/

மெனோபாஸ் நெருங்குகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை!

வீ ட்டிலேயே இருக்கும் பெண்களுக்கும்  பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் வெவ்வேறு நிலைகளில் உடல் உபாதைகள் பல இருந்தாலும், இருசாராருக்கும் இதில்  இருக்கும் ஒரே ஒற்றுமை மூட்டுவலியாகத்தான் இருக்கும்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 1:18 pm

வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் வெவ்வேறு நிலைகளில் உடல் உபாதைகள் பல இருந்தாலும், இருசாராருக்கும் இதில் இருக்கும் ஒரே ஒற்றுமை மூட்டுவலியாகத்தான் இருக்கும். பணி நேரங்களில் நின்று கொண்டு வேலை செய்யும் சூழல், வீட்டில் அதிக வேலை என்ற காரணங்களையெல்லாம் கடந்து, சும்மாவே அமர்ந்திருந்தால் கூட, அனைத்துப் பெண்களும், குறிப்பாக மெனோபாசை நெருங்கும் 45 வயதுப் பெண்கள் முதல், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள், வயதானவர்கள் என்று அனைவரையும் பாடாய்ப் படுத்திவிடுகிறது இந்த மூட்டுவலி. இது சாதாரண மூட்டு வலியாக இருக்கலாம் அல்லது கீல்வாதம் (Osteoarthritis) எலும்புப்புரை நோய் (osteoporosis) முடக்குவாதம் (rhumatoid athritis) உள்ளிட்ட வேறேதேனும் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.

வரும் காலங்களில், உடல் ஊனத்திற்கான காரணங்களுள் நான்காவது காரணமாக மாறிவிடும் என்று மருத்துவ அறிவியல் கணக்கெடுப்புகள் எச்சரித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு, பொது சுகாதார சிக்கலாக உருமாறியிருக்கிறது இந்த மூட்டுவலி. இதற்குக் காரணம், பெண்களின் பருவ வயதில் துவங்கி, நடுத்தர வயதில் ஏற்படும் வைட்டமின் D, வைட்டமின் E, கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு, மேலும் பல நுண்ணூட்டங்கள் மற்றும் பேரூட்டங்களின் தொடர் குறைபாடு, ஒழுங்கற்ற உணவுமுறை, மேற்கூறிய எலும்பு மற்றும் மூட்டுகள் தொடர்பான நோய்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக பார்த்துப் பார்த்து உணவுகளை செய்துகொடுக்கும் பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க மறந்துவிடுவது வேதனையான ஒன்று. ஏற்கெனவே, சத்துக்களின் குறைபாட்டில் இருக்கும் பெண்கள், மாதவிடாய் நிற்கும் காலம் நெருங்கும்போது, எலும்புகளின் பலத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் குறைந்துவிடுவதால், எலும்புகள், மூட்டுகள் இருக்கும் கை, கால், கழுத்து, முதுகு, இடுப்பு, கால் மூட்டுகள் என்று அனைத்து இடங்களிலும் தேய்மானம் ஏற்படுவதால், வலியையும் வேதனையையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கால்களிலுள்ள மூட்டுகளின் குழிகளில் காணப்படும் மூட்டுறை திரவம் (Synovial fluid) என்னும் வழுவழுப்பான நீரே, மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் உருவாகும் உராய்வினைக் குறைக்கிறது. மூட்டுகளின் தேய்மானத்தால், இந்த திரவத்தின் அளவு குறைகிறது. இதனால் ஏற்படும் உராய்வினால் சிறிய சப்தத்துடன் கடுமையான வலியும் ஏற்படுகிறது.

மூட்டு வலியின் போது, வலி மட்டுமே அறிகுறியாக இருக்காமல், அதனுடன் சேர்ந்து, வீக்கம், மூட்டைச் சுற்றிலும் இறுக்கமாக இருத்தல், சிவந்துவிடுதல், சில நேரங்கள் இலேசான சூட்டுடன் இருத்தல், காலை நீட்டவும், மடக்கவும் முடியாமல் சிரமப்படுதல், ஒரு நிலையில் நிற்க முடியாமல் கால் தடுமாற்றம் அல்லது நடுக்கம், நடப்பதற்கு முயலும்போதும் அல்லது அமர்ந்த இடத்திலேயே காலை அசைக்கும்போதும் மூட்டுகளில் உராய்வு சப்தம் ஏற்படுதல் போன்றவைகளும் காணப்படும். இதில் ஏதாவது ஒன்று இருந்தாலே, அதனால் ஏற்படும் சிரமம் அதிகம் என்ற நிலையில், சிலருக்கு அனைத்துமே சேர்ந்து பாடாய்ப்படுத்திவிடும். வலியைப் போக்க முடியாமலும், தாங்கிக் கொள்ள முடியாமலும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தவித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இவற்றுடன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், பிற சிறுநீரக நோய்கள் போன்றவைகளும் சேர்ந்திருந்தால், சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான வேதனையிலிருந்து விடுபட வேண்டுமென்றால், உரிய மருத்துவ சிகிச்சையுடன், சரியான உணவு முறையையும் கடைப்பிடித்தால் நிச்சயம் பலன் காணலாம்.

உணவு நேரத்தை சரியாகக் கடைப்பிடிப்பதுதான் முதலில் செய்யக்கூடிய செயல். நேரம் தவறும்போது, மூட்டுவலியுடன் வயிற்றுப்புண், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, தேவையான செரிமான நொதிகள் சுரப்பது தடைசெய்யப்பட்டு, செரிமானக் கோளாறுகள் ஏற்படும்போது, மற்ற நோய்களும் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், மூட்டுவலியையும் அதிகப்படுத்திவிடும். உணவு நேரத்தை மூன்றாகப் பிரிக்காமல், ஆறு வேளை அல்லது எட்டு வேளை உணவாக, சிறிது சிறிதாக சாப்பிடும்போது, இந்த நோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளையும் ஓரளவிற்குத் தவிர்த்துவிடலாம்.

உணவும் எளிதாக செரிமானமடைந்து, தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் மற்றும் வாயு நீக்கப்பட்டு, வயிறு மற்றும் குடல் தொடர்பான சிறு உபாதைகளும் நோய்களும் தவிர்க்கப்படும். இதனால், மூட்டு வலிக்காகக் கொடுக்கப்படும் சிறப்பு உணவுப்பொருள்களின் சத்துக்கள் எளிதாக செரிமானமடைந்து ரத்தத்தில் கலப்பதற்கு உதவியாக இருக்கும்.

கிழங்கு வகைகளான உருளை, கருணை, மரவள்ளி, சர்க்கரைவள்ளி போன்றவற்றையும், வாழைக்காயையும், பார்த்தாலே வேண்டாமென அலறும் பெண்களும் இருக்கிறார்கள். இவற்றிலுள்ள ஆலிகோசாக்கரைட்ஸ் என்னும் பொருள் வாயுப்பிடிப்பை ஏற்படுத்துகிறது என்றாலும், வேகவைத்த பின்பும், சோம்பு, இஞ்சி, மிளகு, பூண்டு போன்ற பொருள்களை சேர்த்து சமைக்கும்போதும், அந்த வாயுப்பொருள் குறைந்துவிடுகிறது. இருந்தாலும் மூட்டுவலி தொடர்ச்சியாக இருக்கும் நிலையில், இதுபோன்ற கிழங்குகளையும், காய்களையும் தவிர்க்க வேண்டும்.

இதுதவிர, பருப்பு உணவுகளும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் நிலையில், மூட்டுவலியையும் அதிகப்படுத்திவிடும். இதை பெரும்பாலான பெண்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். அதை சரியாகக் கவனித்து பருப்பு உணவுகளை சிறிது நாள்களுக்குத் தவிர்த்துப் பார்க்கலாம். குறிப்பாக துவரம் பருப்பு வலியையும் வீக்கத்தையும் அதிகப்படுத்தும் நிலையில், அடிக்கடி சாம்பார், பருப்பு, கூட்டு போன்றவற்றைத் தவிர்த்து, வலி எவ்வாறு இருக்கிறது என்றும் ஆராய்ந்து அதற்கேற்றபடி உணவை எடுத்துக்கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் கொதிக்க வைத்த நீரில், எலுமிச்சைச் சாறு, ஓமம், சீரகம், சோம்பு, மிளகுத் தூள், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற பொருள்களில் ஏதாவது ஒன்றினை சேர்த்து குடிக்கலாம்.

இந்தப் பொருள்கள், Inflammatory factors என்னும் வலி ஏற்படுத்தக் கூடிய காரணிகளைக் குறைப்பதற்கு உதவி செய்பவை. பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி போன்ற கொட்டையுணவுகளில் ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் உ யும் நிறைவாகக் கிடைப்பதால், தொடர்ச்சியான மூட்டுவலியால் அவதிப்பட்டு, உடலிலுள்ள சத்துக்களும் குறைந்து, உடல் நலிவடைந்துள்ள நிலையில் இருக்கும் பெண்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் தினந்தோறும் தவறாமல் கொட்டையுணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றிலிருக்கும் நுண்சத்துக்கள், மூட்டுறை திரவ நீரின் அளவை சிறிது சிறிதாக அதிகரித்து, மூட்டுகளின் இடையில் பசைத் தன்மையைக் கொடுத்து, உராய்வைக் குறைத்து, வலியைக் குறைக்கிறது.

( அடுத்த இதழில்)

- ப. வண்டார்குழலி இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.