2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கமலா ஹாரிஸின் எதிர் நீச்சல்

​அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கருப்பினப் பெண், இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் நம் தமிழகத்தைப்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 2:07 am

நாகா


அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கருப்பினப் பெண், இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் நம் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா  ஹாரிஸ்.

அந்தப் பதவியில் அவர் நியமிக்கப்பட்டால், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை சாதனைகளையும் ஒருவர் ஒரே நேரத்தில் ஆற்ற முடிகிறதென்றால், அதற்குப் பின்னால் பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் அவர் ஒருசேரத் தாண்டி வந்திருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.

உண்மையில், கருப்பினத்தவர், இந்திய அமெரிக்கர், அதிலும் ஒரு பெண் என்ற காரணங்களால் பல முனை சோதனைகளைச் சந்தித்து, அதில் எதிர்நீச்சல் போட்டுத்தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார் கமலா ஹாரிஸ்.

ஒருவகையில், இத்தகைய போராடும் குணம் அவரது ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

தமிழகத்தின் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, 1950-களிலேயே அமெரிக்கா சென்று, அங்கு தனது எதிர்காலத்துக்காக சளைக்காமல் போராடிய கமலா ஹாரிஸின் தாய் சியாமளாதான், இத்தனை தடைகளையும் தாண்டி அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவிக்கு அடுத்த இடத்துக்கு கமலா ஹாரிஸ் வந்துள்ளதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கிறார். இதனை, தங்களது பிரசார வலைதளத்திலும் கமலா ஹாரிஸ் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். 

"பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, அதுதொடர்பாக குறைகூறிக் கொண்டிருக்காதே; அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடு' என்று தனது தாய் சியாமளா கூறிய வார்த்தைகளை அந்த வலைதளத்தில் கமலா ஹாரிஸ் நினைவுபடுத்தியுள்ளார்.

Story image

கமலா ஹாரிஸூக்கு 7 வயதாக இருந்தபோதே, புற்று நோய் மருத்துவ நிபுணரான அவரது தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸூக்கும் விவகாரத்தாகிவிட்டது. அதன் பிறகு, கருப்பினத்தைச் சேர்ந்த தனது இரு மகள்களையும் தன்னந்தனியாக வளர்த்து ஆளாக்குவதற்கு சியாமளா கோபாலன் நிறையவே போராட வேண்டியிருந்தது.
அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி, கமலா ஹாரிஸூம் இதுவரை எந்த கருப்பின, இந்திய-அமெரிக்கப் பெண்ணும் கனவில் மட்டுமே நினைத்திருக்கக் கூடிய உயரத்தை நிஜத்திலும் எட்டிப் பிடித்திருக்கிறார்.

கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கான தேர்தல்கள் ஆகட்டும், அந்த மாகாண செனட் சபைத் தேர்தல் ஆகட்டும், இந்த போராட்ட குணம்தான் அவருக்கு வெற்றி வாகையைச் சூடித் தந்தது என்றே சொல்லலாம்.

இந்த ஆண்டின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான விவாதத்திலும், அவரது இந்த போர் குணம் நன்றாகவே வெளிப்பட்டது. அவரை துணை அதிபர் வேட்பாளராக தற்போது தேர்ந்தெடுத்துள்ள ஜோ பிடனையே அந்த விவாதங்களின்போது கமலா ஹாரிஸ் தனது காட்டமான சாடல்களால் திக்குமுக்காடச் செய்தார்.

நிறவெறிக்கு எதிரான பிடனின் நிலைப்பாட்டை அப்போது அவர் மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாக்கினார். எனினும், அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிய பிறகு, ஜோ பிடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். தற்போது, விவாதத்தின்போது தன்னை எதிர்த்து சண்டையிட்ட கமலா ஹாரிஸையே துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஒரு வகையில், விவாதத்தின்போது நிற சமத்துவம், பெண்கள் உரிமைக்காக கமலா ஹாரிஸ் எழுப்பிய குரல்தான் அவரை ஜோ பிடன் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக இருந்தது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஜனநாயகக் கட்சி என்பது வெள்ளை இன ஆணுக்கோ, தன்னைப் போன்ற வயதானவர்களுக்கோ உரித்தானது இல்லை என்பதை, கமலா ஹாரிஸைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஜோ பிடன் உணர்த்தியிருக்கிறார். இது, வேட்பாளர் தேர்வு விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்கிறார்கள் அவர்கள்.

ஜார்ஜ் ஃபிளாய்டு படுகொலையால் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான அலை வீசி வருகிறது.

கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்திருந்த இந்திய வம்சாவளியினர், அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நட்புறவு பாராட்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அலையால் தற்போது குடியரசுக் கட்சி பக்கம் சாயலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

இந்த நிலையில், கருப்பினத்தைச் சேர்ந்த - இந்திய அமெரிக்கப் பெண்ணை துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளதன் மூலம், நிறவெறிக்கு எதிரானவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வாக்குகளைக் கவர்ந்து, தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள ஜோ பிடன் முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், கமலா ஹாரிஸின் போராட்டம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் இப்போதே வெளிப்படத் தொடங்கிவிட்டன.

அவர் பிறந்தபோது அவரது தாய் தந்தையர் அமெரிக்க குடிமக்கள் இல்லை என்பதால், துணை அதிபர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை என்று கூறி, டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஏற்கெனவே, முன்னாள் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்ற வலதுசாரிக்களின் கருத்தை டிரம்ப் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். ஒபாமா தனது பிறப்புச் சான்றிதழைக் காட்டிய பிறகு கூட "அது போலியானது' என்றார் டிரம்ப்.

Story image

அந்த வகையில், கமலா ஹாரிஸூக்கு எதிராக டிரம்ப் எழுப்பும் சர்ச்சையும் நிறவாத அடிப்படையிலானது என்று ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க அரசியல் சாசனத்தின் 12-ஆவது சட்டத் திருத்தத்தின்கீழ், நாட்டில் பிறந்து குடியுரிமை பெற்ற யாரும் துணை அதிபராக தகுதி படைத்தவர்கள் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கமலா ஹாரிஸின் அரசியல் பயணம் இத்துடன்  நிறைவடைந்துவிடப் போவதில்லை. உலகிலேயே மிகுந்த சக்தி வாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க அதிபர் பதவி அவருக்காகக் காத்திருக்கிறது எனவும், அதனை அடைவதற்கான முதல் படிதான் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள துணை அதிபர் பதவி வாய்ப்பு என்று பரவலாகக் கருதப்படுகிறது.
ஒருவேளை அந்த உச்சத்தை அவர் அடுத்த அதிபர் தேர்தலில் அடையலாம். ஆனால் அதற்காக அவர் இன்னும் தீவிரமாக எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும்.

தாத்தா  குடியிருந்த  அக்ரஹாரம்

அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கமலா ஹாரிஸ், சிறுமியாக இருந்தபோது தனது முன்னோர்களின் சொந்த ஊரான, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வந்தது தெரிய வந்துள்ளது.  

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன், மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரத்தில் கடந்த 1911-ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள். இவர்கள் சில காலம் துளசேந்திரபுரத்தில் வசித்து வந்தனர். பின்னர், அரசுப் பணிக்காக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் வசித்துவந்தனர்.

இதுகுறித்து, துளசேந்திரபுரத்தில் வசிப்பவரும், கோபாலன் குடும்பத்தை நன்கு அறிந்தவருமான மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற எஸ். ரமணன் கூறியது:

பைங்காநாடு, துளசேந்திரபுரம் இணைந்து ஒரே ஊராட்சியாக பைங்காநாடு ஊராட்சி என்று இருந்தபோது பி.வி. கோபாலன், ராஜம் தம்பதியினர் துளசேந்திரபுரத்தில் வசித்தனர். இவர்களுக்கு சியாமளா, சரளா என 2 மகள்கள்.

இதில், சியாமளா அமெரிக்காவில் படிக்கும் போது, ஜமைக்காவை சேர்ந்த டொனால்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, கமலா, மாயா என்ற 2 பெண் குழந்தைகள். இவர்களில் கமலாதான் தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது கணவரும் வழக்குரைஞர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  கமலா ஹாரிஸ், தனது 5- ஆவது வயதில் ஒரு முறை பெற்றோருடன், துளசேந்திரபுரத்துக்கு வந்து, குலதெய்வ கோயிலில் வழிபட்டுள்ளார். இக்கோயிலின் திருப்பணிக்காக கடந்த 2014- ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் ரூ.5 ஆயிரம் நிதி உதவியை, அவரது சித்தி சரளா மூலம் அளித்துள்ளார். 

இதேபோல, பல ஆண்டுகளுக்கு முன்பு துளசேந்திரபுரத்தில் மடப்பள்ளி கட்ட பி.வி. கோபாலன் நிதி வழங்கியுள்ளார். இதற்கான கல்வெட்டுகள் தற்போது அந்த இடத்தில் உள்ளன என்றார்.

- எஸ்.சித்தார்த்தன்


தாக்கத்தை ஏற்படுத்திய தாத்தாவின் உரையாடல்கள்: கமலா ஹாரிஸ்

சென்னைக்கும் - கமலா ஹாரிஸூக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வாழ்ந்து இருந்தாலும் கமலாவுக்கு சென்னையுடனான தொடர்பு விட்டு போகவில்லை. 

கமலா ஹாரிஸ், அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சென்னைக்கும் தனக்கும் இடையேயான உறவு குறித்து பகிர்ந்து கொண்டிருந்தார். இதில், தன்னுடைய தாய் தனக்கும், தனது சகோதரி மாயாவுக்கும் இந்திய பண்பாடு குறித்து கற்றுக் கொடுத்ததாகவும்,  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா செல்லும் போதும் தன் வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் தாய் மற்றும் தனது தாத்தா பி.வி.கோபாலன் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

கமலாவின் தாத்தா பி.வி.கோபாலன், அரசுப் பணிகளில் இருந்து ஓய்வுக்கு பின்னர், சென்னையில் குடியேறினார். அந்த நேரத்தில், டொனால்டை விவாகரத்து செய்த கமலாவின் தாய் சியாமளா, குழந்தைகளை அழைத்து கொண்டு சென்னை வந்தார். தாத்தாவின் ஓய்விற்குப் பிறகு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அவருடன் நடைபயிற்சி மேற்கொண்டதையும் கமலா பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். கடற்கரை நடைப்பயிற்சியில் தனது சகாக்களுடன் தாத்தா,  அரசியல் குறித்து நடத்திய உரையாடல்கள் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் கமலா, அவை தன்னை நேர்மையான, பொறுப்புள்ள பெண்ணாக மாற்றியதாகத் தெரிவித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமலா ஹாரிஸ், தோசை சுடும் விடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. உலகிலேயே இந்தியா தான் மிகவும் பழைமையான ஜனநாயகத்தை கொண்டுள்ளதாகவும், அதுவே தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளதாகவும் கூறுகிறார் கமலா. 1991-ஆம் ஆண்டு, கோபாலனின் 80-ஆவது பிறந்த நாளை கொண்டாட, சென்னையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்தது, கமலா ஹாரிஸின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றாக உள்ளது. தனது தாத்தா கோபாலன் மரணமடையும் வரை, அடிக்கடி கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்த கமலா, முக்கியமாகத் தனது தாய் சியாமளா 2009-ஆம் ஆண்டு மரணம் அடைந்தபோது அவரது அஸ்தியைக் கரைக்க சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- செ. ஆனந்த விநாயகம்

கலாசாரத்தை மறக்காதவர் கமலா ஹாரிஸ்!: உறவினர் டாக்டர் சரளா நெகிழ்ச்சி

Story image

குடும்ப கலாசாரப் பண்புகளை மறவாமல் இருப்பவர் கமலா ஹாரிஸ் என்று அவரது சித்தியும், மருத்துவருமான சரளா கோபாலன் தெரிவித்தார். அரசியல் களத்தில் அடுத்தடுத்த இடங்களுக்கு கமலா முன்னேறி வருவது பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் சரளா இக்கருத்தை தெரிவித்தார். கமலாவின் பால்ய காலம் முதல் அவரைப் பார்த்து, பழகிய அனுபவங்கள் குறித்து தினமணிக்கு அவர் அளித்த தகவல்:

எனது பெற்றோருக்கு என்னையும் சேர்த்து மூன்று மகள்கள், ஒரு மகன். சிறிய வயதில் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். கல்வி, திருமணம், பணி நிமித்தம் என காலச் சக்கரத்தின் ஓட்டத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைக்குச் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது.

அதன்படி, மருத்துவரான எனக்கு பல்வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் பணியாற்ற வேண்டிய சூழல் உருவானது. எனது அண்ணன் தில்லியிலும், ஒரு சகோதரி கனடாவிலும் குடிபெயர்ந்துவிட்டனர். மூத்த சகோதரி சியாமளாவைப் பொருத்தவரை அவர், இளம் வயதிலேயே அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். 

அவரது மகளான கமலா ஹாரீஸ் அடிக்கடி சென்னைக்கு வருவார். அப்போது பெசன்ட் நகர் சாலையில் தாத்தாவுடன் அவர் நடைப்பயிற்சி மேற்கொள்வார். நான் மருத்துவப் பணிக்காக பல்வேறு இடங்களுக்கு மாறுதலாகி செல்ல வேண்டியிருந்ததால், அந்தத் தருணங்களில் கமலாவுடன் என்னால் அதிக நேரத்தை செலவிட இயலவில்லை.

அதேவேளையில், பல முறை அவரைச் சந்தித்து பேசியிருக்கிறேன், பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். அவரை பார்க்க வேண்டும் என தோன்றினால், உடனடியாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றுவிடுவோம். அமெரிக்க அரசின் பல்வேறு பொறுப்புகளை கமலா வகித்த போது எங்களது மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும். அந்த வகையில் இம்முறை அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பேருவகையைத் தந்தது.

கமலாவின் இத்தனை முன்னேற்றத்துக்கும், வெற்றிக்கும் காரணம் அவரது தாய் சியாமளாதான். இன்றைக்கு அவர் இல்லையென்றாலும், அவரது ஸ்தானத்தில் நாங்கள் கமலாவுக்காக இருக்கிறோம். அமெரிக்காவில் கரோனா தீவிரமாக இருந்தபோது, தொலைபேசியில் அழைத்து கமலாவிடம் நலம் விசாரித்தேன். இப்போது அவர் பிரசாரப் பணிகளில் தீவிரமாக இருப்பதால், ஓரிரு நாள்கள் கழித்து பேசலாம் என எண்ணியுள்ளேன்.

எப்போதும் குடும்பத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும்தான் கமலாவிடம் பேசுவேன். அரசியல் பற்றியோ அவரது வேலைகள் குறித்தோ பேசுவதில்லை என்றார் டாக்டர் சரளா கோபாலன்.

- ஆ . கோபி கிருஷ்ணா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.