என் பிருந்தாவனம்! 13

தங்கராசு ஊர் வந்து சேர்ந்த போது பொழுது மேற்கே சாய்ந்திருந்தது. அம்மாவின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவனுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது.
என் பிருந்தாவனம்! 13

தங்கராசு ஊர் வந்து சேர்ந்த போது பொழுது மேற்கே சாய்ந்திருந்தது. அம்மாவின் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவனுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது.
 ஏனென்றால் காட்டில் வேலைகள் அப்படியே கிடந்தன. அதோடு அம்மா கௌசிகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டுத்தான் வரச் சொன்னாள். ஆனால் தானோ ரொம்ப சௌகரியமாய் அவர்கள் வீட்டில் இரவு தங்கியதோடு, விருந்தும் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறோம். இதை அம்மா எப்படி பொறுப்பாள் ? அம்மா மட்டுமல்ல, தம்பி, தங்கச்சிக் கூடப் பொறுக்க மாட்டார்கள் என்று நினைத்தவனுக்கு மனசாட்சி முள்ளாய் உறுத்தியது. அதனால் பஸ்ûஸ விட்டு இறங்கியதும் வீட்டுக்குக் கூட போகாமல் தன் காட்டை நோக்கி நடந்தான்.
 பத்துப் பேர், மிளகாய் பழம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கடவம் பொட்டியில் பழத்தை வாங்கிக் கொண்டிருந்த சங்கரி வரப்பேறி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மகனைப் பார்த்துவிட்டு,
 "என்னய்யா தங்கராசு இப்பத்தேன் வாரியா ?'' என்று கேட்க,
 அவன் குற்ற உணர்வோடு தலையை மட்டுமே அசைத்தான்.
 "சரிய்யா சாப்பிட்டயா, இல்லயா?''
 "நானு வீட்டுக்கே போவலம்மா. நேத்தே வாரேன்னு சொல்லிட்டு வர முடியலயா, அதனால பிஞ்சைக்கே வந்துட்டேன்''.
 "ஒரு வயசுக்கு மீறுனப்பெறகு பெத்த தாய்க்குப் பிள்ளைக கொடுக்கிற வாக்க காப்பாத்தறது கஷ்டந்தேன். அதுலயும் கல்யாணம் முடிச்சாச்சின்னா, ரொம்பவும் கஷ்டம். அங்கிட்டு மாமன், மாமியான்னு ஒரு சொந்தம் சேர்ந்திருதில்ல சரி. உன் மாமியா வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காகல்ல''
 தங்கராசுவுக்கு பேசுவதற்கு வார்த்தைகளே வராமல் திண்டாடினான். தன்னைக் கண்டதும் அம்மா கோபத்தோடு நேத்தே வாரேன்னு சொன்னவன் ஏண்டா வரல பொண்டாட்டி மயக்கம் அம்புட்டுக்கு இருக்காக்கும் என்று இன்னமும் ஏதேதோ கெட்ட வார்த்தைகளில் திட்டியிருந்தால் அவன் சந்தோஷப்பட்டிருப்பான். அவனுக்கு நிம்மதியும் கிடைத்திருக்கும். ஆனால், அவன் அம்மா எதுவுமே சொல்லவில்லை. அதுவுமில்லாமல் சாப்பிட்டியா? என்று தன் பாசத்தைத்தான் காட்டுகிறாள். அவனுக்கு மனது வலித்தது.
 கௌசிகாவை இவன் கூட்டிப் போய் அவள் வீட்டில் விட்டு விட்டு வந்து ஒரு மாதமாகிவிட்டது. கல்யாணம் முடித்ததுமே அவள் பிரிந்து விட்டதால் அந்தத் துயர் அவனை வாட்டி எடுத்தது. அவனால் சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை. ஒரு வார வாழ்க்கை என்றாலும் இவனின் உயிரோடு கலந்துவிட்டாளே. கௌசிகாவின் நினைவு அவனுக்குள் நரம்புகளாய் பின்னி அவன் உடம்பெங்கும் ரத்தமாய் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ பேருக்கு வேலைகளை செய்தான். சாப்பிட்டான். தூங்கினானா? தூங்குவது போல் படுத்திருந்திருந்தானே தவிர, அவன் விழிகளுக்குள் கௌசிகா ஐக்கியமாகி இருந்தாள். அவன் நெஞ்சில் அவள் ஏக்கம் கொண்ட சிறு செடியாய் நாளுக்கு, நாள் வளர்ந்து கொண்டிருந்தாள்.
 இனி அவளை எப்போது பார்ப்போமென்ற நினைவில் அவன் உயிர் கூடு அலைந்தது. உடனே அவளைப் பார்க்க வேண்டும், அப்படியே அவளை அணைத்துக் கொள்ள வேண்டு
 மென்று அவன் தவியாய் தவித்தான். கௌசிகாவின் நினைவில் அவன் நெஞ்சம் போர்க்களமாய் மாறிப்போனது. அதோடு அந்த கிராமத்தில் யாரும் இதுவரை கழிப்பிடமோ, குளிப்பதற்கென்று தனியிடமோ கட்டியதில்லை. அதெல்லாம் அவர்களுக்கு கீழ்த்தரமாகவும், ஊருக்கு ஆகாத தாகவும் தெரிந்தது. ஆண்களும், பெண்களும் கழிப்பிடங்களுக்காக அடர்ந்த முள்காட்டையும், ஓடைகளையும் தேடிதான் ஆளுக்கொரு திசையாகப் போனார்கள். குழந்தைப் பெற்ற பச்சை உடம்புக்காரிகளுக்கு மட்டுமே வீட்டிற்குள்ளிருக்கும் சிறிய அங்கனக் குழியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அதுவும் கூட மூன்று மாதந்தான். அதன்பிறகு அவர்களும் வெளியேற வேண்டும்.
 இந்த மாதிரி ஒரு கிராமத்திலிருந்து கொண்டு நான் கௌசிகாவுக்கான வசதிகளை எப்படி, செஞ்சி கொடுப்பேன். கைநிறைய பணமிருந்து என்ன செய்வது? ஊரோடு ஒத்து தானே வாழ வேண்டியிருக்கிறது. ஊருக்கு கட்டுப்படாம ஏதாவது ஒரு வேலய நம்ம இஷ்டத்துக்கு செஞ்சா அது நம்ம ஊரையும், ஊர்க்காரர்களையும் அவமானப் படுத்துர மாதிரியில்ல ஆயிரும் என்று பலவிதமாக நினைத்து, நினைத்து நெஞ்சம் சிதைந்துக் கிடந்தான் தங்கராசு.
 இப்போதெல்லாம் அவனால் ஆட்களோடு சேர்ந்து முழு மனதோடு உற்சாகமாக வேலை செய்ய முடியவில்லை. வேலை செய்யும் போதே அவ்வப்போது, தன் மனைவியின் நினைவு வந்துவிட அப்படியே சூன்யத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றுவிடுவான்.
 எவ்வளவு நேரம் நிற்பானோ அவனுக்கே தெரியாது. அவன் அம்மாவோ வேறு யாராவது அவனைத்தட்டினால் மட்டுமே சிந்தனை கலைந்து திரும்புவான். சற்றுமுன்தான் செய்த வேலைகளைத் தொடர்ந்து செய்வான்.
 இதோ இப்போது கூட பொழுது மசங்கிவிட்டது காட்டில் வேலை செய்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். தன் காளைகள் மீது உயிராய் இருந்தவன் அதை கவனிப்பதற்காக தன் நேரத்தை மகிழ்ச்சியோடு செலவிடுகிறவன் இப்போது அவைகளை கண்டு கொள்வதே இல்லை.
 அண்ணனின் போக்கைக் கண்டு கொண்டவனாக பாண்டிதான் காளைகளை கவனித்துக் கொள்கிறான்.
 அங்கிருந்த வரப்பில் உட்கார்ந்திருந்த தங்கராசு அம்மா சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறான்.
 "ஏண்டா தங்கராசு, இம்புட்டு தொலவுக்கு வந்து பொண்ணு பாத்திருக்கேயேடா ஒரு ஆத்திரம், அவசரத்துக்கு போனமா, வந்தமான்னு இருக்க முடியாதேடா'' என்று பொண்ணைப் பார்த்து இவன் சம்மதம் கொடுத்ததிலிருந்து அங்கலாய்த்துக் கொண்டு இருந்தவள் மீது இவன் கோபப்பட்டான். ஆனால், அது எவ்வளவு உண்மையென்று இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
 இந்த மாதிரி அவளைப் பிரிந்திருக்கும் சமயங்களில் கிட்டத்து ஊராக இருந்தால் "தோட்டத்தில் பறித்த காயைப் போட்டுட்டு வாரேன். நெல் அளக்க வியாபாரிய கூட்டிட்டு வாரேன்'' என்று எத்தனைச் சாக்குகளை வைத்து அவளை பார்த்துவிட்டு வந்துவிடலாம். வருவதற்கு வேண்டுமானால் கொஞ்சம் நேரமாகலாம்.
 " என்னடா இம்புட்டு நேரமின்னு'' அம்மா கேட்டால், ஏதாவது சாக்கு, போக்கு சொல்லி சமாளித்துவிடலாம். ஆனால், ஒரு நாள் பயணம் இருக்கும் ஊருக்கு என்ன சாக்கு சொல்லிவிட்டு போவது எந்தச் சாக்கு சொன்னாலும் அது பொய்யாகத்தான் போவும் என்று நினைத்துக் கலங்கினான் தங்கராசு. கௌசிகாவின் நினைவு அவனை உளிக் கொண்ட பாறையாகத் தாக்கிக் கொண்டிருந்தது. அப்போது ஆடுகளை கெடைக்காகத் திரட்டிக் கொண்டு போகும் ஆட்டுக்காரன் ஒருவன்
 " மானத்தில மீனிருக்க..
 மருதயில நானிருக்க..
 சேலத்தில் நீயிருக்க..
 நம்ம சேருவதோ எக்காலம்..?' என்று அவன்பாட்டுக்கு பாடிக் கொண்டு போனான்.
 ஆனால், தங்கராசுவுக்கோ அவன் தன்னை எண்ணியேப் பாடிக் கொண்டு போனது போலிருந்தது.
 தன்தோளின் மீது யாரோ கையை வைப்பது தெரிய நிமிர்ந்துப் பார்த்தான் தங்கராசு. எங்கும் இருட்டு கூடியிருந்தாலும், நிழல் வடிவமாய் பாண்டி இவன் எதிரில் நின்றிருந்தான்.
 தங்கராசு பதறி எழுந்தான். இந்நேரத்துக்கு சாப்பிட்டுவிட்டு படுத்திருக்க வேண்டியவன், இங்க எதுக்காக வந்தான் ஒருவேளை வீட்டில் யாருக்காவது சேட்டமில்லயோ?
 - தொடரும்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com