நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மருந்தில்லா வாழ்க்கைக்கு... 

உலகமெங்கும் கரோனா தீநுண்மி நோய்க் கிருமி தொற்று பாதித்துள்ள இன்றைய சூழ்நிலையில் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் பாலிவுட் நடிகையும், தொழில் முனைவோரும்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 12:30 am

பூா்ணிமா

உலகமெங்கும் கரோனா தீநுண்மி நோய்க் கிருமி தொற்று பாதித்துள்ள இன்றைய சூழ்நிலையில் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் பாலிவுட் நடிகையும், தொழில் முனைவோரும், உடல் நல ஆலோசகருமாக விளங்கும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இயற்கை வாழ்வியல் ஆலோசகர் லூக் கோல்டின்ஹோ என்பவருடன் இணைந்து "தி மேஜிக் இம்யூனிடி பில் - லைப் ஸ்டைல்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

"சாதாரண வாழ்க்கைக்கு தேவை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகள், உடற்பயிற்சி, தியானம், நல்ல தூக்கம் போன்றவைகளே போதும்' என்று கூறும் இப்புத்தகத்தில் நல்ல வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இது தவிர சாதாரணமாக ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடி நிவாரண முறைகளும் உள்ளன. இப்புத்தகத்தை எழுதியதற்கான காரணத்தையும், பொது முடக்கத்தின்போது குடும்பத்துடன் எப்படி தினசரி வாழ்க்கையைக் கழித்தேன் என்பது பற்றியும் ஷில்பா ஷெட்டி கூறுகிறார்.

""நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படை தேவை நோய் எதிர்ப்பு சக்தியே. உடல் வலுவாக இருப்பதற்கும், நீண்ட நாள் வாழ்க்கைக்கும் முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி, நல்ல தூக்கம் அவசியமாகும். நோய் எதிர்ப்பு சக்தி முக்கியமென்பதற்காகவே நானும், லூக் கோல்டின்ஹோவும் இணைந்து பல ஆய்வுகள், அனுபவங்களைக் கேட்டறிந்து, இது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இப்புத்தகத்தை எழுதினோம். இதைப் படிப்பவர்கள் சுலபமாக கடைப்பிடித்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

என்னைப் பொருத்தவரை இந்த பொதுமுடக்கத்தின்போது தினசரி வாழ்க்கையை எப்படி துவங்க வேண்டுமென்பதை பட்டியலிட்டு துவங்குவேன். காலை 8.30 மணி முதல் 10 மணி வரை மகன் மற்றும் புதிய வரவான மகளுடன் நேரத்தை செலவழிப்பேன். பின்னர் யோகா, மதியம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். பகல் நேரத்தில் உடல் நல ஆலோசனை, யோகா குறித்து எனக்கு வரும் போன் கால்களை கவனிப்பதற்கு நேரம் சரியாக இருக்கும். மாலையில் 15 நிமிடம் தியானம். இரவு குடும்பத்தினருடன் டின்னர். 10.30 மணிக்கெல்லாம் உறங்கச் செல்வோம். இதுதான் என்னுடைய தினசரி வாழ்க்கை.

உணவு விஷயத்தைப் பொருத்தவரை நல்ல சத்துள்ள உணவுகளை விதவிதமாக ருசியுடன் சமைப்பதுண்டு. நோய்த் தோற்று ஏற்படாமலிருக்க காலையில் இஞ்சி, துளசி, பட்டை, மிளகு, நெல்லிக்காய், மஞ்சள், வெல்லம் கலந்த நீரை கொதிக்கவைத்து பின்னர் ஆறியவுடன் குடிப்போம்.

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய், துளசி, இஞ்சி சேர்ந்த கலவையுடன் சிறிது உப்பு சேர்த்து அருந்தலாம். அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு சீரகம், தனியா, சோம்பு ஆகியவைகளை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பது நல்லது.

என்னுடைய மகன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவனை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. இப்போது வீட்டிலேயே இணையதளம் வழியே பாடங்கள் நடத்தப்படுவதால், அவனுக்குத் தேவையான பாடங்களை நானும், என் கணவரும் சேர்ந்து கற்றுத்தரும் பொறுப்பை ஏற்றுள்ளோம்.

நமக்கு எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் தியானம் செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் சீரான ரத்த ஓட்டம் கிடைப்பதோடு தளர்வுறும் நரம்புகள் வலுப்பெறும், என்னுடன் இணைந்து இப்புத்தகத்தை எழுத உதவிய லூக், ஊட்டச்சத்து ஆலோசகர் என்ற முறையில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

எனக்கும் அவருக்கும் தத்துவங்களில் நம்பிக்கை உண்டு. சத்தான உணவுகளை பரிந்துரை செய்வதில் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு. இருவரும் பல கருத்தரங்கங்களில் பங்கேற்றும், பலரது கருத்துகளை கேட்டறிந்தும் ஆய்வு செய்து இப்புத்தகத்தை எழுதியுள்ளோம். இதற்காக ஆதாரப்பூர்வமாக நாங்கள் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியதாயிற்று.

எங்களுடைய முயற்சி வீண் போகவில்லை. புத்தகத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஒரே மாற்றும் நானும் என் கணவரும் சைவ உணவு பழக்கத்திற்கு மாறியதுதான். யோகா செய்வதற்கு கூடுதலாக நேரம் கிடைத்திருக்கிறது'' என்கிறார் ஷில்பா ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.