பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்: அம்மா!

என் அம்மா அலமேலு விசுவநாதன் பிறந்தது தஞ்சாவூரில். வளர்ந்ததும் தஞ்சாவூரில்தான். அதனால் முழுக்க முழுக்க தஞ்சாவூர் பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டோடு, வீணையும் வயலினும்
பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்: அம்மா!

என் அம்மா அலமேலு விசுவநாதன் பிறந்தது தஞ்சாவூரில். வளர்ந்ததும் தஞ்சாவூரில்தான். அதனால் முழுக்க முழுக்க தஞ்சாவூர் பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டோடு, வீணையும் வயலினும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அம்மாவுக்கு இசையில் இருந்த ஆழ்ந்த ஞானமும், வீட்டில் பூஜை அறையில் ஒலித்த அவருடைய இனிமையான குரலும் எங்களை ஆரம்பத்தில் வசீகரித்தன. எனக்கும் என் சகோதரி கர்நாடக இசைக் கலைஞர் சாருமதி ராமச்சந்திரனுக்கும் அவர்தான் முதல் குரு.
என் அம்மாவுக்குத் திருமணம் ஆனபோது என்ன வயது தெரியுமா? பதிமூன்றுதான்! பிறகு அப்பா விசுவநாதனுடன் சென்னைக்குக் குடிவந்தார். சென்னையில் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவருடைய முதல் குழந்தை, அந்த நாளில் மிகப்பிரபலமாக இருந்த பேபி சரோஜா. எங்களின் மூத்த சகோதரி அதாவது அக்கா. அவளை இந்திய சினிமாவின் "ஷெர்லி டெம்பிள்' என்ற ஆங்கில நடிகையோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள்.
என் அம்மாவும் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படம்: காமதேனு. 1939-இல் எடுக்கப்பட்டது. கதாநாயகன் யார் தெரியுமா? வேறு யாருமல்ல. என் தந்தையேதான்! அம்மாவுக்கு சினிமா வைத்த பெயர் வத்சலா.
என் தந்தை சித்ரா டாக்கீஸ் உரிமையாளராக ஆன பிறகு, சாந்தோமில் ஒரு பெரிய பங்களா கட்டினார். அங்கேதான் நான் என் சகோதரர்கள், சகோதரிகளுடன் வளர்ந்தேன்.
அம்மா விருந்தோம்பலில் மகா கெட்டிக்காரர். அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்குப் பெரி பெரிய இசைக் கலைஞர்கள் வருவார்கள். படே குலாம் அலிகான், கங்குபாய் ஹங்கல், பண்டிட் ரவிசங்கர் என்று அது ஒரு நீண்ட பட்டியல்!
அம்மாவுடைய நெருங்கிய சிநேகிதிகள் டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் பெரியவர் செம்மங்குடி சீனிவாசய்யர் எல்லோரும் அம்மாவைப் பார்த்துப் பேச வருவார்கள். அவர்கள் வரும்போது, அப்பா அம்மாவிடம் ஏதாவது பாடச் சொல்லுவார். அம்மாவின் குரல்தான் இனிமை ஆயிற்றே! ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக்கொண்டு பஜன் பாடல்களைப் பாடிக் காண்பிப்பார். வேறு நிறைய பாடல்களையும் பாடுவார்.
அம்மாவுடைய உடை அலங்காரம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அழகான காஞ்சிபுரம் பட்டுப் புடவைதான் உடுத்துவார். அவருக்கு அது கூடுதல் அழகு சேர்க்கும்! 
அம்மாவுடைய தாக்கம் அல்லது பாதிப்பு, நாங்கள் எதில் எல்லாம் ஈடுபட்டோமோ அதில் எல்லாவற்றிலும் பிரதிபலித்தது. நல்ல சுவை, சமூக அளவில் பழகும் பண்பாடு மற்றும் கலை. இவற்றில் எல்லாம் எங்கள் அம்மா கைபிடித்துச் செல்லும் "கைடு' மாதிரி. 
அம்மாவை அருமையான சிநேகிதி என்றும் சொல்ல வேண்டும். தன் பேச்சாலேயே ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருந்தார். தமிழ் தவிர, ஆங்கிலம், ஹிந்தியிலும் சரளமாகப் பேசுவார். 
என் அப்பாதான் அவருக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அப்போது, அதாவது 1940-களில் அம்மா வாக்ஸால் காரை ஓட்டிக்கொண்டு மெரீனா கடற்கரைக்கு எங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு செல்லுவார். கூடவே அம்மாவின் செல்ல நாய்க்குட்டியும் காரில் வரும்!
அம்மாவுக்கு சமையல் செய்வதிலும் அசாத்திய திறமை உண்டு. சுவையான சாப்பாடு சமைத்துவிட்டு, சமையல்காரரிடம் பண்டிகைகள் - விழாக்களின் போது எப்படி சமைக்க வேண்டும் என்று பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்.
எங்கள் வீடு விருந்தாளிகளுக்குக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தது. எந்த நிமிடமும் வருவோர் போவோருமாகக் கலகலப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் காரணம் அம்மாதான். வந்தால் மாதக் கணக்கில் தங்கிவிடும் விருந்தாளிகளும் உண்டு! அம்மாவின் தாராள மனசும், அதிதி உபசரிப்பும் அப்படி இயல்பாக இருக்கும்.
அம்மா, தான் பாடுவதில் ஒருவித அமைதி கண்டார் என்று சொல்ல வேண்டும். தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை மட்டும் தினமும் பாடுவார். மயிலாப்பூர் கபாலி கோயில் அர்ச்சகர், அம்மா அங்கே வந்து பாபநாசம் சிவன் அவர்களின் "கருணை தெய்வமே, கற்பகமே' பாடுவதைக் கேட்க ஆவலுடன் கருவறை வாயிலிலேயே நின்றுகொண்டு காத்திருப்பார். அம்மா அந்தக் கோயிலுக்கு அடிக்கடி போய்வருவார்.
அம்மா மாதிரி கடமை உணர்ந்த ஒரு தாயைப் பார்ப்பது அரிது. அவருக்குத் தெரிந்தவர்களிடையே எல்லாம் அவர் பிரபலமாக இருந்தார். அழகிலும் சரி, நடந்துகொள்ளும் பண்பிலும் சரி, அம்மா வெகு உயர்ந்தவர். 
""நீங்கள் யாரும் உங்கள் அம்மா அளவுக்கு அழகில்லை!'' என்று அவருடைய சிநேகிதிகள் எங்களிடம் சொல்லும்போது, எங்களுக்கு ஆகாசத்தில் பறப்பது போல் இருக்கும். அதை மறக்கவொண்ணாத பாராட்டாகவே எடுத்துக் கொள்வோம்! அம்மாவுடைய திறமையும், அழகும் எங்களுக்குக் கொஞ்சமாவது கிடைத்ததே என்ற பெருமைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com