நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருநங்கைகளும் மாடலாகலாம்! 

இந்த உலகத்திலேயே பெஸ்ட் புகைப்பட மாடல்கள் என்றால் அது திருநங்கைகள்தான். என்னதான் மாடல்களாக பெண்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தாலும்.

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 4:29 am

ஸ்ரீதேவி குமரேசன

இந்த உலகத்திலேயே பெஸ்ட் புகைப்பட மாடல்கள் என்றால் அது திருநங்கைகள்தான். என்னதான் மாடல்களாக பெண்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தாலும். ஒரு திருநங்கையிடம் இயற்கையாக இருக்கும் நளினத்திற்கு முன்பு அவையெல்லாம் தோற்றுவிடும். கடவுள் இயற்கையாகவே திருநங்கைகளுக்கு மட்டும்தான் இந்த நளினமும், பாவமும் அதிகமாக கொடுத்திருக்கிறார். எனவே, ஒரு ஆரம்பகட்ட போட்டோகிராபர்
தனது புகைப்படத்திற்கு பெரிய அளவில் மாடலைத் தேடி செல்லாமல், அவரது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள திருநங்கையை அழைத்து அவரிடம் உள்ள எக்ஸ்பிரஷன், எக்போஸர், பாடிலாங்வேஜ் வைத்து போட்டோ சூட் எடுத்து பழகிக்கொண்டால் அவர் நிச்சயம் வெற்றியாளனாக மாற முடியும்' என்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன். இவர் திருநங்கைகளை மாடல்களாக வைத்து ஒரு புகைப்பட கண்காட்சியை உருவாக்கி வருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"" இன்று உலக அளவில் எடுத்துக்கொண்டால் திருநங்கைகள் 2 சதவீதம் பேர் வாழ்கின்றனர். அதில் சுமார் 0.5 சதவீதம் பேர் உலக அளவில் மாடலிங் துறையில் சிறந்து விளங்குகிறார்கள். அதில் ராம்ப் வாக், பிராண்டுடன் இணைந்து பேஷன் ஷோ நடத்துவது, பேஷன் கோரியோகிராபர், காஸ்டியூம் டிசைனர், மேக் - அப் ஆர்டிஸ்ட் என சிறந்து விளங்குகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் இருக்கிறார்கள். அதில் உத்திரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது, இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது. மூன்றாவது இடத்தில் சென்னை இருக்கிறது. அதன்பிறகு மும்பை மற்ற மாநிலங்கள் இருக்கின்றன. மும்பை நகரத்தில் திருநங்கைகள் தனி அந்தஸ்துடன் வாழ்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரைதான் திருநங்கைகளை காட்சிப் பொருளாகவும், தப்பானவர்களாகவும், விலைமாதுவாகவும் நினைக்கிறார்கள். அவர்களை கண்டாலே பயப்படுகிறார்கள். அவர்கள் கைதட்டிக் கொண்டு வரும்போது எதையோ பறிக்க வருகிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் கைத்தட்டுவது எதற்காக என்றால் நானும் இந்த சமூதாயத்தில் உன்னை போன்றுதான் இருக்கிறேன். என்னையும் கவனியுங்கள் என்பதற்காகத்தான் அந்த ஒலியை எழுப்புகிறார்கள். ஆனால் நாம்தான் அவர்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அவர்களும் மற்றவர்களைப் போன்று ஏதாவது வேலை செய்து மானத்தோடு பிழைக்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் விடுவதில்லை. 
என் நண்பர் ஒருவர் திருநங்கைகளை வைத்து "அரவாணிகள் உலகத்து அதிசயம்' என்னும் நூலினை எழுதியிருந்தார். அந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான் திருநங்கைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தோன்றியது. நான் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று ஆராய்ந்ததில் உலகளவில் சிறந்த புகைப்படக்காரர்களாக உள்ள பலர் திருநங்கைகளை மாடலாக வைத்துத்தான் தங்கள் பணியை தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்தேன். அதுபோன்று, இங்கே நமது சென்னையில் உள்ள திருநங்கைகளும் மாடலாக்க முடியும் என்பதை நிரூபிக்கவும், இங்குள்ள சிறந்த புகைப்படக்காரர்கள் அவர்களை தொடர்ந்து பயன்படுத்தி அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டும் என்றும்தான் திருநங்கைகளை மாடலாக வைத்து புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
இதற்காக சென்னையில் ஜெயா - சுதா என இருவர் திருநங்கைகளுக்காக நடத்தி வரும் அமைப்பை அணுகி பேசினேன். ஆரம்பத்தில் பயந்தார்கள். இதெல்லாம் எங்களுக்கு சரியாக வராது என்றார்கள். அதன்பிறகு ஒவ்வொன்றாக அவர்களுக்கு விளக்கி கூறியதும் சரி என்றார்கள். அதன்பிறகு பத்து திருநங்கைகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்காக பத்து கான்சப்ட்டை உருவாக்கினோம். அதில் சிலர் ஏற்கெனவே மாடலிங் துறையில் இருப்பவர்கள். சிலர் கேமரா முன்பு நின்று அறியாதவர்கள்.
உதாரணமாக, "ஸ்ட்ரகிள் பார் ஃப்ரீடம்', ஆணாக பிறக்கும் ஒருவர் தன்னை பெண்ணாக உணரும்போது ஏற்படும் வலிகளும், அதற்காக அவர் சந்திக்கும் பிரச்னைகளையும் சொல்லும் உணர்வு. இதற்காக ஒரு ஆண் சிலையில் இருந்து தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு வெளியே வரும் பெண்ணாக உருவாக்கினோம். அடுத்து நஸ்ரியா என்பவர் பெண்களின் பல முகங்களையும் சொல்லும் "மல்டி ஃபேஸ்' முக பாவனைகளை காண்பித்திருக்கிறார். அடுத்து "ஃபேண்டஸி வெட்டிங்', ஒவ்வொரு திருநங்கைக்குள்ளும் இருக்கும் திருமண ஏக்கம். அடுத்து, என்னதான் தங்களை மருத்துவ உதவி மூலம் முழுமையாக பெண்ணாக மாற்றிக் கொண்டாலும், மற்றவர்களை ஆதரிப்பதில் தாயாக இருந்தாலும் தாய்மை பேறு என்பது அவர்களுக்கு கிட்டாத வரம் அல்லவா, அதனால் பிரஸன்னா என்பவரை தாய்மை பேறுக்காக ஏங்குவது போலவும்.
சரோ என்ற திருநங்கை சாதாரணமாக ஒரு புகைப்படம் கூட எடுக்காதவர். மேக் -அப் என்றால் என்னவென்றே தெரியாத அவரை ஐ அன்ட் ஃபேஷன் மாடலாக
உருவாக்கியிருக்கிறோம். இதுபோன்று பத்து மாடல்களும் பத்துவித எக்பிரஷனை காண்பித்திருக்கின்றனர். 
இந்த போட்டோ ஷூட்டுக்காக வெளிநாட்டில் இருந்து மேக் -அப் ஆர்ட்டிஸ்ட் வரவழைத்தோம். அதுபோன்று, புணேவில் உள்ள சைமா கல்லூரியில் இருந்து மாணவர்கள் சிலர் செட் ஓர்க் எல்லாம் செய்து உதவினார்கள். 
பத்து திருநங்கைகளில் ஒருவர் நமீதா. அவர் இந்திய அளவில் திருநங்கைகளுக்கான அழகுப் போட்டியில் "மிஸ் குவீன்' பட்டத்தை வென்றவர். அவரையும் மாடலாக்கியிருக்கிறோம். அதேசமயம் சரோ என்ற திருநங்கை கேமரா முன்பு இதுவரை நிற்காதவர். அவரையும் மாடலாக்கியிருக்கிறோம். இதன் மூலம் நம்ம ஊர் திருநங்கைகளையும் மாடலாக்க முடியம் என்பதை நிரூபித்திருக்கிறோம்.
இந்த புகைப்படங்கள் வெளியே வந்து இவர்களுக்கு தொடர்ந்து புகைப்படத்துறையில் நல்ல வாய்ப்புகள் வர வேண்டும். அதுபோன்று ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் புகைப்படகாரர்களும், புதிதாக புகைப்படத் துறைக்கு வருபவர்களும் இதுபோன்ற திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும். அப்போதுதான் எங்கள் நோக்கம் வெற்றியடையும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.