வெளிச்சத்தை நோக்கிய பயணம்!

உலகில் எத்தனையோ பேர் பிறந்து வளர்ந்தாலும் சமூகத்துக்கும், மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
வெளிச்சத்தை நோக்கிய பயணம்!


உலகில் எத்தனையோ பேர் பிறந்து வளர்ந்தாலும் சமூகத்துக்கும், மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. உடலில் எந்தக் குறையுமின்றி முழு ஆரோக்கியத்துடன் உள்ள மனிதர்களே வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் சோர்ந்து வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்நிலையில் தனது 5 வயதிலேயே இரு கண் பார்வையையும் இழந்த நிலையிலும், குடும்ப வறுமை துரத்தியபோதும் மனம் கலங்காமல் போராடி நாட்டின் மிக உயர்ந்த தேர்வான ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் வெற்றி பெறத்துடிக்கும் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி.

மேலும் தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் என்ற சாதனையை படைத்தது மட்டுமின்றி ஐஏஎஸ் தேர்வை தமிழிலேயே எழுதி வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மதுரை மணி நகரம் பகுதியில் தந்தை முருகேசன், தாய் ஆவுடை தேவி, சகோதரர் சரவணன் ஆகியோருடன் மிகச் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 2019-இல் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட பணிகளுக்கானத் தேர்வில் 286-ஆவது இடத்தைப்பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஐஏஎஸ் தேர்வில் தனது அனுபவம், சந்தித்த சவால்கள் குறித்து பூரணசுந்தரி கூறியது:

""எனது குடும்பம் மிக எளிய குடும்பம். வீட்டில் எனது தந்தையின் வருமானம் மட்டுமே. இந்நிலையில் எனது 5 வயதில் இரு கண்களிலும் பார்வை பறிபோனது. ஆனாலும் மனம் தளராமல் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்து வந்தேன். மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள கே.என்.பி.என். பிள்ளைமார் சங்கப் பள்ளியில் படித்தேன். அங்கு எனது ஆசிரியைகள் என்மீது காட்டிய அக்கறையும், சிறப்பு ஆசிரியை பிரெய்லி முறையில் படிப்பதை கற்றுத்தந்ததாலும் பிளஸ் 2 வரை சிறப்பாக படிக்க முடிந்தது.

பின்னர் பாத்திமா மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தேன். டிஎன்பிஸ்சி தேர்வுகள், வங்கித்தேர்வுகளுக்குப் படித்து வந்தேன். அப்போதுதான் ஐஏஎஸ் தேர்வு பற்றி அறிந்துகொண்டேன். கல்லூரியில் பேராசிரியைகள் அளித்த ஊக்கத்தால் ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகத் தொடங்கினேன்.

2015-இல் கல்லூரியின் மூன்றாமாண்டில் படித்தபோது, போட்டித்தேர்வு மூலம் அரசுப்பணி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஐஏஎஸ் தேர்வை இலக்காக கொண்டிருந்ததால் அந்தப் பணியில் சேரவில்லை. தொடர்ந்து தயாராகி வந்த நிலையில் இரண்டு முறை ஐஏஎஸ் தேர்வில் தொடக்க நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளில் வெற்றி பெற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாதலால் ஐஏஎஸ் வெற்றி கைநழுவிப் போனது.

இதில் மனம் சோர்ந்த நிலையில் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன் மீண்டும் தேர்வுக்கு தயாராகினேன். இதற்கிடையில் 2018-இல் போட்டித்தேர்வு மூலம் அரசு ஊரக வங்கியில் வேலை கிடைத்தது. குடும்பச்சூழலால் வங்கிப்பணியில் சேர்ந்தேன். பின்னர் மீண்டும் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகினேன். பணியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு 4-ஆவது முறையாக 2019-இல் தேர்வு எழுதினேன். இதில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கடந்த பிப்ரவரி மாதம் நேர்முகத் தேர்விலும் பங்கேற்றேன். இதற்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 286-ஆவது இடத்தில் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளேன். எனது வெற்றிக்கு பின்னால் பலரின் பங்களிப்பு உண்டு. அவர்களது பங்களிப்பு, உதவியின்றி என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது. சென்னையில் உள்ள சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளை எனக்கு ஒன்றரை ஆண்டுகள் தங்குமிடம், உணவு, ஐஏஎஸ் பயிற்சி, புத்தகங்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பெரும் உதவியைச் செய்தது.

ஐஏஎஸ் தொடக்க நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், சென்னை அடையாறில் உள்ள அரசு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் நான் தங்கிப்படிப்பதற்கான உதவிகளைச் செய்தது. மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், கீர்த்தி பிரியதர்ஷினி, தமிழிலேயே ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற இளம் பகவத் மற்றும் பலர் தேர்வுக்குத் தயாராவது தொடர்பாக ஆலோசனை வழங்கி உதவிகள் செய்தனர்.

இதனால் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்ற நுட்பத்தை அறிந்து கொண்டேன். மேலும் சங்கர் ஐஏஎஸ் அகாதெமி, ஐஏஎஸ் பயிற்சியாளர் சிபிகுமரன் ஆகியோரும் உதவிகளை செய்தனர். சென்னையில் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நாகார்ஜுனா எனது நிலையை அறிந்து, 4 ஆண்டுகளுக்கும் மேலாக மாதா, மாதம் பண உதவிகளைச் செய்து வந்தார்.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் நண்பர்கள் பலர் தாங்கள் படிக்கும் பாடங்கள், குறிப்புகளை குரல் பதிவு செய்து எனக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பதிவை கேட்டு நானும் தேர்வுக்கு தயாராகி வந்தேன்.

மேலும் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட என்விடிஏ( நான் விசுவல் டெஸ்க்டாப் அக்சஸ்) என்ற தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வந்தேன். ஐஏஎஸ் தேர்வில் எனக்கு தேர்வு உதவியாளர்களை தேர்வாயாணையமே நியமித்திருந்தது.

அவர்கள் கேள்விகளை வாசிக்க நான் அதைக்கேட்டு பதிலைத் தெரிவிக்கும்போது அவர்கள் அதை எழுதுவர். இதுபோல பலர் எனக்கு உதவி செய்ததால் எனது கனவு இன்று சாத்தியமாகி உள்ளது.

இதேபோல எனது பணியில் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வரலாறு, பொருளாதாரம், இந்திய அரசியல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பற்றி நன்றாகத் தெரிந்திருந்திருப்பது அவசியம்.

மேலும் நடப்பு நிலவரம், பொது அறிவு ஆகியவற்றிலும் இருந்து அதிகம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே செய்தித்தாள் வாசிப்பு மிகவும் அவசியம். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற மன உறுதி, மன ஆளுமை நமக்கு அவசியம் தேவை. நம்மால் முடியாதது எதுவுமில்லை. முயன்றால் அனைத்தும் சாத்தியமே என்பதற்கான உதாரணமாக நான் இருக்கிறேன்'' என்றார்.



ஐஏஎஸ்
சாதனை படைத்தப் பெண்கள்


பண்ருட்டி வட்டம், மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த
ரா. ஜஸ்வர்யா தமிழக அளவில் 2-ஆவது இடம், தேசிய
அளவில் 47-ஆவது இடம்.

பண்ருட்டி வட்டம்,
பண்டாரக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பிரியங்கா தமிழக
அளவில் 3-ஆவது இடம், தேசிய அளவில் 68-ஆவது இடம்.


பண்ருட்டி புதுப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணபிரியா தேசிய அளவில்
514-ஆவது இடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com