நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தேசத்தலைவர்களின் வரலாறு சொல்லும் மூவர்ணம்!

சுதந்திரத்திற்கு முன்பு  ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து  "தியாக பூமி'  என்ற படத்தை இயக்கிய  கே.சுப்பிரமணியம்  பேத்தி,  நாட்டியக் கலைஞர்  பத்மா சுப்பிரமணியனின் அக்காள் மகள்,  திரைத்துறையில் நடன இயக்குநரா

News image

இயக்குநர். எஸ்.பி. முத்துராமன்,  முப்படையைச் சேர்ந்த கர்னல் அழகர்ராஜ், கேப்டன் சியாம் சுந்தர், ஸ்குவாட்ரன் லீடர் எஸ்.ரவிசங்கர், நீதிபதி சந்துரு, சீ.வி. சந்திரசேகர், பத்மா சுப்பிரமணியம்.

Updated On :22 ஆகஸ்ட் 2018, 4:30 am

ஸ்ரீதேவி குமரேசன

சுதந்திரத்திற்கு முன்பு  ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து  "தியாக பூமி'  என்ற படத்தை இயக்கிய  கே.சுப்பிரமணியம்  பேத்தி,  நாட்டியக் கலைஞர்  பத்மா சுப்பிரமணியனின் அக்காள் மகள்,  திரைத்துறையில் நடன இயக்குநராக இருந்த ரகுராமனின் தங்கை என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரும், "நிருத்யார்ப்பணம்' எனும் நடனப்பள்ளியின் இயக்குநராகவும், சமூகசேவகியாகவும் இருந்து வருபவர் தாட்சாயணி.  இவர்,  72 -ஆவது சுந்திரதினத்தையொட்டி   "மூவர்ணம்'  என்ற நாட்டிய நாடகத்தின் பாடல், வசனம் எழுதி, நடனம்  அமைத்து அரங்கேற்றினார்.  சென்னை, மயிலாப்பூரில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  மூப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து தாட்சாயணி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:  

""என்னுடைய சிறுவயதிலிருந்தே  அம்மா பாமாவின்  உடன்பிறந்த தங்கையான பத்மா சுப்பிரமணியத்தின் நடனம் மீது ஆர்வம் அதிகம்.   எனக்கு 3 வயதாக இருந்தபோது,  ஒரு முறை சித்தி தனது நாட்டியத்தில் என்னை பால மீனாட்சியாக அலங்காரம் செய்து நாட்டியத்தின் நடுவே  நிறுத்திவிட்டார்.  அது முதல்  சித்தியிடம் நடனம் பயில ஆரம்பித்துவிட்டேன்.    மேலும், நரசிம்மச்சாரி மற்றும்  வசந்தலஷ்மி  இரு குருமார்களிடமும் நடனம் பயின்றுள்ளேன். பின்னர், நான் வளர்ந்து கல்லூரி வந்தவுடன்  நடனப்பள்ளியைத் தொடங்கினேன்.

தற்போது 40-ஆவது  ஆண்டில் எனது நடனப்பள்ளி அடியெடுத்து வைக்கிறது. மூவர்ணம் உருவானது எப்படி என்றால்,  2005- ஆம் ஆண்டு  ஒரு பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவிற்கு என்னை  சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.  அங்கே சென்றிருந்தபோது, 8-வது படிக்கும் மாணவி ஒருத்தி எனக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றாள். அப்போது அந்த மாணவி  தேசிய கொடியை தவறாக தலைகீழாக குத்தியிருந்தாள். இதைக் கண்டதும் நான் பதறிப்போனேன். அந்த மாணவியிடம் நீ  தேசிய கொடியை தவறாக குத்தியிருக்கிறாய் முதலில் சரி செய் என்றேன். அந்த பெண்ணும் அப்படியா? என்று கேட்டபடி கொடியை சரி செய்தாள்.   8-ஆவது படிக்கும் மாணவிக்கு கொடியை எப்படி குத்த வேண்டும் என்று கூட தெரியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.  இதை அந்த பள்ளி தலைமையாசிரியரிடமும் தெரிவித்தேன். அவர் சிரித்துக் கொண்டே   மழுப்பிவிட்டார்.  அது எனக்கு மிகப் பெரிய வருத்தத்தை அளித்தது.  அந்த சம்பவம்தான்  இந்த நாட்டிய நாடகம் உருவாக  காரணமாக அமைந்தது. 

இதனால், இளம் தலைமுறையினருக்கு நமது  தேசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அன்று இரவே  நமது தேசம் குறித்தும்,  நமது நாடு சுதந்திரம் பெற தங்களது வாழ்க்கையையே  அழித்துக் கொண்ட தேச தலைவர்கள் குறித்தும் ஒரு பாடலை எழுதத் தொடங்கினேன். இதற்காக தேசத் தலைவர்களின் வரலாறுகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பின்னர் பாடலை எழுதி முடித்தேன்.  எழுதி முடித்து படிக்கும்போது என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.

இம்மண்ணுக்காக  தேசத்தலைவர்கள் தங்களது   உதிரம் சிந்தியதால் சிவந்த நிறத்தை குறிக்கும் ஆரஞ்சும்,  சத்தியம்,  தர்மத்தின் வழியில் நடப்போம் எனும் வெள்ளை நிறமும், பசுமையை குறிக்கும் பச்சை நிறமும்  கொண்ட  நமது தேசிய கொடியின்   மூன்று நிறங்களையும்,  நாட்டியத்தில் இருக்கும் மூன்று வர்ணங்களை இந்தப் பாடலில்  கொண்டு வருவதாலும்  "மூவர்ணம்'  என பெயரிட்டேன்.   பாடலை லீலாவதி கோபால கிருஷ்ணன் மற்றும்  இந்த பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்த  சசிதரனும் பாடலைப் பாடி கொடுத்தனர். நட்டுவாங்கம் நான் பாடியிருப்பேன். பின்னர்,  எனது மாணவிகளை வைத்து நடனம் அமைத்தேன்.  அதன்பிறகு 2005-இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும்   சுதந்திரதினத்தன்று தொடர்ந்து     டெல்லி தமிழ்ச் சங்கம், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், பாரத் கலாச்சார், மும்பை சண்முகநாதன் அரங்கம் , 2014-இல் புதுயுகம் தொலைக்காட்சி என  பல்வேறு மேடைகளில் இந்தப் பாடலை  அரங்கேற்றி வருகிறேன்.  ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சிறிய மாற்றம் செய்து அரங்கேற்றுவேன். 

அந்த வகையில்,  இந்த ஆண்டு நாட்டிய நாடகமாக மாற்றினேன்.  இதில் நமது தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, வ.உ.சி., பகத்சிங், வீர சிவாஜி, ஜான்சிராணி, வீரபாண்டிய கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள், கொடிகாத்த குமரன்,  கப்பலோட்டிய தமிழன், பாரதியார், அந்தமான் கைதிகள், ஜாலியன் வாலாபாத் படுகொலை,   உப்பு சத்தியாகிரகம், காந்தி நூல் நூற்பது குறித்து இதுவரை  வெளியில்  தெரியாத சில  விஷயங்களை வசனமாக எழுதி,  "உண்மை சொல்வோம், நன்மை செய்வோம், நலம் காண்போம்' என முடித்து  நாடகமாக்கினேன். 

பின்னர், நடனத்தின்  ஊடே  நாடகமும் கலந்து வருவதுபோன்று  நாட்டிய நாடகமாக அமைத்தேன்.  நாட்டிய நாடகம் தயார் ஆனதும்  நமது தேசத் தலைவர்கள் யாரையாவது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம் என்று நினைத்தேன்.  அப்போது  என் நினைவுக்கு வந்தவர்கள் இந்த தேசத்திற்காக இரவும் பகலும்  அயராது உழைத்து வரும் நமது  முப்படை வீரர்கள். அவர்கள்தான் இதற்கு பொருத்தமானவர்கள் என்ற எண்ணம் வர, முப்படையைச் சேர்ந்தவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்தேன்.

அத்துடன் எங்கள் நடனப்பள்ளி தொடங்கி நாற்பதாவது ஆண்டு என்பதால் எனது சித்தி பத்மா சுப்பிரமணியம் இதை  "ரூபி ஜுபுளி' என கொண்டாட வேண்டும் என்றார்.  எனது நடனப்பள்ளியும் சுதந்திரதின நன்னாளில்தான் தொடங்கப்பட்டது.  அதனால் 40-ஆவது ஆண்டுவிழாவையும் சேர்த்து கொண்டாடினோம்.  அதற்காக எனது நடன குருவான பத்மா சுப்பிரமணியத்தையும், வசந்த லட்சுமியையும் அழைத்திருந்தேன். நரமசிம்மாச்சாரி தற்போது இல்லை.  மேலும், நீதிபதி சந்துரு, சீ.வி. சந்திர சேகர், எஸ்.பி.முத்துராமன் போன்றோர் கலந்து கொண்டனர்.  

நாட்டிய நாடகத்துக்கான கதை எழுதி தயார் ஆனதும்,   பாடல் ரெக்காடிங் செய்ய 4 நாள்களும், நாட்டியத்திற்கு  கோரியகிராபிக்கு 15 நாளும் ஆனது. பிறகு,  மூன்று பிரிவுகளாக மாணவிகளை பிரித்து  கிட்டதட்ட  2 மாதங்கள் ஒத்திகை நடத்தினோம்.  இந்த நாட்டிய நாடகத்தில் சுமார் 87 பேர்  கலந்து கொண்டனர்.  எனது பழைய மாணவிகளின் மகள்கள்  தற்போது என்னிடம் நாட்டியம் கற்று வருகிறார்கள். அதனால் தாயும், மகள்களும் சேர்ந்து  இதில் ஆடியுள்ளனர்.  மேலும்  டி.ஏ.வி., ஆதம்பாக்கம் பள்ளியில் இருந்து நான்கு மாணவர்கள் கலந்து கொண்டனர்.   திருவள்ளூர் சேவாலயா பள்ளியில் இருந்து 18  மாணவ-மாணவிகளும் வந்திருந்தனர்.   அதுபோன்று கப்பலோட்டிய தமிழனாகவும், பாரதியாராகவும் ஜெயசூர்யா எனும் நடன ஆசிரியர் நடித்துக் கொடுத்தார்.  நிகழ்ச்சிக்கு  மூன்று நாள்களுக்கு முன்பு நாட்டியத்திற்காக பயிற்சி பெற்றிருந்த வேதமூர்த்தி என்பவருக்கு ஒரு விபத்தில் இடுப்பு எலும்பு முறிந்துபோக, அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவரது பாத்திரத்திற்கு மூன்று நாளில் யார் கிடைப்பார், யாருக்கு பயிற்சியளிப்பது என்று குழம்பி நின்றேன். அந்த நேரத்தில் என் மாணவியின் தந்தை ஒருவர் நான் நடித்து தருகிறேன் என்று சொன்னார். மூன்றே நாளில் அவருக்கு பயிற்சியளித்தோம். அவரும் மேடையில் முடிந்தவரையில் நன்றாக நடித்துக் கொடுத்தார்.

எனது மாணவிகள், அவர்களது பெற்றோர், என் குடும்பத்தினர்,  நண்பர்கள், எனது தாயின் இடத்திலிருந்து  பக்கபலமாக இருந்த எனது சித்தி பத்மா சுப்பிரமணியம் என அனைவரும்  எனக்கு துணை நின்று நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.