சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள்!
காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும்!
-என்று தனது "சந்ததிப் பிழைகள்' கவிதையில் எழுதி இருப்பார் கவிஞர் நா.காமராசன். ஆணுமல்லாது பெண்ணுமல்லாது, இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர் குறித்த கவிதை இது.
சமூகத்தில் மிக அவலமான நிலையில் வாழும் இவர்களை இழிவுபடுத்தக்கூடாது என்ற சிந்தனைகூட அண்மைக் காலமாகத்தான் ஏற்பட்டு வருகிறது. "மாற்றுப் பாலினத்தவரை திருநங்கையர்- திருநம்பியர் என்று அழைக்க வேண்டும்' என்று அரசு உத்தரவு இருக்கிறது. பெயர்மாற்றம் சரிதான். ஆனால், இவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், எங்கே வசிக்கிறார்கள், இவர்களுக்கும் ஆசைகள் இருக்குமா? -இதுகுறித்த சமூக அக்கறையுடன்,
மாற்றுப் பாலினத்தவரின் பொருளாதார நிலை குறித்த தனது கல்வி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த லுப்னா சுரையா.
எழுத்தாளர், சுயமுன்னேற்றப் பேச்சாளர், கல்வியாளர், சமூக சேவகர் என பலமுகங்களுடன் இயங்கிவரும் இவர், சார்க் நாடுகளுக்கான சர்வதேச பொருளாதாரப் பல்கலைக்கழகத்தின் கெளரவ முனைவர் பட்டம்-2018, கலாம் கனவு ஆசிரியர் விருது-2019 உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். இவரது ஆய்வு குறித்து உரையாடினோம். அதிலிருந்து...
மாற்றுப் பாலினத்தவர் குறித்த உங்கள் ஆய்வுக்கு அடிப்படை என்ன?
இதுவரை மாற்றுப் பாலினத்தவர் தொடர்பாக மிகக் குறைந்த அளவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்ப உறவுகளாலேயே வெறுக்கப்பட்ட இவர்களை தொழிலகங்களிலோ, வியாபார நிறுவனங்களிலோ கூட வேலைக்கு அமர்த்துவதில்லை. எனவேதான் இவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். மாற்றுப் பாலினத்தவராக மாறியது இவர்கள் செய்த குற்றமல்ல; இயற்கையோ, இறைவனோ செய்த குற்றம். கதியற்ற இந்த மாற்றுப் பாலினத்தவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைக்கேனும் வாய்ப்புக் கிட்டுமா? நம்மை ஆசிர்வதிக்கும் இவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஆசீர்வாதங்களை யார் வழங்கப் போகிறார்கள்? இதுவே எனது ஆய்வுக்கு அடிப்படைக் காரணம்.
உங்கள் குடும்பம் மற்றும் கல்விப் பின்புலம்...
திருவண்ணமாலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்தவள் நான். நடுத்தர இஸ்லாமியக் குடும்பம். இளம் வயதிலேயே திருமணமாகிவிட்டது; 12 வயதில் மகனும் 7 வயதில் மகளும் உள்ளனர். இப்போது தந்தையுடன் உள்ளேன். எனது ஆராய்ச்சிக்கு தந்தை முகமது உமர் உறுதுணையாக இருக்கிறார்.
கீழக்கரையில் உள்ள தாசின் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வணிகவியலில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தேன். சென்னை பிரஸ்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. முடித்தேன். சிறிதுகாலம் வேட்டவலம்- லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய பின், ஆராய்ச்சிப் படிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தால் பணியிலிருந்து விலகினேன். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சேர்ந்து, "மாற்றுப் பாலின தொழில் முனைவோர்' குறித்து ஆய்வு செய்து எம்.பில். ஆய்வுப் பட்டம் பெற்றேன். தற்போது, திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் சேர்ந்து, பிஎச்.டி. பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஆய்வுப் பொருள், உங்கள் தனித்தன்மையைக் காட்டுகிறது. இதனை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?
கீழக்கரையில் எம்.காம். படித்தபோது, ரோட்ராக்ட் அமைப்பின் எச்.ஐ.வி. முகாமில் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ராமநாதபுரத்தில் சில திருநங்கைகளைச் சந்தித்தேன். அவர்களது அவலமான வாழ்க்கையைப் பற்றி அறிந்தபோது வேதனையாக இருந்தது. அப்போதுதான் திருநங்கையர் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று சிந்தித்தேன். அதன் விளைவாக, கல்லூரிப் பேராசிரியரின் வழிகாட்டுதலுடன், எம்.காம். கடைசி ஆண்டில் கள ஆய்வுத் திட்டத்தில், கோவையில் வசிக்கும் திருநங்கையரில் தொழில்முனைவோராக உள்ளோர் குறித்து ஆய்வு செய்தேன். அப்போது திருநங்கையர் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நேரில் கண்டேன்.
அடுத்து எம்.பில். ஆய்வின்போதும், நூற்றுக்கு மேற்பட்ட திருநங்கையரைச் சந்தித்தேன். ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனை சோகங்கள்! இவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போனாலும் யாரும் கவலைப்படுவதில்லை; வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையரை மீட்குமாறு காவல் நிலையத்தில் புகார் செய்து எங்காவது பார்த்திருக்கிறீர்களா? எனவே இந்த அபலைகள், குழுவாக வாழும் திருநங்கைகளுடன் சேர்ந்துவிடுகின்றனர்.
இந்த ஆய்வில் தெரியவந்த முக்கிய தகவல்களைக் கூற முடியுமா?
மாற்றுப் பாலினத்தவர்களில் பலர் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள். சிலர் மட்டுமே கல்லூரி வரை படிக்க முடிகிறது. வளரிளம் பருவத்தில், சுமார் 12- 13 வயதில்தான் ஒரு குழந்தை முழு ஆணாகவோ, முழுப் பெண்ணாகவோ வளர்ச்சி பெறுகிறது. அப்போது, மரபணுக் கோளாறாலும், இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பிகளின் பிழைகளாலும், சில குழந்தைகள் இருபாலராகவும் இல்லாமல், பாலினக் குழப்பத்துடன் வளர்கிறார்கள். இது குறித்து மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஆண் குழந்தைகளிடம் பெண்மை மிகும்போது "திருநங்கை' ஆகவும், பெண் குழந்தைகளிடம் ஆண்மை மிகும்போது "திருநம்பி' ஆகவும் இந்தக் குழந்தைகள் மாறுகிறார்கள். எனினும், ஒரு குழந்தை மாற்றுப் பாலினத்தவர் ஆவது ஏன் என்று இதுவரை அறுதியிட்டு யாராலும் கூற முடியவில்லை. உடலிலும் மனதிலும் குழப்பத்துடன் வளரும் இந்தக் குழந்தைக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால் மாற்றம் நிகழக் கூடும். ஆனால், இதுதொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், புறக்கணிப்பே இறுதியாக நிகழ்கிறது.
அவதிக்குள்ளாகும் நிலையிலும், இவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். அதிலும் சிலர் தொழில் முனைவோராகவும் உயர்கிறார்கள். இது எப்படி?
இந்தக் கேள்விதான், "கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுப் பாலினத் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள்' என்ற தலைப்பில் முனைவர் (பிஎச்.டி) பட்ட ஆய்வு மேற்கொள்ளுமாறு என்னைத் தூண்டியது. இதற்காக இதுவரை 434 திருநங்கையரை நேரில் சந்தித்து புள்ளிவிவர மாதிரிகளைச் சேகரித்திருக்கிறேன்.
திருநங்கையருடன் பழகுவது சிரமமாக இல்லையா?
ஆரம்பத்தில் அவர்கள் என்னை நம்பவில்லை; ஒத்துழைக்கவும் மறுத்தனர். ஆனால், எனது நோக்கத்தை அறிந்தவுடன் பலரும் ஆராய்ச்சிக்கு உதவத் தொடங்கினர். அவர்கள் வசிக்கும் "ஜமாத்'தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்.
என்னிடம் மிகவும் மரியாதையாகவும் பண்பாட்டுடனும் அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்கள் செல்லும் இடத்துக்கெல்லாம் உடன் சென்று பிச்சைகூட எடுத்திருக்கிறேன். இப்போது அவர்கள் என்னை பரிபூரணமாக நம்புகிறார்கள். ஒருவகையில் இது உண்மையான கள ஆய்வு.
மேலும், மாற்றுப் பாலினத்தோரில் முனைப்புடன் செயல்படும் சமூகப் போராளி கல்கி சுப்பிரமணியம், மதுரையில் நூலகம் துவக்கிய பிரியா பாபு, மூன்றாம் பாலினத்தவரின் சட்டரீதியான உரிமைகளுக்காகப் பாடுபடும் செங்கல்பட்டு வழக்குரைஞர் சத்யஸ்ரீ ஷர்மிளா, கோவையில் சமூக சமையலறை நடத்திய சங்கீதா, பெரும் போராட்டத்துக்குப் பின் காவலர் பணியில் சேர்ந்துள்ள பிரதிகா யாஷினி போன்ற பலரது உதவிகளும் ஆலோசனைகளும் எனது ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
திருநங்கையர்களுக்கு அரசு நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு உள்ளதா?
அரசு இவர்களுக்கு திருநங்கை/ திருநம்பி அடையாள அட்டை வழங்கி பல உதவிகளைச் செய்கிறது. என்றாலும் அனைத்து மாற்றுப் பாலினத்தவரையும் அரசு நலத் திட்டங்கள் சென்றடைவதில்லை. மாற்றுப் பாலினத்தோரில் திருநங்கையர் குறித்து மட்டுமே ஆராய்ச்சி செய்துள்ளேன். திருநம்பியர் குறித்து யாரேனும் இதேபோல ஆராய்ச்சி செய்தால் மேலும் பல உண்மைகள் தெரிய வரலாம்.
கல்வி உதவித்தொகைகள், சுயஉதவிக் குழுக்கள் மூலமான உதவி, முறையான மருத்துவ அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல், தனியார் துறையில் தகுந்த வேலைவாய்ப்பு அளித்தல், அரசு வேலைவாய்ப்பில் கட்டாய இட ஒதுக்கீடு, வசிப்பிட ஏற்பாடு, அரசு உதவித்தொகை வழங்குவது போன்றவை, மாற்றுப் பாலினத்தவர் வாழ உதவும்.
இந்த ஆய்வின் மூலம் மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
முதலில், நாட்டிலுள்ள மாற்றுப் பாலினத்தவர் குறித்த முழுமையான விவரம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட வேண்டும். 2011-ஆம் வருடத்திய கணக்கெடுப்பின்படி, நாட்டில் சுமார் 4.88 லட்சம் மாற்றுப் பாலினத்தவர் உள்ளனர். உண்மையான மதிப்பீடு இதைவிட பல மடங்காக இருக்கக் கூடும்.
வளரிளம் பருவத்தில் அனைத்துக் குழந்தைகளையும் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அவர்களின் உறுதியான பாலினத்தை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும். அதன்மூலமாக பல குழப்பங்களைத் தவிர்க்க முடியும்.
அதற்கு அரசின் கொள்கை முடிவுகளிலும் மாற்றம் வந்தாக வேண்டும். அதற்கு எனது ஆராய்ச்சி முடிவுகள் உதவும் என நம்புகிறேன். அதன் பிறகும் மாற்றுப் பாலினத்தவரின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்ற பணிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


