ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மனைவிக்கு சிலை...!

கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் நகரம். பெரும் வணிகரான ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, "ஆகஸ்ட் 8-அன்று  புதுமனை புகுவிழா நடத்த உள்ளேன்..

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:23 pm

தினமணி

கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் நகரம். பெரும் வணிகரான ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, "ஆகஸ்ட் 8-அன்று புதுமனை புகுவிழா நடத்தஉள்ளேன்.. அவசியம் வருகை தாருங்கள்' என்று உற்றார் உறவினர்கள், நண்பர்கள் வட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். விழாவுக்கு வந்தவர்கள் அட்டகாசமான அழகிய பங்களாவைப் பார்த்து மலைத்துப் போனார்கள்.

வந்தவர்களை திகைக்க வைத்தது அலங்கரிக்கப்பட்ட ஹாலில் ஸ்ரீநிவாஸின் இறந்து போன மனைவி "மாதவி' அமர்ந்திருந்ததுதான். ஆச்சரியத்தில் உறைந்து போன விருந்தினர்கள்... அருகே போய் "மாதவியை'த் தொட்டுப் பார்த்தார்கள். அப்போதுதான் அது சிலை என்று தெரிந்தது.

சிலிக்கானில் செய்யப்பட்ட மாதவியின் உருவம் மாதவி உயிருடன் இருந்தபோது
எப்படி இருந்தாரோ அதுபோலவே எல்லாவிதத்திலும் அமைந்திருந்தது.

"புதுமனை புகுவிழாவில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது..' என்று ஸ்ரீனிவாஸ் சொன்னது அப்போதுதான் விருந்தினர்களுக்கு நினைவுக்கு வந்தது.

""மூன்று ஆண்டுகளுக்கு முன் காரில் திருப்பதிக்குப் போகும் வழியில் கார் லாரியுடன் மோதி விபத்தில் மாதவி இறந்து போனார். உடன் பயணித்த மகள்கள் இருவரும் சிறிய காயங்களுடன் தப்பித்துவிட்டார்கள். மாதவி இறந்ததும் வீடே
சூன்யமாகிவிட்டது. மாதவி கனவு கண்ட வீடு இது.

வீடு இப்படித்தான் அமைய வேண்டும் என்று ஒவ்வொன்றையும்' சொல்லி என்னைக் கட்ட வைத்தார். மாதவி இறக்கும் போது வீட்டிற்கு அஸ்திவாரம் மட்டுமே எழுப்பியிருந்தேன். மாதவி நினைத்தது போல் வீட்டை பிரமாண்டமாகக் கட்டி முடித்துவிட்டேன். ஆனால் அதைக் கண்டு, வாழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் மாதவிக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் பெங்களூரில் சிலிகான் சிலை செய்பவரிடம் சொல்லி மாதவி போல சிலிகான் சிலை செய்யச் சொன்னேன். அதற்காக கையில் இருந்த மாதவியின் எல்லா படங்களையும் சிலை செய்பவரிடம் கொடுத்தேன் .

சிலையை வடிவமைக்க ஒரு ஆண்டு காலம் அவர் எடுத்துக் கொண்டார். மாதவி உயிருடன் எழுந்து வந்தது போல சிலையை செய்திருக்கிறார். சிலிக்கானில் சிலை செய்தால் தத்ரூபமாக இருக்கும். இறந்த நபரின் நிறத்தைக் கூட சிலையில் கொண்டுவர முடியும் . சிலிக்கான் சிலைக்கு மேக்கப் செய்யலாம். ஆடை அலங்காரங்களைக் மாற்றி உடுத்திவிடலாம். ஆபரணங்களை மாற்ற முடியும். கூந்தலை நாம் விரும்பும் டிசைனில் பின்னிவிடலாம். இந்த வீட்டில் வாழ முடியாமல் போன மாதவியை சிலையாகச் செய்து வரவேற்பு அறையில் அமரச் செய்திருக்கிறேன்.. மாதவியின் சிலை வீட்டில் இருப்பது, மாதவி வீட்டில் வாழ்வது மாதிரியான உணர்வினை எனக்கும் எனது மகள்களுக்கும் தந்துள்ளது'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஸ்ரீனிவாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.