என்  பிருந்தாவனம்! - 20

தங்கராசுவுக்கும் பொண்டாட்டியோடு சினிமா பார்க்க ஆசைதான். ஆனால் வருகிற நேரத்துக்கு  பஸ் எதுவும்  இல்லை வெள்ளாமைகளும், தோப்புகளும் நிறைந்த காட்டுப்பாதை.
என்  பிருந்தாவனம்! - 20


தங்கராசுவுக்கும் பொண்டாட்டியோடு சினிமா பார்க்க ஆசைதான். ஆனால் வருகிற நேரத்துக்கு  பஸ் எதுவும்  இல்லை வெள்ளாமைகளும், தோப்புகளும் நிறைந்த காட்டுப்பாதை.  யாரும் அந்த ஊரில்  கணவன், மனைவியாக சினிமாவிற்கு  போவதில்லை.  ஏதாவது  சாமி படம் வந்தால் மட்டுமே கிழவி, குமரியென்று வயது  வித்தியாசமில்லாமல்  மாட்டு வண்டிகளைக் கட்டிக் கொண்டு  சினிமாப் பார்க்கப் போவார்கள்.

தங்கராசு,  அதை எடுத்து சொன்னபோது, கௌசிகா  ஒரேடியாக மறுத்தாள்.  

""புருஷனும், பொண்டாட்டியும்  சினிமாவுக்குப்  போகும்போது, யாராவது  கூட ஒருத்தரைக் கூட்டிக் கொண்டு  போவார்களா?  உங்கள்  ஊரில் எல்லாம் வித்தியாசமாகத்தான்  இருக்கிறது'' என்று  கேலி செய்து சிரித்தாள்.  பிறகு, ""நாம் இருவரும், இன்னைக்கு கண்டிப்பாக  சினிமாவுக்குப் போகிறோம் என்ன'' என்று கெஞ்சலும், கொஞ்சலுமாய் சொன்னபோது தங்கராசுவால் மறுக்க இயலவில்லை.

அவன் அம்மாவிடம்போய்  இந்த விஷயத்தைப் பற்றி சொன்னதும்,  சங்கரி பெருமூச்சுவிட்டாள்.

""பாத (ரோடு) சரி இல்லையேப்பா,  காத்தும், கருப்பும்  அலையிற இடம். அதிலயும்  களவாணிப் பயக  வேற சாமமும்,  ஏமமும்  வெளஞ்ச  வெள்ளாமைய மட்டுமில்ல, தோப்புல  காயி, கனின்னு  என்னத்தாயாவது  களவாங்கணுமின்னு அலயிதாக. நீ ஒத்தையா, பொம்பளபுள்ளயோட போவணுமிங்கிற, என்னம்மோ என் மனசுக்கு இது சரியாய்  படல.  சரி மாட்டு வண்டியக்கட்டிக்கிட்டு போவலாமில்ல'' என்று  சொன்னபோது, கௌசிகா, ""அய்யய்ய  மாட்டு வண்டியா? அது சுத்த போருங்க  சைக்கிள்ல உங்கப் பின்னால உக்காந்துக்கிட்டு  ஜாலியா  சுத்திப் பாத்துக்கிட்டு  போற மாதிரி இருக்குமா?'' என்று கௌசிகா சொன்னது ஞாபகம் வர, ""இல்லம்மா  அவ, சைக்கிள்ல்லதேன்  போவணும்மின்னு சொல்லுதா'' என்றான்.

""உன்  பொண்டாட்டிதான்  தான்புடிச்ச   முயலுக்கு  மூணு காலுன்னு சொல்லுவாளே.  நம்ம  சொன்னா  கேக்கவா போறா  சரி என்னம்மோ  பதனமா கூட்டிட்டுப் போயிட்டு வா''  என்றாள்  கவலையோடு.

சினிமாவுக்கு  போவதற்கென்றே  அழகாக சிங்காரித்திருந்தாள் கௌசிகா. அவள் சிங்காரித்திருந்த அழகைப் பார்த்தபோது,  தங்கராசுவுக்கு சினிமாவிற்கே போக வேண்டாமென்று  தோன்றியது. ஆசையும்,  காதலுமாக அதைப்பற்றி  அவளிடம்   சொன்னபோது, முகத்தை   தூக்கி வைத்தவாறு, ""ஆமாமா களத்துக்குப் பிஞ்சைக்கு  காவலுக்குப் போவணுமின்னு சொன்னாமட்டும் எப்படி ஓடுறீங்க''  என்று சொன்னதோடு   கோபமாக  ஒரு மூலையில்  போய் உட்கார்ந்து கொண்டாள்.

""இனி அவளை  சமாதானப்படுத்துவது  கஷ்டமென்று நினைத்தவன், சரி புறப்படு  கௌசி''  என்று அம்மாவிடம்  வந்து சொன்னபோது,  கௌசியும் கூடவே வந்தாள். இருவரும்  சங்கரியிடம்  சொல்லிவிட்டு  சைக்கிளில்  ஏறி புறப்பட்டபோது,  சங்கரி கவலையோடு  அவர்கள் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரைவிட்டு கொஞ்சம்  தூரம்  போன உடன் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த  கௌசிகாவிற்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. காற்று சிலு, சிலுவென்று  வீசியது. சூரியன் மேற்கு வானத்தில் இறங்கிக் கொண்டிருந்ததால்,  பூமியெங்கும்  பொன்னொளியாக  மாறிக் கொண்டிருந்தது.  இரைத் தேடப் போன  பறவைகள்  எல்லாம்  கூச்சலிட்டவாறு வானத்தில் பறந்து  வரும் நேர்த்தியைப்  பார்த்து அவளும் ஒரு பறவையாக மாறி குதூகலித்தாள்.  அவன் தோளில்  கை போட்டவாறு,  அவன்முதுகில், தன் கன்னத்தைத் தேய்த்தபோது,  தங்கராசு  சைக்கிளில்  கொஞ்சம் தடுமாறினாலும் கூட அவனுக்கும் இது ஒரு புது அனுபவமாயிருந்தது. மனதிற்குள்  கௌசிகாவின் மீது இருந்த ஆசையும்,  காதலும்  அளவுக்கதிகமாகப் பெருகியது.

"நல்ல வேள நானு இந்தப் பட்டிக்காட்டுல  இருக்கப் பொண்ணக் கட்டல, அப்படி கட்டியிருந்தா அவ இப்படி என் கூட சினிமா பார்க்க  சைக்கிள்ல வருவாளா? இப்படி  கட்டி அணைப்பாளா?  வேலையே  கதின்னு  என்னையும் வேல செய்ய சொல்லி  மூலையில  முடங்கிக்கிடப்பா'  என்று  நினைத்துக் கொண்டே இன்னும்  அழுத்தம்  கொடுத்து  சைக்கிளை  மிதித்தான்.

ரோட்டில்  வேலைக்குப் போன ஆண்களும்,  பெண்களும்  இவர்களை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டே போனார்கள்.  இவர்களுக்குப் போட்டியாக  ஒன்றிரண்டு சைக்கிள்களும்,  மாட்டு வண்டிகளும் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தன.

தியேட்டரில்  கிராமத்து  ஆட்கள்தான் கூடியிருந்தார்கள். கௌசிகாவையும், அவள் அலங்காரத்தையும்  அதிசயமாகப் பார்த்தார்கள்.  ஒருவேள  சினிமாவில் வருகிறவள்தான் இப்படி  கொட்டகைக்கு  முன்னால்  வந்துவிட்டாளோ  என்று கூடி,  கூடி  கிசு, கிசுப்பாக பேசினார்கள்.  டிக்கெட்  எடுத்துக் கொண்டு வந்தான் தங்கராசு.

சினிமா விட்டப்பின்  இருவருக்கும்  ஏன் சினிமாவிட்டார்கள்  என்று இருந்தது. 
""மீண்டும்  இரண்டு  டிக்கெட்  வாங்கி  இரண்டாவது  ஆட்டம் பார்ப்போமோ?'' என்று  கௌசிகா கேட்க, தங்கராசு  கஷ்டப்பட்டு தன் ஆசையை அடக்கினான். இரண்டாவது ஆட்டம்  பார்த்துவிட்டுப் போனால்  விடியும்  நேரமாகிவிடும். அம்மா வேறு  வருத்தப்படுவாள். பகலில்  வேலை  செய்யவும் கஷ்டமாயிருக்கும் என்று  நினைத்தவன்  இன்னொரு நாளைக்கு வரலாமென்று அவளை  சமாதானப்படுத்தினான்.  பிறகு, ஓட்டலுக்குப் போய் புரோட்டா,  பால் வாங்கி  சாப்பிட்டார்கள். அவர்கள் டவுனை விட்டு புறப்பட்டபோது  இரண்டாவது  படம் ஆரம்பித்திருந்தது.

பௌர்ணமிக்காக வளர்ந்து கொண்டிருந்த நிலா.  வானத்தில் மேகங்களையெல்லாம்  புறம் தள்ளிவிட்டு  தன்னந்தனியாக  உலா வந்து கொண்டிருந்தது.  கொட்டியப் பாலாய்  நிலமெங்கும்  நிலவின் வெளிச்சம் பரவியிருந்தது.  ரோட்டில்  ஒரு மனிதர்களைக் கூட காணோம்.

""கொண்டாங்க  சைக்கிளை  நான் ஓட்டுறேன்'' என்று  கௌசிகா  சொன்னதும், தங்கராசு  ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டான்.

"" என்ன நீ சைக்கிள் ஓட்டுவியா?''

""பின்ன, நான் காரே ஓட்டுவேன்.  உங்க பட்டிக்காட்டுல என்னத்த ஓட்டுறது'' என்றவள்.   அவனை உட்கார வைத்து மிதித்தாள்.  ரோட்டின்  வலது
புறம்  குறுக்கே  ஒரு பெரிய ஓடை  மணல் சரிவோடு ஓடியது, ஓடையின் இருபக்கமும்  வரிசையாக  நிறைய மரங்களும் , செடிகளும்  அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

இத்தனை மரங்கள், செடிகள் இருந்ததால், காட்டுப் பூக்களின் வாசம் நெஞ்சை அள்ளியது.

கௌசிகா,  தங்கராசுவை  இறங்கச் சொல்லி தானும்  இறங்கினாள்.  நிலவின் வெளிச்சத்திற்கு ஓடைமணல்  வெள்ளித் துகள்களாக மின்னின. மரத்தின் இலைகளினூடே  நிலவு புகுந்து  கண்ணாமூச்சுக் காட்டிக் கொண்டிருந்தது.

கௌசிகா  ஓடைக்குள்  இறங்கி ஓடினவள், அப்படியே  கிறு,கிறுமாம்பழம் சுற்றினாள்.  அவள் முகமே நிலவாக பூத்திருந்தது.  

தங்கராசும் அவள் பின்னாலேயே ஓடினான். அந்த நேரத்திற்கு ஓடையும், மணலும்  வானத்தின்  நடுவிலிருந்த  நிலவும் அழகாய்தான் இருந்தது தங்கராசுவிற்கு.  

ஆனால், ஹோவென்ற அந்த தனிமையும், நிலவின் வெளிச்சம் புகமுடியாத இடங்களில் இருந்த இருட்டும்.  அந்த இருட்டுக்குள் கேட்ட வித்தியாசமான உறுமல் சத்தமும், அவனை பயமுறுத்தியது.

அதோடு , அம்மா  சொன்ன காத்தையும்,  கருப்பையும்  நினைத்து  அவன் பயப்பட்டான்.  கௌசிகாவின் கொலுசு சத்தம் கேட்டபோதெல்லாம் வேறொரு கொலுசு  சத்தமும்   கேட்பது  போலிருந்தது அவனுக்கு.  அதேபோல்  அவள் சிரிக்கும்போது  அடர்ந்த கத்தாழை செடிகளினூடே  இன்னொருப்  பெண்ணும்  சிரிக்கும் சத்தம் கேட்டது.

தங்கராசு  இந்த அமானுஷ்ய  ஒலிகளுக்குப் பயப்படவில்லை என்றாலும்,  தன் பெண்டாட்டிக்காக  பயந்தான். 

இரண்டொரு  தங்க  நகைகளே  அணிந்திருந்தாலும்,  மரிக்கொழுந்து  நிறத்தில் சேலையும், லவுக்கையும்  பசுமை நிறத்திலிருந்தாள்  கௌசி.  தலைநிறைய மெட்டாக சூடிய  பிச்சிப்பூ  அப்போதுதான் வானத்து  நட்சத்திரங்களாக மொட்டவிழ்ந்து  மணம் வீசி அந்த இடத்தையே  ஆக்ரமிப்பு  செய்ய, இப்போது அவளே ஒரு தங்க ஆபரணமாக விளங்கினாள்.  அதுதான் அவனுக்குப் பயமாயிருந்தது. 

அம்மா சொன்னது போல் நாலைந்து பேர் களவாணிகள்  இந்நேரத்துக்கு   வந்துவிட்டால்,  தன்னால்  என்ன செய்ய முடியும்?  இரண்டு, மூன்று பேரை வேண்டுமானால் அவனால்  சமாளிக்க முடியும். அதுகூட கஷ்டம்தான். தான் என்ன சினிமா ஹீரோவா?

களவாங்க வந்தவர்கள் அவளையே களவுப் பொருளாக ஆக்கிவிட்டால்.. என்று நினைக்கும்போதே  அவன் மனதுக்குள்  திடுமென்று  ஒரு பாறாங்கல் விழுந்ததைப் போலிருந்தது.

 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com