்ய வேண்டும், ஆட வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான். தனஞ்சயன் தம்பதியைச் சென்று பார்த்தார் தேவிகா. அவர்களிடம் பரத நாட்டியம் கற்றுக்கொண்டார்.
அந்தக் குழுவிலேயே தேவிகாதான் ஜூனியர் மாணவி. மாணவிகளை வைத்து கர்நாடக இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தினார். ஒவ்வொரு நாளும் விருந்தாளிகள் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தம் பங்கைச் செய்தார். ஒரு நாள் இந்தி நடிகர்
சசிகபூர் வந்தாராம். அன்றைக்கே அவரைப் பார்த்து வியந்த தேவிகா, மறு நாளும் அவர் நிகழ்ச்சிக்கு வந்த போது, அசந்து போய்விட்டாராம். அதே போன்று ஒரு நாள் கவாஸ்கர். ஒரு நாள் இன்னொரு பிரபலம். எல்லோரும் தேவிகாவைச் சந்தித்து உரையாடினர். சசி கபூர் வந்த அன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சயீத் நக்வி வந்திருந்தார். அவர் தேவிகாவிடம், "இந்த மாதிரி இசை நிகழ்ச்சிகள் பற்றி எங்களுக்கு கட்டுரை எழுத முடியுமா?' என்றார். தேவிகாவுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. கட்டுரையை எழுதிக் கொடுத்துவிட்டார். மறு நாள் அது பிரசுரமாகிவிட்டது. செய்தி ஆசிரியராக இருந்த மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட சி.பி. சேஷாத்ரி தேவிகாவை அழைத்து, "விமர்சனம் செய்வது போல் இல்லாமல், நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாகவே ப்ரிவியூ மாதிரி எழுத முடியுமா?' என்று கேட்டார். தயங்கவே இல்லை இவர். துளிகூட பயம் இல்லாமல், செம்மங்குடி சாரிடம் போய்," நீங்கள் அடுத்த கச்சேரி எங்கே செய்யப்போகிறீர்கள், என்ன பாட்டெல்லாம் பாடப் போகிறீர்கள்?' என்று கேட்டார். செம்மங்குடியும் பதில்கள் சொல்ல, கட்டுரை வெளியாயிற்று. அடுத்து எம்.டி. ராமநாதனைப் பேட்டி கண்டார். "என்ன பாடட்டும், சொல்லு' என்றாராம் எம்.டி.ஆர். இவர் சிறிதும் பயமின்றி, "தோடிராகம் பாடுங்கள்' என்றார். எம்.டி.ஆர். அரைமணி நேரம் தோடி பாடினார்.
தேவிகா ஆரம்பம் முதலே காந்தியாலும், அவரது சத்திய சோதனைகளாலும் கவரப்பட்டவர். சர்க்காவில் காதி நூல் நூற்கக் கற்றுக்கொண்டார். பள்ளிகளில் நல்ல வரவேற்பு இருந்ததால், அங்கெல்லாம் காந்தியச் சிந்தனைகளைச் சொற்பொழிவுகளாகச் செய்தார். இவர் பி.எச்.டி. பட்டம் பெற்றது காந்திய நெறிகள் பற்றித்தான்.
கலை, கல்வி, கலாசாரத் துறைகளில் இன்று இவர் நன்கு அறியப்பட்டவர். மேலும், பத்திரிகையாளர். கல்வியாளர். ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகம், தெருக்கூத்து போன்ற பல தமிழ்க் கலை மூலங்களை விவரமாக எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்துவதில் வல்லவர்.
"அசீமா அறக்கட்டளை'யின் நிறுவனர். குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் வல்லுநர். இவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.
இவருக்கு அமெரிக்க மேரிலாந்து ஆளுநர் "கௌரவக் குடிமகள்' என்ற நிலையைக் கொடுத்திருக்கிறார். பிரிட்டிஷ் கௌன்சில் "சார்ல்ஸ் வேல்ஸ் விருது' அளித்திருக்கிறது. ஜெர்மன் "கெதே இன்ஸ்டிட்யூட் விருது', அலியான்ஸ் பிராங்கைஸ் விருது, ஐசிசிஆர் பெலோஷிப் எல்லாம் இவருக்குக் கிடைத்திருக்கின்றன. ரோடரியும், லயன்சும் இவரைப் பாராட்டியிருக்கின்றன.
"வாழ்க்கையில் திருப்பம் எந்த விதத்தில் வரும் என்று கூற முடியாது. ஆனால் வந்தால் ஆனந்தமாக அதை ஏற்று அனுபவிக்கக் கற்றுக்கொள்வதுதான் ஆனந்த வாழ்க்கை' என்கிறார் தேவிகா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...