காணாமல் போன மோனாசா!

ஆகஸ்ட் 21, 1911. உலகின் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றான மோனாலிசா அது வைக்கப்பட்டிருந்த லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
காணாமல் போன மோனாசா!
Updated on
2 min read

ஆகஸ்ட் 21, 1911. உலகின் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றான மோனாலிசா அது வைக்கப்பட்டிருந்த லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு இன்று லூவர் அருங்காட்சியகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
"மோனாலிசா இஸ் மிஸ்ஸிங்!' என்று "தி வேர்ல்ட் நியூஸ்' இதழில் 21.08.1911-இல் தலைப்புச் செய்தியாக வெளியானது. சம்பவம் நடந்த அன்று ஓவியம் திருடு போனதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி லூவர் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த ஒருவர் மோனாலிசா ஓவியம் காணவில்லை என்பதைக் கண்டார். உடனே அந்த ஊழியர், காவல் புரிபவர்களின் உயர் அதிகாரியிடம் தெரிவித்தார். அந்த அதிகாரி மோனாலிசா ஓவியத்தை அருங்காட்சியகத்தில் விளம்பரத்துக்காக படம் எடுக்க கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்துவிட்டு, அந்தத் தகவலில் அக்கறை காட்டவில்லை.
புகார் செய்த பணியாளர் அதிகாரியின் பதிலில் திருப்தி அடையாமல் வழக்கமாக அதுபோன்ற ஓவியங்களை படம் எடுக்கும் இடத்துக்குச் சென்று அங்கு மோனாலிசா ஓவியம் இருக்கிறதா என்று விசாரித்தார். அங்குள்ள புகைப்படம் எடுப்பவர்கள் தாங்கள் மோனாலிசா ஓவியத்தைப் படம் எடுக்கக் கொண்டு வரவில்லை என்று கூறியதும், அந்தப் பணியாளர் அலறி அடித்து ஓடிவந்து தகவலைக் கூறினார்.
உடனே பாரீஸ் போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 60 நபர்கள் கொண்ட குழுவினரோடு அருங்காட்சியகத்துக்குச் சென்றார்கள். அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக விசாரித்த பின் வெளியேற்றப்பட்டனர். 45 ஏக்கர் பரப்பில் இருந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டு வந்தபோது, மோனாலிசா ஓவியத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியும், மரச்சட்டங்களும் ஒரு மாடிப் படிக்கட்டில் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். ஓவியத்தைத் திருடியவன் மோனாலிசா ஓவியத்தை மட்டும் தனியாக எடுத்துச் கொண்டு, யார் கண்ணிலும் படாமல் எப்படியோ அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டான் என்பதை மட்டுமே அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்தது. திருட்டைச் செய்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
திருடு போன ஓவியம் 28 மாதங்கள் கழித்து 1913-ஆம் ஆண்டு இத்தாலி வாட்டில் உள்ள புளோரஜிஸ் நகரில் (லியோனார்டோ டாவின்சி பிறந்த இடத்துக்கு அருகில் உள்ள நகரம்) இருந்த கலைப்பொருள்கள் விற்கும் வர்த்தகரிடம், ஒருவன் தன்னிடம் இருந்த மோனாலிசா ஓவியத்தை விற்க முயல, அவன் போலீஸில் ஒப்படைக்கப்பட்டான். அவன் பெயர் வின்சென்ட் பெருஜ்ஜியா. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவன். 
அவனுக்கு மோனாலிசா ஓவியத்துக்கு கண்ணாடிச் சட்டம் போடும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. முதல் நாள் அருங்காட்சியகத்தில் பணிபுரிந்தபோதே ரகசியமாக மோனாலிசா ஓவியம் மாட்டப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள சாமான்கள் எடுக்கும் அறையில் தங்கிக் கொண்டான். 
அடுத்த நாள் காலையில் 7 மணி அளவில் மோனாலிசா ஓவியத்தைக் கழற்றி, அதன் சட்டத்தையும் கண்ணாடியையும் எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டு, ஓவியத்தை மட்டும், பணிபுரியும்போது அணியும் நீண்ட அங்கியினுள் மறைத்து வைத்து, காவலாளி இல்லாத நேரத்தில் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய அடுக்ககத்தில் கொண்டுபோய் ஓரு பெட்டியினுள் வைத்திருக்கிறான்.
மோனாலிசா ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதும் மிகவும் நேசித்த ஒருவர் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டதைப் போல் மகிழ்ந்தனர். மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 
"புதிய பார்வையில் லியோனார்டோ டாவின்சி' நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com