பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்: அம்மா!

நான் அப்பா செல்லம். சிறுவயதில் அப்பாவுடன் (நல்லி குப்புசாமி செட்டியார்) தான் அதிக நேரம் செலவழிப்பேன்.
பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்: அம்மா!
Updated on
3 min read

நான் அப்பா செல்லம். சிறுவயதில் அப்பாவுடன் (நல்லி குப்புசாமி செட்டியார்) தான் அதிக நேரம் செலவழிப்பேன். எனது 8,9 வயதுவரை அப்பாவின் அலுவலகம் எங்கள் வீட்டிலேயே செயல்பட்டதால் பெரும்பாலான நேரம் அப்பா வீட்டில்தான் இருப்பார். பிறகு அப்பா தொழில் ரீதியாக நிறைய பயணிக்கத் தொடங்கிவிட்டார். அதன் பிறகுதான் என் அம்மா அலமேலுவிடம் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்கினேன்.
பள்ளியில் அம்மா எப்போதும் முதலிடம்தான். அம்மாவின் அப்பா எஸ்.ஆர்.ஜி.ரங்கநாதன், கும்பகோணத்தில் மிகப்பெரிய மனிதர். கும்பகோணம் பட்டு சேலைகளை உற்பத்தி செய்வதில் தேர்ந்தவர் என்பதால் கும்பகோணம் பகுதியில் என் தாத்தா மிகவும் பிரபலம். அம்மாவுக்கும் அவரது அப்பாவிடம் அதிக பாசம்.
அந்தக் காலத்திலேயே மிகவும் நவீனமாக உடையணிவார் என் அம்மா. புடவைகளுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகள் அணிவது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் என் அப்பாவின் குடும்பம் மிகவும் பாரம்பரியமானது. என் அம்மா அவரது பள்ளிப்பருவத்தில் நாட்டிய நாடகங்களுக்கு இணைப்புரை வழங்குவதில் தேர்ந்தவர். சபாக்களில் நடைபெறும் நாடகம் நடனங்களைக் காண்பதில் அவருக்கு அலாதி ப்ரியம். சென்னையில் ஓர் ஆங்கிலோ இந்திய ஆசிரியரிடம் அவர் பேச்சு ஆங்கிலம் (நல்ர்ந்ங்ய் உய்ஞ்ப்ண்ள்ட்) கற்றுக் கொண்டார். அப்போதும் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்.
மிகவும் துணிச்சலான பெண்மணி அம்மா! அப்பா அடிக்கடி பயணம் சென்றுகொண்டே இருப்பதால், வீட்டின் அனைத்தும் நிர்வாகத்தையும் அவர் ஒற்றை ஆளாகக் கவனித்துக் கொள்வார். தனக்கே உரித்தான தனித்தன்மையான பாணியில் வீட்டின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார். தலைசிறந்த நிர்வாகி!
எங்கள் வீட்டு சமையலறை ஒருநாளும் ஓய்வாக இருந்து நான் பார்த்ததே கிடையாது. அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணி வரையிலும் ஓயாமல் வேலை நடந்து கொண்டே இருக்கும். வீட்டுக்கு விருந்தினரின் வரவு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதற்காக சிறந்த செட்டிநாடு சமையல்காரர்களை பணியில் அமர்த்தியிருந்தோம். விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்கு என் அம்மா ஒருபோதும் அலுத்துக்கொண்டதே இல்லை. 
பிறருடன் எளிதில் பழகும் தன்மை கொண்டவர் என் அம்மா. டிவிஎஸ் குடும்பத்தினர் உள்ளிட்ட எங்களுக்கு நன்கறிந்த, பழக்கமான வாடிக்கையாளர்களைச் சந்திக்க அப்பாவும் அம்மாவும் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வார்கள். அதேபோன்று எங்களுக்கு நெசவு செய்து கொடுக்கும் நெசவாளர்கள் வெகு தூரத்திலிருந்து கூட, தங்கள் குடும்பத்தினருடன் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். சிலர் எங்கள் வீட்டில் தங்கியும் செல்வார்கள். அவர்கள் அனைவரையும் அன்புடன் கவனித்துக் கொள்வார். நெசவாளர்களின் குடும்பத்தினருடனும் நல்ல நட்புடன் பழகி வந்தார். சில தலைசிறந்த நெசவாளர்கள் எங்களின் குடும்ப நண்பர்களாகவும், மிகவும் விசுவாசமிக்கவர்களாகவும் இருந்தனர். 
ஏழை, பணக்காரர் என்ற அந்தஸ்து பார்த்து பழக மாட்டார். எல்லாரையும் சமமாகவே பாவிப்பார். குடும்பத்தினர் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு, அவர் சமையலறையில் பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார். வீட்டுப் பணியாளர்களுக்கும் அவரே உணவு பரிமாறுவார். பணிவு தான் வீட்டின் முக்கிய அம்சமாக இருந்தது. இதனை எங்கள் அப்பா அம்மாவின் வாழ்க்கையிலிருந்தே நாங்கள் கற்றுக் கொண்டோம்.
எங்கள் கடைக்கு மேல் தளத்தில்தான் வீடு இருந்தது. மிகப்பெரிய வளாகம் அது. இப்போது போன்று செக்யூரிட்டி ஆட்கள் எல்லாம் அப்போது கிடையாது. எங்கள் ஊழியர்கள் தான் பாதுகாப்புப் பணிகளையும் பார்த்துக் கொண்டனர். வீட்டில் பசுக்களை வளர்ந்து வந்தோம் (இப்போதும் வளர்க்கிறோம்). என் அம்மாவுக்கு பசுக்களைப் பராமரிப்பதில் அதிக ஈடுபாடு உண்டு. இரவில் தாமதித்து தான் உறங்கச் செல்வார்; பசுக்களைப் பராமரிக்க வேண்டும் என்பதால் விடியற்காலையிலேயே எழுந்துவிடுவார். இந்த வேலைகளையெல்லாம் மிகவும் ரசித்துச் செய்வார். அவர் ஓய்வாகவோ, சோம்பலாக இருந்தோ நான் பார்த்ததே இல்லை. எப்போதும் துறுதுறுவென்று ஓடியாடி வேலைகளைச் செய்துகொண்டே இருப்பார்.
சிறுவயதில் ஒரு சிலர் தவிர்த்து, பிற தோழிகளின் வீடுகளுக்குச் செல்ல என்னை அம்மா அனுமதிக்க மாட்டார். என் தோழிகளின் அம்மாக்களை இவர் தோழிகளாக்கிக் கொள்வார். இதனால் என் தோழிகள் எங்கள் வீட்டில் வந்து அதிக நேரம் செலவழிப்பார்கள். "ஃபாஸ்ட் ஃபுட்', "ஜங்க் ஃபுட்' என இன்று கூறப்படும் உணவுப்பொருள்கள் எல்லாம் அப்போது கிடையாது. எனவே, எனக்கும் எங்கள் தோழிகளுக்கும் விளையாட்டின் நடுவே கொறிப்பதற்கு முறுக்கு, சீடை, கண்டி முறுக்கு போன்ற தின்பண்டங்களைச் சமையல்காரர்களைக் கொண்டு செய்து தருவார். தின்பண்டங்கள் செய்யும்போது சிறுவயதில் நானும் என் சகோதரனும் சமையலறைக்குச் சென்று அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு சிறிய சிறிய உதவிகளைச் செய்து கொடுப்போம். எங்களுக்கு மிகவும் பிடித்தமான காரியம் அது.
பள்ளிக்காலங்களில் நாங்கள் சிறந்த மாணவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். என் அக்காவும் நானும் வகுப்பில் எப்போதும் முதலிடம் தான். பள்ளி காலாண்டு தேர்வில் ஒருமுறை நான் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டேன். ஆனால் என் அம்மா கோபமோ, வருத்தமோ அடையவில்லை. அவர் என்னிடம் "ஏன்?' என்ற ஒற்றைக் கேள்வியைத் தான் கேட்டார். அதற்கு பதிலையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அடுத்த தேர்வில் முதலிடத்தைப் பிடித்தேன். 
பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரிக்குச் சென்று படிப்பதற்கு அதிகம் ஊக்கப்படுத்தியவர் அம்மாதான். என் அக்காதான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பெண் பட்டதாரி. இதன் காரணமாக நான் திருமணத்துக்கு பின்னால் கல்லூரிக்கு சென்று படிப்பதைக்கூட வித்தியாசமாக நினைக்கவில்லை. என்னுடன் கல்லூரிக்கு வந்து என் துறைத் தலைவரைப் பார்த்துப் பேசி, எனக்கு பிரசவ கால விடுப்பு வாங்கிக் கொடுத்தார். என் முதல் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் நான் கல்லூரி தேர்வை எழுதினேன். என்னை முழுக்க உற்சாகப்படுத்தி, என் படிப்பை முடிக்க வைத்தவர் அம்மாதான்.
குழந்தைகள் என்றால் என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளை வளர்த்தெடுத்ததிலும் அம்மாவின் பங்கு அளப்பரியது. குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பார். அவர்களைப் பள்ளியில் இருந்து அழைக்கச் செல்லும்போது அவரும் தினமும் பள்ளிக்கு வருவார். என் குழந்தைகளின் நண்பர்களின் அம்மாக்களையும் அவரது தோழிகளாக்கிக் கொள்வார். என் மகள், என் அம்மாவை மிகவும் பாசத்துடன் "நல்லி அவ்வா' என்று அழைப்பாள்.
மிகச்சிறந்த சேலைகளை என் அம்மா சேகரித்து வைத்துள்ளார். அவருடைய தெரிவுகளைப் பாராட்டாதவரே இருக்க முடியாது. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு அவர் அணிந்து சென்ற "ஸ்பெக்ட்ரா' என்ற புடவை அனைவரையும் கவர்ந்தது. இந்தத் துறையில் என்ன முன்னேற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை "அப்டேட்' செய்து கொண்டே இருப்பார். அதே சமயம் நவீன கால (இர்ய்ற்ங்ம்ல்ர்ழ்ஹழ்ஹ்) டிசைன்களையும் தெரிந்து வைத்துக் கொள்வார். அவர் ஸ்ரீ பாலம் சில்க்ஸ் கடைக்கு புடவை எடுக்க வரும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். எங்கள் கடையில் உள்ள பாரம்பரிய மற்றும் நவீன கால பட்டுப்புடவைகளின் சேகரிப்பை ரசித்துப் பாராட்டுவார்.
என் அப்பா வீட்டில் இருந்தாலும் வெளியூருக்குச் சென்றுவிட்டாலும் உறவினர் வீட்டு விசேஷங்களில் எல்லாம் அம்மா தவறாமல் கலந்து கொள்வார். உறவினர் அனைவரிடமும் நல்ல உறவுமுறையைப் பேணிக் காப்பார். உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கென்று நேரம் ஒதுக்கி சென்று அவர்களைப் பார்த்து வருவார். என் அம்மா எந்த இடத்துக்கு பயணம் சென்றாலும் அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு தவறாமல் சென்றுவிடுவார். நகைச்சுவை உணர்வுமிக்கவர்! இதனால் எந்த வயதினரிடமும் எளிதாக அவரால் உரையாட முடியும். ஆனால் அவருக்கு அரசியல் மற்றும் செய்திகளில் ஆர்வம் கிடையாது.
நவீன காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருப்பார். முகநூல், வாட்ஸ்-அப், ஸ்கைப், விடியோ காலில் பேசுவது என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் என்னைவிட தேர்ந்தவர். யாரிடம் இருந்தாவது அவற்றைக் கேட்டுக் கற்றுக்கொள்வார். ""எனக்கு இதெல்லாம் தெரியாது!'' என்று ஒருபோதும் சொல்லவே மாட்டார்.
இன்றும் குடும்பத்தினர் அனைவரின் வாழ்க்கையிலும் அவர் பெரும்பங்கு வகிக்கிறார். கொள்ளுப் பேரப்பிள்ளைகளையும்கூட தினமும் சென்று பார்த்து, கவனித்துக் கொள்கிறார். என் அம்மாவுக்கு எப்போதுமே விதிகளை மீறுவது பிடிக்கும். யாரும் எதுவும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கே உரிய சொந்த விதிகளைத்தான் அவர் பின்பற்றுவார். எப்போதும் இளமையாகவே உணர்வார், அதனால்தான் வயதைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.
என் அம்மாவின் சிந்தனைகள் மிகவும் முற்போக்கானது, துணிச்சலானது. பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்ற எண்ணம் ஒருநாளும் எனக்கு வந்ததில்லை. காரணம் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக கண் முன்னே என் அம்மா இருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com