மருத்துவமனையில் நூலகம்!

பொன்னேரி அரசு பொது மருத்துவ மனையில் 'எக்ஸ் ரே' எடுக்க ஒரு படத்திற்கு 20 ரூபாயும், உடனிருப்போர் அறையில் நோயாளிகளுக்குத் துணையாக வருபவர்கள் தங்க நாள் ஒன்றிற்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் நூலகம்!
Updated on
2 min read

"பொன்னேரி அரசு பொது மருத்துவ மனையில் "எக்ஸ் ரே' எடுக்க ஒரு படத்திற்கு 20 ரூபாயும், உடனிருப்போர் அறையில் நோயாளிகளுக்குத் துணையாக வருபவர்கள் தங்க மருத்துவமனையில் நாள் ஒன்றிற்கு 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இந்த இரண்டு கட்டணங்களைத் தவிர நீங்கள் வேறு யாரிடத்திலும் பணம் கொடுத்தால் அது லஞ்சம் அல்லது அன்பளிப்பு. லஞ்சம் வாங்குவது மட்டும்
குற்றமல்ல கொடுப்பதும் குற்றமே. சட்டத்திற்கு புறம்பாக, யார் பணம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம்' என்று நோயாளிகளிடம் சொல்லும்
டாக்டர் அனு ரத்னா தனது அனுபவத்தை விவரித்தார்:

""எனக்கு 43 வயாதாகிறது. இத்தனைஆண்டுகளில் ஓர் இடத்தில் கூட நான் யாருக்கும் பணத்தை எந்த வடிவத்திலும் சட்டத்திற்கு புறம்பாக கொடுத்ததில்லை. எனக்கான உரிமைகளைப் போராடி பெற்று இருக்கிறேன்.
உதாரணமாக, உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சிறு வீட்டுமனைக்கு ஒப்புதல் வாங்க கணவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சமீபத்தில் சென்றார். கணவரிடம் கையூட்டு கேட்டுள்ளார்கள். அவர் கொடுக்கவில்லை.
அதனால் ஒப்புதல் தராமல் பலமுறை "நாளைக்கு வாங்க.. அடுத்த வாரம் வாங்க..' என்று அலையவிட்டார்கள்.

எனக்கோ மருத்துவமனையை விட்டுப் போக முடியாமல் வேலைகள் இருந்தன. பலமுறை கணவர் வெறுங்கையுடன் திரும்பி வந்ததால், பத்திரத்தை வாங்கிக் கொண்டு நானே அந்த அலுவலகம் சென்றேன். அந்த அரசு அலுவலக கட்டடத்தின் வாசலில் தனி ஒருத்தியாக கீழே உட்கார்ந்து போராட முடிவெடுத்தேன்.

இதை அறிந்த அரசு அதிகாரி ஒருவர், "" நீங்க தலைமை மருத்துவர். நீங்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபடலாமா... நான் அவர்களிடத்தில் பேசுகிறேன்... நீங்க கிளம்புங்க..'' என்றார்.

""சில தினங்களில் ஒப்புதல் தானாகக் கிடைத்தது'' என்று அதிரடியாகச் சொல்லும் அனு ரத்னா, மருத்துவமனையில் "நூல் வாசிப்பிற்கு' துவக்கம் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை, மருந்து, மாத்திரைதானே கிடைக்கும்... வாசிக்க நூல்கள் கிடைக்குமா என்ன?

அனு ரத்னா விளக்கினார்:

"பிரசவத்திற்கு வரும் பெண்கள் பிரசவத்திற்கு முன்பும் பின்பும் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கியிருப்பார்கள். அப்போது பலவற்றையும் நினைத்து பயப்படாமல் இருக்க நூல்களை வாசிக்கட்டும் என்று தொடக்கமாக நூறு நாவல்களை வாங்கி பிரசவ வார்டில் வைத்தேன்.

பிரசவ வார்டில் சேரும் பெண்கள் பலரும் நூல்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்கள். இது ஊடங்கங்களில் செய்தியாக வர ... கரூர், கோவை இன்னும் தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்தும் புத்தகங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. அவற்றை பிரசவ வார்டின் ஓரத்தில் வைத்தேன்.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்யும் ஆண்களை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு வருவார்கள். அவர்களைக் காப்பாற்றி டிஸ்சார்ஜ் செய்யும் வரையிலான நாட்களில் அவர்களுக்கு தன்னம்பிக்கை வர ... மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாமல் இருக்க .. நூல்களைக் கொடுத்து வாசிக்கச் சொல்வோம். இந்த முயற்சியை அறிந்த நாளிதழ் ஒன்று "தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறு நூலகம் அமைத்துத் தர முன்வந்தது. சுகாதாரத்துறை அமைச்சரிடம் அனுமதியும் பெற்றது.

முதல் முதலாக சென்னை எழும்பூர் மருத்துவமனையின் பிரசவ வார்டில் நூலகம் திறக்கப்பட்டது. "மருத்துவமனையில் நூலகம்' என்ற சிந்தனைக்கு பிள்ளையார் சுழி போட்டது பொன்னேரி மருத்துவமனைதான். இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில் பிரசவத்திற்கு வரும் பெண்கள் நூல்களை ஆர்வமாக வாசிக்கிறார்கள். ஆண்கள் வழக்கம் போல அலைபேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

இது தவிர, தமிழ் மொழியின்மீது ஆர்வம் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் இணைந்து ஒரு வாட்ஸ் ஆப் குழுவைத் "தமிழினி' என்ற பெயரில் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனக் கூடி தமிழ் கவிதைகள் குறித்து விவாதிக்க ஒரு களத்தை எங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இந்தக் குழுவின் முதல் கவிதை நூல் தயாராகி வருகிறது.

"தோசையினா தோசை.. அம்மா சுட்ட தோசை..
அப்பாவுக்கு ஐந்து, தாத்தாவுக்கு நான்கு,
அண்ணனுக்கு மூன்று, அம்மாவுக்கு இரண்டு,
பாப்பாவுக்கு ஒன்று'
என்ற குழந்தைப் பாடலில் கூட பெண்களுக்கு ஆண்களுடன் சமநிலை தரப்படுவதில்லை.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இது குறித்து அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். "அம்மா மட்டும் ஏன் தோசை சுடனும் ..., தோசை சுட்டவருக்கு.. ஏன் தோசை சுடாத அப்பாவுக்குத் தரப்படும் தோசைகளைவிட குறைவான தோசை வழங்கப்படுதுன்னு' கேட்டிருக்கிறேன். அம்மா சிரிப்பை மட்டுமே உதிர்ப்பார். இப்படியே கேட்டதாலோ என்னவோ அம்மா, மகன், மகள் என்ற பாகுபாடு காட்டாமல் வளர்த்தார்.

"பொம்பளபிள்ளைகள் கெத்தா இருக்கனும், நெருப்பா இருக்கணும்' என்பார். அதனால்தான் நான் நானாக இருக்கிறேன்...' என்கிறார் டாக்டர் அனு ரத்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com