

சென்னையைச் சேர்ந்த டெய்சி விக்டர் இதுவரை இருபது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், முப்பத்தாறு தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஐம்பத்தொன்பது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் "மூத்தவர்' பிரிவில் கலந்து கொண்டு சுமார் 414 பதக்கங்களை பெற்றிருக்கிறார். அதில் முன்னூற்றி நாற்பத்தைந்து தங்கப் பதக்கங்கள். டெய்சிக்கு வயது எண்பத்தேழு. தினமும் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் காலை ஏழரை மணிக்கு ஆஜராகிறார். ஸ்டேடியத்தில் ஓடுவதுடன் தட்டு (க்ண்ள்ஸ்ரீன்ள் ) குண்டு (ள்ட்ர்ற் ல்ன்ற்) எறியவும் பயிற்சி செய்கிறார். சமீபத்தில் உலக அளவில் நடந்த தட்டு, குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை அறுவடை செய்துவரும் டெய்சி தனது பயணம் குறித்து மனம் திறக்கிறார்:
""நான் பிறந்தது திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் நாசரேத் என்னும் ஊரில். அப்பா போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்தார். ஆனால் தமிழ்நாட்டில் அல்ல. ஆந்திராவின் பெல்லாரியில். அதனால் நான் பெல்லாரியில் வளர்ந்தேன். அப்பாதான் விளையாட்டுகளில் பங்கெடுக்கும்படி உற்சாகப்படுத்தினார். எட்டு வயதில் ஓடத் தொடங்கி, இப்போது எண்பத்தேழு வயதிலும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
நான் தடகள ஓட்டத்தில் பல வெற்றிகளை பெற்றேன். அதன் அடிப்படையில் 1951-இல் சென்னை தொலைபேசி அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஓட்டத்தில் எனது வெற்றிகளை கணக்கில் எடுத்து, தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சிக்காக அலுவலகத்தில் அனுமதி தந்தார்கள். அலுவலகத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை .. பதக்கங்களைக் குவித்தேன். 1956-இல் திருமணம். ஆறு குழந்தைகள். கர்ப்ப காலத்திலும் ஓடி பயிற்சி பெறுவேன். பிரசவம் ஆன ஒரே மாதத்திலேயே ஓடுவதற்காக மைதானம் வந்துவிடுவேன். பயிற்சிக்கு நான் நீண்ட விடுமுறை தந்ததே கிடையாது.
இந்தியாவின் மின்னல் வேக ஓட்டக்காரர் மில்க்காசிங் 1980-இல் சென்னை வந்தார். அப்போது "மூத்தோருக்காக விளையாட்டு சங்கத்தை ஆரம்பித்தார். முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க என்னையும் ஊக்குவித்தார். அதன் காரணமாக 1981-இல் மூத்தோருக்கான தட கள போட்டியில் கலந்து கொண்டேன். நியூசிலாந்து சென்று போட்டியில் கலந்து கொண்டு ஏழாவது இடத்தில் வந்தேன். அது எனக்கு உற்சாகம் தந்தது. தொடர்ந்து விக்டர் வில்சன் என்பவரிடம் நான் பயிற்சி பெற்றேன். சர்வதேச போட்டிகளில் அவர் எனக்கு பயிற்சியளித்தார். இன்றைக்கும் நான் அதிகாலையில் எழுந்துவிடுவேன். ஏழுமணிக்கெல்லாம் மைதானம் நோக்கிப் புறப்படுவேன். ஏழரை முதல் ஒன்பதரை மணி வரை பயிற்சி நடக்கும். உடன் காபியும், காலை உணவையும் கொண்டு போவேன். வரும் வழியில் அவசியம் ஏற்பட்டால் வங்கி, அஞ்சல் அலுவலகம் சென்று வேலைகளை முடித்து விட்டு பதினோரு மணிவாக்கில் வீடு திரும்புவேன். முன்பெல்லாம் எனக்கு பிடித்த விளையாட்டுகள் ட்ரிப்பிள் ஜம்ப் மற்றும் தூரம் தாண்டுதல்.
மூன்றாண்டுகளுக்கு முன் என் கணவர் காலமானார். அவர் போனதும் தனிமை எனக்கு பெரிய பாரமாக இருந்தது. பிறகு எனது கவனம் துள்ளி குதிப்பது, தூரம் தாண்டுவதிலிருந்தும் விலகி, ஓட்டம், தட்டு, குண்டு எறிதலுக்குத் திரும்பியது.
இத்தனை ஆண்டு காலமாக நான் சுகவீனப்பட்டதே இல்லை. எந்த வகையிலும் உடல் வலியை உணர்ந்ததில்லை ஆனால், தற்சமயம் மாடிப்படிகள் ஏறி இறங்குவதில் சிரமத்தை உணருகிறேன். என்னைத் தெரிந்தவர்கள் ""எதற்காக இந்த வயதில் தினமும் ஓடி பயிற்சி எடுக்கிறீர்கள்.. கீழே விழுந்து அடி பட்டால்.. உங்களுக்கும் சிரமம். உங்களை கவனிப்பதில் உங்கள் பிள்ளைகளுக்கும் சிரமம். வீட்டில் இருங்கள்.. பேரன் பேத்திகளுடன் பேசி நேரத்தைப் போக்க வேண்டியதுதானே'' என்று சொல்லாமல் இல்லை.
""எனக்கு சக்தி இருக்கிறது. நான் சம்பாதித்ததை போட்டிகளில் பங்கெடுக்கப் போய் வர செலவு செய்கிறேன்'' என்று சமாதானப்படுத்துவேன். நான் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது ஏதாவது மருத்துவ செலவு ஏற்பட்டால் அதனை டாக்டர் புகழேந்தி ஏற்றுக்கொள்கிறார். மில்க்கா சிங்குடன் என்னையும் 1981-இல் பாராட்டி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெருமைப்படுத்தினார். டெய்சி தற்சமயம் லூதியானா சென்றுள்ளார். "அங்கு நடக்கும் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் பயிற்சி எடுத்து.. எனது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதற்காகச் செல்கிறேன்' என்கிறார் டெய்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.