

ஊரில் நல்லவர் ஒருவர் இருந்தால் மழை பெய்யும். அந்த மழை ஊரில் வசிக்கும் அனைவருக்கும் பயன்தரும். அந்த "நல்லவர்கள்' வரிசையில் வருபவர்தான் ஈரோடு மாவட்டம், சித்தோடுக்கு அருகில் பாண்டியம்
பாளையத்தைச் சேர்ந்த பொன்மணி தேவி.
என்ன நினைத்து பெற்றோர் பொன்மணி தேவி என்று பெயரிட்டார்களோ... பொன்மணி தேவியின் மனசும் சொக்கத் தங்கமாகவே அமைந்துவிட்டது.
தர்ம காரியத்துக்கு நன்கொடை தரவே பலரும் பலமுறை யோசிக்கும்போது, நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை "அன்பளிப்பா வச்சுக்கோங்க...!' என்று பள்ளிக்கு எழுதி வைக்க யாருக்கு மனம் வரும்? நிலமாகவும் பணமாகவும் பல கோடிகள் நன்கொடைகளாக வழங்கி வரும் பொன்மணி தேவிக்கு வயது 80. இவர் வாழ்க்கையில் இழந்தது அதிகம் என்றாலும் அதையே நினைத்து கலங்கிக் கொண்டிருக்காமல் சொந்த சோகங்களை மறந்து ஒரு கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கிறார்.
பொன்மணி தேவி மனம் திறக்கிறார்:
""எனது சொந்த ஊர் திருப்பூர். வசதியும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். அப்போதே பள்ளிக்கு குதிரை வண்டியில்தான் சென்று வருவேன். எனக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ் மேல் உயிர். சைவ சித்தாந்தத்தில் நல்ல ஈடுபாடு. பள்ளிப்படிப்பு முடித்ததும் தமிழ்க் கல்லூரியில் வித்வான் பட்டம் பெற்றேன். பிறகு சென்னையில் ஓராண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தேன். 1964}இல் நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்தேன். 1996}ஆம் ஆண்டு மொடச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றேன்.
எனது கணவர் குமார நடராஜ வரதப்ப ஈவப்பனார். அவர் ஒரு புலவர். தமிழின் மேலிருந்த பிடிப்பால் புலவரைத் திருமணம் செய்து கொண்டேன். என் கணவர் தமிழக அரசின் அவைப் புலவராகவும் இருந்தார். மிராசுதார் என்பதால் நிலபுலன்களும் உண்டு. கணவர் சித்தோடு ஊரைச் சேர்ந்தவர். இருவரின் குடும்பமும் பொருள் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். குடும்பத்தினரிடம் இருந்த இந்த ஈகைப் பழக்கம் எங்களையும் தொற்றிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. .
ஆஸ்தி, அந்தஸ்து இருக்கிறது என்பதால் பகட்டான வாழ்க்கை வாழ நாங்கள் விருப்பியதில்லை. ஆடம்பரச் செலவுகளை விலக்கும் மனஉறுதியும் பக்குவமும் எங்களுக்கு இருந்தது. பார்த்துப் பார்த்துதான் செலவு செய்வோம். ஆனால் உதவுவதில் தாராளமாக இருப்போம்.
என் கணவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதனால் ஆசிரியப் பணியுடன் விவசாயத்தையும் கவனிக்க வேண்டிய கட்டாயம். எங்களது ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தார். அவரிடமும் விதி விளையாடியது. சித்தோடு கிராமத்தில் வீடு கட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற கார்த்திகேயன் மின்சாரம் தாக்கி இறந்தார். எனக்கு எல்லாமுமாய் இருந்த ஒரே மகன் இறந்த செய்தி கேட்டு துடித்துப் போய்விட்டேன். அழுது புலம்பினேன். போனவர் திரும்பி வந்ததாய் சரித்திரம் இல்லையே.... நான் படித்த தமிழ்ப் பாடல்கள்தான் என்னைத் தேற்றியது. எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, பள்ளிக் குழந்தைகளை எனது குழந்தைகளாகக் காண ஆரம்பித்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைத்தது. விவசாயத்தையும் விடவில்லை. வரும் வருமானத்தில் உதவி கேட்டு வருபவர்களுக்கு பொருள் உதவி அதிகமாகச் செய்ய ஆரம்பித்தேன்.
வயோதிகம் என்ற இரும்புத்திரை விழ ஆரம்பிக்கும்போது "அதைச் செய்ய வேண்டும்... அங்கே போக வேண்டும்' என்று மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே, சித்தோடு ஊருக்கு விடை சொல்லிவிட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக எனது தமக்கையுடன் பாண்டியம்பாளையத்தில் வாழ்ந்து வருகிறேன். தமைக்கையின் மகன் பார்த்திபன் ஆங்கில மருத்துவர். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்'' என்றார்.
நன்கொடை அளித்த விவரங்கள் குறித்து கேட்டதற்கு, ""அது வேண்டாம்! அதைப் பட்டியல் இட்டால் விளம்பரமாகிவிடும்'' என்றார்.
பொன்மணி தேவியை "சித்தி' என்று வாஞ்சையுடன் அழைக்கும் டாக்டர் பார்த்திபன்,""சித்தி அப்படித்தான்... "தர்ம காரியங்களுக்கு கொடுத்ததை சொல்லிக் காட்டக் கூடாது. கொடுத்துப் பாருங்கள்...அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடில்லை' என்பார். எனக்குத் தெரிந்த வரையில் அவர் பள்ளிகளுக்காக அளித்த நன்கொடை பல கோடிகளைத் தாண்டும். இவரது நன்கொடையால் சித்தோடைச் சுற்றியுள்ள பல பள்ளிகள் பயன் அடைந்துள்ளன. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்ட 2006-ஆம் ஆண்டில் 25 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அப்போதே அந்த நிலத்தின் மதிப்பு ரூ.40 லட்சம். சுற்றுப்புற சுவர் கட்டுதல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கும் பணம் அன்பளிப்பு செய்துள்ளார். இதுதவிர, கோயில்களுக்கும் பக்தி சொற்பொழிவுகள் நடத்தவும் பொருள் உதவி செய்து வருகிறார்.
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது மாதிரி இப்போது சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி. இந்தப் பள்ளிக்கு பல ஆண்டுகளாகக் கட்டடம் கட்ட, நூலகம் அமைக்க, தரைக்கு டைல்ஸ் போட என்று சுமார் ரூ.4 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கிறார். உயர்நிலைப் பள்ளியாக இருந்தததை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதிகளை ரூ.2 லட்சம் செலவில் செய்து கொடுத்தார்.
மேல்நிலைப் பள்ளியாகிவிட்டதால் புதிய வகுப்புகளுக்கு இடவசதி வேண்டும். ஆய்வகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் இந்தத் தேவைகளை நிறைவேற்ற குறைந்தது முக்கால் ஏக்கர் வேண்டும். நிலத்துக்கு எங்கே போவது என்று யோசனையில் மூழ்கிய பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் சித்தியிடம் வந்தார்கள். பள்ளியின் தேவைகளை விளக்கினார்கள்.
எதையும் யோசிக்காமல் பள்ளிக்கு வெகு அருகில் இருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தைப் பள்ளிக்காக நன்கொடையாக அளித்தார். சில நாள்களில் தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு நிலத்தை முறையாக எழுதியும் வைத்துவிட்டார். செய்த உதவிக்கு நன்றி சொல்ல விழா எடுக்கப் போவதாக பள்ளி நிர்வாகிகள், ஊர்த் தலைவர்கள் சொன்னதும், "அதெல்லாம் வேண்டாம்' என்றார். அனைவருடைய வற்புறுத்தலால் விழாவில் பங்கு பெற்றார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பங்கேற்று சித்தியைப் பாராட்டிப் பேசினார். இந்தப் பள்ளி உள்ளவரை சித்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்'' என்கிறார் டாக்டர் பார்த்திபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.