செவிலியராக மாறிய மும்பை மேயர் !

"மும்பை நகரம் எனக்கு எத்தனையோ கொடுத்திருக்கிறது. என்னை மும்பை மாநகர மேயராக்கி கொண்டாடி வருகிறது.
செவிலியராக மாறிய மும்பை மேயர் !
Updated on
2 min read

"மும்பை நகரம் எனக்கு எத்தனையோ கொடுத்திருக்கிறது. என்னை மும்பை மாநகர மேயராக்கி கொண்டாடி வருகிறது. எனக்கு கிடைத்ததில் சிறிதாவது மும்பை மக்களுக்குத் திரும்பத் தருவதற்காக 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நர்ஸôக மாறி கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறேன்' என்கிறார் மும்மை மேயரான கிஷோரி பெட்நேக்கர்.

கிஷோரி, மும்பையின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான நாயர் மருத்துவ
மனையில் செவிலியராக சேவை புரிய விருப்பம் தெரிவித்துள்ளார்.

"செவிலியராக எனது சேவையை இரவு 11 மணியிலிருந்து காலை 7 மணி வரை இருக்கும் ஷிஃப்ட்டில் கிடைக்க கேட்டுக் கொண்டுள்ளேன். கரோனா மும்பை நகரை படு மோசமாகத் தாக்கியுள்ளது. அதனால் பகல் வேளைகளில் மும்பை நகரின் மேயராக நகரின் பல பகுதிகளுக்கும் சென்று கரோனா எதிர்ப்பு பணிகள் உரிய முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்று கண்டறிய வேண்டும். மேயர் பணிக்கு தடங்கல் ஏதும் வராமல் இருக்கத்தான் இரவு நேரங்களில் நர்ஸôக மாறியுள்ளேன்.

மும்பை நகரில் கரோனா நோயாளிகள் நாள்தோறும் அதிகமாகி வருவதால், செவிலியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். மும்பையில் 380-க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார்கள். மஹாராஷ்ட்டிரா முதல்வர் உத்தவ் தாத்ரே கரோனா நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் பங்கு கொள்ள செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று எனது பழைய வேலைக்குத் திரும்பியுள்ளேன்.

"தற்போது கரோனா எதிர்ப்பு பணியில் செவிலியருக்கான பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் கூட கரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். செவிலியர்களுக்கு மனதில் தைரியத்தை விதைக்க, விழிப்புணர்வு தர.. முடுக்கி விட... அவர்களிடம் சொற்பொழிவுகளை மேயராக இல்லாமல் ஒரு செவிலியராக .. செவிலியர் உடை அணிந்து பல மருத்துவமனைகளில் நிகழ்த்தி வருகிறேன். செவிலியர்களை இயக்க சொற்பொழிவு மட்டும் போதாது. நாமும் நர்ஸôக மாறினால் இதர செவிலியர்கள் தங்கள் சேவைகளில் இன்னும் கூடுதல் முனைப்புடன் ஈடுபாடு காட்டுவார்கள் என்பதற்காக நானும் செவிலியர் ஆகியுள்ளேன்.

நான் ஒன்பது ஆண்டுகள் செவிலியராக மும்பை துறைமுக மருத்துவமனையில் பணியாற்றியுள்ளேன். சிவசேனா தலைவர் பால் தாக்கரே சொன்னதின்பேரில் நர்ஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டேன்.

என்றைக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து எனக்கு அடுத்தடுத்து அலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின. "மேயரம்மா.. எனது மகளுக்கு கரோனா நோயாளிகளுக்கு சேவை செய்யும் பொறுப்பிலிருந்து விலக்கு வாங்கிக் கொடுங்கள். அவளைக் காப்பாற்றுங்கள்' என்று பலரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். "என்னால் அப்படி செய்ய முடியுமா.. அதுவும் மும்பை நகரில் செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் அவசர காலத்தில் எப்படி செவிலியர்களுக்கு கரோனா வார்டுகளிலிருந்து விலக்கு வாங்க முடியும். மருத்துவ பணியாளர்கள்தானே கரோனா நோயாளிகளுக்குப் பாதுகாப்பு. இதுவரை நாம் பார்த்திராத கரோனா எதிரியிடம் நாடே போர் புரிந்து கொண்டிருக்கிறது. கரோனாவின் தீவிரம் மருத்துவப் பணியாளர்கள் உட்பட அனைவரையும் அச்சப்பட வைத்திருக்கிறது. ஆனால் நமக்கு வேறு வழியில்லை. கரோனாவை எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும்.

சிறப்பாக சேவைகள் செய்யும் செவிலியர்களுக்கு மேயர் விருதுகளையும் அறிவிப்பேன். கரோனா தொற்று ஏற்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் என்னைச் சந்தித்ததினால், நானும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். நல்லவேளை எனக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள். அதனால் மும்பை நகரை மீண்டும் சுற்றி வருகிறேன்.

ஆலைத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவள் நான். பல பேரிடர்கள், தடைகளைத் தாண்டி வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்னல்களைக் கண்டு பயந்தால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. சவால்களைச் சந்தித்தே சமாளித்தே ஆக வேண்டும். பயந்து ஒடுங்கியிருந்தால் நான் மும்பை மேயராக ஆகியிருக்க முடியாது. செவிலியர் பணி மகத்தான தெய்வீகப் பணி. ஆனால் செவிலியராக குறைந்த அளவு மக்களுக்கு மட்டுமே சேவை செய்ய முடியும். மும்பை நகர மக்களின் சேவையில் என்னை அர்ப்பணிக்க அரசியலில் இறங்கினேன்.

கரோனாவை விரட்ட நாட்டு மக்கள் அனைவரும் "வீட்டுக்குள் இருந்து' கரோனா பரவாமல் தடுக்க உதவலாம். ஆனால் செவிலியர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு சேவை செய்ய இயலாது. அவர்களுக்கு கூடுதல் சமுதாய பொறுப்பு உள்ளது. செவிலியர்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களின் களமான மருத்துவமனைக்கு வந்துதான் கரோனவுடன் நேரடி யுத்தம் நடத்த முடியும். அதனால்தான் மீண்டும் நான் நர்ஸôக முடிவு செய்து இரவு நேர பணிக்கு என்னை அனுமதியுங்கள் என்று நாயர் மருத்துவமனையின் பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொண்டேன்.

செவிலியராகப் பணி புரிந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிகிச்சை முறையில் பல மாற்றங்கள் வந்திருக்கக் கூடும். அதனால் முதலில் இப்போதைய செவிலியர்களின் பொறுப்பு குறித்து உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து சேவையைத் தொடங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். கரோனா நோயாளிகளை பொறுத்தமட்டில் ஏப்ரல் 28- லிருந்து அவரது நிலைமைகளை கண்காணிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்கிறார் 58 வயதாகும் மும்பை மாநகர மேயர் கிஷோரி பெட்நேக்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com