தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 2000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணிபுரிந்து, திரைத்துறையில், தனக்கென்று ஓர் அடையாளத்தைக் கொண்டவர் சாந்தி. இவரை, நடன இயக்குநர் சாந்தி என்பதை விட "மெட்டி ஒலி' சாந்தி என்றால்தான் மக்களுக்கு பரிச்சயம். அவர், கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
""என்னுடைய 13-ஆவது வயதில் சினிமாத்துறைக்குள் வந்தேன். தற்போது 26 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய அப்பா திரைத்துறையில் துணை நடிகர்களுக்கான மேனேஜராக இருந்தார். அதனால் சிறுவயதில் ஒருமுறை சூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றார். அப்போது அந்த சூட்டிங்கில் என் தோழிகள் சிலர் நடனமாடுவதை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போதே எனக்கான துறை சினிமாதான் என்பதை முடிவு செய்துவிட்டேன். சினிமாவில் நடனம் ஆட வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. 10 -ஆம் வகுப்பு முடித்ததும், அப்பாவிடம் "நான் சினிமாவுக்குள் வர வேண்டும்' என்றேன். அப்பாவும், அக்காவும் "நீ நன்றாக படிக்க வேண்டும்' என்றனர். பிறகு எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டு சரி என்றனர்.
நடனத்தில் சுசித்ரா மாஸ்டர்தான் எனது முதல் குரு. பின்னர், தாரா மாஸ்டர், சினி பிரகாஷ் மாஸ்டர், தருண் மாஸ்டர், கல்யாண் மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், பிரபு தேவா மாஸ்டர் ஆகியோரிடம் படிப்படியாக டான்ஸ் கற்றுக் கொண்டு அசிஸ்டெண்ட்டாக வேலைப் பார்த்தேன்.
இதற்கிடையில், இந்தியில் வாய்ப்பு வர இந்தியில் பிரபலமாக இருந்த நடன இயக்குநர்களிடம் உதவியாளராக வேலைப் பார்த்தேன். பின்னர், திரைப்படங்களில் குரூப் டான்ஸ் ஆடுவதில் சேர்ந்து ஆடுவேன். நான் உயரமாக இருப்பதால், என்னைப் எப்போதும் பின்னால்தான் நிற்க வைப்பார்கள். உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும். பின்னாடிதானே நிக்கிறேன். சரியாக ஆடலைன்னாலும், யாருக்கு தெரிய போகுது என்று ஒருபோதும் நினைக்க மாட்டேன். டான்ஸ்ன்னு வந்துட்டா சின்சியராக இருப்பேன். என்னுடைய பெஸ்ட்டைதான் எப்போதும் கொடுப்பேன்.
இதை கவனித்த பிரபுதேவா மாஸ்டர்தான் என்னை முதன்முதலில் திரைக்கு முன்னால் கொண்டு வந்து நிற்க வைத்தார். "திருப்பதி ஏழுமலை வெங்கடேசா...' பாடலில் எனக்கு ஒரு தனி பிட் கொடுத்தார். அதில் நன்றாக ஆடினேன். அதிலிருந்து அவருடைய பாடல்களில் எல்லாவற்றிலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும்.
அதுபோன்று பிருந்தா மாஸ்டர். அவருக்கும் நடனத்தில் எனக்கிருக்கும் சின்சியாரிட்டி மிகவும் பிடித்துப்போக, என்னுடைய உயரத்தையும் தாண்டி அவருடைய பாடல்களில் எல்லாம் என்னை முதலில் நிற்க வைத்தார்.
"மின்னலே' படத்தில் "வெண்மதி
வெண்மதியே நில்லு', "ஜெமினி' படத்தில்
"ஓ-போடு...' போன்ற பாடல்களில் எல்லாம் என் நடனத்துக்கு தனித்துவம் கிடைத்தது. வெளியுலகத்திற்கு நான் தெரிய ஆரம்பித்தேன்.
இந்நிலையில், 2002 -இல் "மெட்டி ஓலி' சீரியலின் டைட்டில் பாடலுக்கு ஆடுவதற்காக அழைத்தார்கள். நைட் சூட் என்றார்கள். ஏற்கெனவே, காலையில் இருந்து படத்திற்காக ஆடி களைத்திருந்ததால் நான் தூங்க வேண்டும். வரவில்லை என்றேன். ஆனால், தோழிகள் என்னை விடாமல் தொந்தரவு செய்து அழைத்துச் சென்றார்கள். விருப்பமில்லாமல் சென்றதால், ஏனோதானோ என்று மேக்கப் கூட சரியாக செய்து கொள்ளாமல், கழுத்தில் ஒரு மணி கூட அணிந்து கொள்ளாமல் சென்றேன். அங்கு சென்றதும், மெட்டி ஒலி தொடரின் இயக்குநர் திருமுருகன் சார் என்னைப் பார்த்து, "இவங்க டான்ஸ் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் இவங்களோட ரசிகனும் கூட, இவங்களே இந்த பாடலுக்கு ஆடட்டும்' என்று சொல்லி என்னை முன்னால் நிற்க வைத்துவிட்டார். அதன் பிறகு என் தோழிகள் அவர்கள் அணிந்திருந்த செயின், வளையல் எல்லாம் கொடுத்து என்னை ஆட வைத்தார்கள். அதுதான் "அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து...' என்ற பாடல். அன்று இரவே, அந்தப் பாடல் காட்சி டிவியில் ஒளிபரப்பாக ஒரு வாரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுக்க இருந்தும் எனக்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். வெளியே எங்கே சென்றாலும் ஒரே பாராட்டு மழைதான். ஒவ்வொருத்தரும், என்கிட்ட வந்து "எங்கவீட்டு பொண்ணு மாதிரி இருக்கம்மா' என்பார்கள். இப்படி ரசிகர்களோட அன்பில் திக்குமுக்காடிப் போனேன்னு சொல்லலாம். உதாரணமா சொல்லணும்ன்னா, ஒருமுறை நான் இறந்துட்டுதா, வதந்தி பரவ பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் துக்கம் விசாரிக்க என் வீடு தேடி வந்துட்டாங்க. அந்தளவிற்கு எனக்கு ரசிகர்கள் இருந்தார்கள். இதற்கெல்லாம் திருமுருகன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்.
ஒருமுறை விக்ரம் சார் படத்தின் சூட்டிங். பிருந்தா மாஸ்டர் தான் டான்ஸ் மாஸ்டர். பாடல் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த இடைவெளியில் பல ரசிகர்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பார்த்த விக்ரம் சார், "நாங்க உயிர கொடுத்து பல கெட்டப் போட்டு ரசிகர்களை கவர்ந்தால், நீ அசால்ட்டா ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டு இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறாயே'ன்னு கிண்டல் செய்தார்.
பின்னர், 2004- இல் டான்ஸ் மாஸ்டர் ஆனேன். மணிரத்னம் சாரின் "ஆயுத எழுத்து' படம் தான் எனது முதல்படம். ஆனால், சரத்குமார் சார் நடித்த "கம்பீரம்' படம் முதலில் ரிலீஸ் ஆனது. அதிலிருந்து தொடர்ந்து ஓய்வில்லாமல் 350 படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தேன்.
தமிழில் டான்ஸ் மாஸ்டராக இருந்த அதே சமயத்தில் இந்தியிலும் வாய்ப்பு வர, இந்தியிலும் பிசியாக இருந்தேன். பின்னர், படிப்படியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழியிலும் பிரபல ஹீரோக்களின் படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணி புரிந்துள்ளேன்.
2007- இல் "கந்தசாமி' படம்தான் நான் கடைசியாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியது. அதன் பிறகு எனக்கு திருமணம் ஆகி குடும்பம், குழந்தைகள்ன்னு வந்ததால் 7 ஆண்டுகள் பிரேக் எடுத்துக்கிட்டேன். என்னோடது காதல் திருமணம்தான். என் கணவர் எச்.டி.எப்.சி வங்கி மேனேஜராக இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு "குல தெய்வம்' சீரியல் தொடங்கினபோது, திருமுருகன்
சார், "நீங்க ஒரு கேரக்டர் நடிக்கிறீங்களா' ன்னு கேட்டார். அவரிடம், " எனக்கு டான்ஸ்தான் தெரியும் நான் எப்படி நடிக்கறது. நடிப்பு எல்லாம் எனக்கு வராது சார்' ன்னு சொன்னேன். "இல்ல உங்களால
நிச்சயம் நடிக்க முடியும். நீங்க நடிங்க' ன்னு தைரியம் கொடுத்தார். அதிலிருந்து சீரியலில் நடித்து வருகிறேன். கடந்த வாரம்தான் சீரியல் முடிவடைந்தது.
இதற்கிடையில், சீரியல் தவிர பெரிய திரையிலும் நடிக்க வாய்ப்பு வந்து பல படங்களில் நடித்து வருகிறேன். அதேசமயம் டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறேன்.
தற்போது செல்வா சார் இயக்கத்தில், அரவிந்தசாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லியாக நடித்து வருகிறேன். திரைக்குப் பின்னால் இருந்த வரை டெக்னிக்கல்லாக, மைண்ட் ரீதியாகவும், பிசிக்கலாகவும் உழைப்பு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நிமிடத்தையும், புதுபுதுவிதமாகவும் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் பயம் இல்லாமல் வேலை செய்தேன்.
ஆனால் திரைக்கு முன்னால் நிற்கும்போது, அந்த டென்ஷன் இல்லை. ஆனால், நடிப்பு நன்றாக இருக்க வேண்டுமே என்ற பயம் அதிகமாக இருக்கிறது. முதல் மூன்று மாதம் நடிப்பே வரவில்லை. பின்னர், படிப்படியாக நடிப்பதைக் கற்றுக் கொண்டேன். "குல தெய்வம்' தொடரில் மௌலி சார், வடிவுக்
கரசியம்மா இவர்கள் எல்லாம் பெரிதும் உதவினார்கள்.
80-90 காலகட்டங்களில் சிறுசிறு வேடங்களில் திரையில் தோன்றும் துணை நடிகைகள், குரூப் டான்ஸரைக் கூட அடையாளம் கண்டு பாராட்டுவார்கள், அவர்களுக்கென்று ரசிகர்களும் இருந்தார்கள்.
இப்போது அந்த நிலைமை எல்லாம் மாறிவிட்டது. இப்போது உயிரைக் கொடுத்து நடிக்கும் துணை நடிகர்களையோ, குரூப் டான்ஸரையோ யாருக்கும் அடையாளம் தெரிவதில்லை என்று நினைக்கும்போது வருத்தமளிக்கிறது'' என்றார்.