வீட்டில் தோட்டம் அமைக்க இடம் இல்லாவிட்டால் என்ன? மொட்டை மாடி இருக்கிறதே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் மக்களிடையே பெருகியிருக்கிறது. அந்த வகையில், வீட்டின் கட்டுமான பணியின்போதே மாடிதோட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பிரத்யேகமாக செய்து மொட்டை மாடி தரைத்தளம் முழுவதையும் புல்தரையாகவும், பூங்காவாகவும் அமைத்து பலவகையான பறவைகள் இளைப்பாறத் தேடி வரும் பூந்தோட்டமாகவே மாற்றியிருக்கிறார் புவியரசி பாலமுருகன். இவர், தோட்டக் கலையில் மட்டுமல்லாமல், ஓவியக்கலையிலும், சமையற்கலையிலும் கை தேர்ந்தவர். சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச்
சந்தித்தோம்:
"எங்களுக்கு பூர்வீகம் மதுரை. தந்தையின் வேலை நிமித்தமாக நான் சிறுமியாக இருந்தபோதே சென்னை வந்துவிட்டோம். எனக்கு சிறுவயதிலிருந்தே செடி, கொடிகளுடன் ஓர் ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை தொட்டியில் ஒரு வேர்க்கடலையை நட்டு வளர்த்தேன். அந்தச் செடியில் இருந்து கொத்துகொத்தான வேர்க்கடலை கிடைத்தது. ஒரு விதையிலிருந்து இவ்வளவு கடலைகளா? என்று ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் அதிகரித்தது. இதனால் தோட்டத்துடன் கூடிய வீட்டில் வசிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அது, திருமணத்திற்குப் பிறகுதான் நனவாகியிருக்கு. எனது கணவர் பாலமுருகனுக்கும் சொந்த ஊர் மதுரைதான். அவரது அப்பா, கே.ஆர். நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக இருந்து எம்.பி. ஆனவர். இதனால் அவர்களும் சென்னைவாசிகளாகிப் போனார்கள்.
சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்று முடிவு செய்ததுமே, எனக்கான கற்பனை வீடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நானே வரைந்து வைத்திருந்த ஒரு வரைபடத்தை என் கணவரிடம் கொடுத்தேன்.
வீடு கட்ட தொடங்கியதும் மாடித்தோட்டம் உருவாக்குவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்தோம். அதாவது, மேற்கூரை அமைக்கும்போது 9 அடுக்குகளாக சென்ட்ரிங் கம்பிகளை பயன்படுத்தி மொட்டை மாடியை வலுப்படுத்தினோம். முறையாக வாட்டர் ரூபிங், செய்தோம்.
மாடி தரைத்தளம் முழுவதையும் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ஏற்றதாக மாற்றினாலும் செடிகளுக்கு ஊற்றும் தண்ணி கட்டடத்தின் சுவர்களை பாதிக்காத அளவிற்கு துளைகளுடன் கூடிய தரை விரிப்புகளை ( டிரைன் செல்) பரப்பினோம். அதிலிருக்கும் துளைகள் வழியாக மண்ணோ, தண்ணீரோ தரைத்தாளத்துக்கு செல்லாதவாறு அதன் மீது ஜியோ சீட்டுகளை விரித்தோம். இப்படி செய்ததால் தரைத்தளத்துக்கு இடையே இடைவெளி உருவானது மாடியின் நடுப்பகுதிமுழுவதையும் புற்களை வளர்த்து இயற்கையாகவே பூங்காக்களில் இருப்பது போன்று புல்வெளியாக உருவாக்கினோம்.
அதன்பின், சப்போட்டா, கொய்யா, கொடி லெமன், வாழை, மாதுளை, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, அத்தி என பழவகைகளும், காய்கறிகளில் கத்தரி, வெண்டை, புடலை, கொத்துவரங்காய், பாகற்காய், பீன்ஸ், தக்காளி, மிளகாய், பீர்க்கன், காலிஃபிளவர் போன்றவையும், கீரைகளில் சிறுகீரை, முளைக்கீரை, அரைக்கீரை, வல்லாரை, பாலக்கும் உண்டு. மூலிகைகளில் கற்பூரவல்லி, தும்பை, நொச்சி, பிரண்டை, நித்திய கல்யாணி, சிறுகுறிஞ்சான், லெமன் கிராஸ், துளசி, இஞ்சி, வெற்றிலை, வெட்டிவேர், பேய்விரட்டி, போன்ற மூலிகையும், கட்டிப்போட்டால் குட்டிப்போடும் மருத்துவ குணமுள்ள ரணகல்லி போன்றவையும் உண்டு.
இவற்றில் இருந்து கிடைக்கும் கனியையும், காய்கறிகளையும், கீரைகளையும் சமைத்து உண்ணும்போது கிடைக்கின்ற மன நிறைவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
தோட்டத்திற்கு மண்ணை பயன்படுத்தாமல் 80 சதவீதம் தேங்காய் நார்க்கழிவுகளை பயன்படுத்தினோம். இதனால் செடியில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். அதிக அளவு வெயில் வாட்டிய இந்த கோடை காலத்தில் கூட இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் நீர் ஊற்றினோம். அந்த அளவிற்கு தேங்காய் நாருக்கு ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை உண்டு. அதன் எடையும் குறைவாகவே இருக்கும். மேலும், மண்ணில் செடி வளர்த்தால் கோடையில் விரைவாக நீரை உறிஞ்சிவிடும். இதனால் மண் இறுகி செடியும் வாடிவிடும். இதனால், தோட்டத்திற்கு தேவையான உரங்களையும், தேங்காய் நார்க்கழிவுகளையும் வீட்டிலேயே பதப்படுத்தி தயார் செய்துவிடுகிறேன்.
உதாரணமாக, தென்னை மரத்தில் இருந்து விழும் மட்டைகளை சேகரித்து சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு டிரம்மில் போட்டு நீர் ஊற்றி வைத்தால். சில மாதங்களில் தென்னை மட்டை நன்றாக மக்கிவிடும். அதனுடன் உரம் கலந்து செடிகளுக்கு பயன்படுத்தலாம். மேலும் செடிகள் நன்கு வளர்வதற்கு அரிசி கழுவிய நீர், பாத்திரம் துலக்கிய நீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றிவிடுவோம். மீன் கழுவிய நீரை கூட வீணாக்காமல் ஒருநாள் வைத்திருந்து, மறுநாள் பயன்படுத்தலாம். பயன்படுத்திய தேயிலை தூளை ரோஜா செடிகளுக்கு உரமாக பயன்படுத்தினால் பூக்கள் அதிகமாக பூக்கும்.
வீட்டு கழிவுகள் எதையும் வீண் செய்வதில்லை, பணம் கொடுத்து உரமும் வாங்குவதில்லை. வீட்டின் சமையலறை கழிவுகள், காய்கறி கழிவுகள், பழங்களின் தோல் போன்றவற்றை ஒரு டிரம்மில் போட்டு வைத்து விடுவோம். ஒரு மாதத்தில் அவை மக்கி உரமாக மாறிவிடும். அதனைத்தான் செடிகளுக்கு பயன்படுத்துகிறோம்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், உரம் போடுவதும் மட்டுமே முக்கியமல்ல. அவை நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டும். அதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் செடிகளின் வளர்ச்சி தடைப்பட்டு பாழாகிவிடும்.
வெள்ளை, சிவப்பு, கறுப்பு, பூச்சிகள்தான் செடிகளை அதிகமாக தாக்கும். அதற்கு வேப்பம் புண்ணாக்கை நீரில் ஊறவைத்து தெளித்தால் பூச்சிகள் செடிகளை அண்டாது. சாம்பலை செடிகளின் மீது தூவினால் கறுப்பு பூச்சுகள் ஒருபோதும் வராது.
15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்ச கவ்யத்தை நீரில் கரைத்து செடிகளின் மீது தெளித்து விடுவேன். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையிலேயே செடிகளைப் பராமரிப்பதால் காய்கறிகள், கீரைகள், பழங்கள் மிகவும் சுவையாக கிடைக்கிறது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
குழந்தைகளையும் மாடித்தோட்ட வேலைகளில் ஈடுபடுத்துகிறோம். அவர்களும் ஈடுபாட்டுடன் பராமரிக்கிறார்கள் மாடித்தோட்டம் அமைப்பது உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இதனால் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
இதனால் வரும்காலத்தில், எங்களது பகுதியில் உள்ள வீடுகளிலிருந்தும் மக்கும் கழிவுகளை வாங்கி சேகரித்து பெரிய அளவில் இயற்கை உரம் தயாரித்து மற்றவருக்கும் அளிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது'' என்கிறார் புவியரசி பாலமுருகன்.
- ஸ்ரீதேவி குமரேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

