ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்!

சரிவிகித உணவின் மூலமாக நுரையீரலையும் அதைப் பிரதானமாகக் கொண்ட சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியுமா என்றால், முடியும் என்பதுதான் உறுதியான பதில்.  சுவாச

News image
Updated On :7 மே 2020, 4:43 pm

ப. வண்டார்குழலி இராஜசேகர்


சரிவிகித உணவின் மூலமாக நுரையீரலையும் அதைப் பிரதானமாகக் கொண்ட சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியுமா என்றால், முடியும் என்பதுதான் உறுதியான பதில். சுவாச மண்டலத்தின் பிரதான உறுப்பாக விளங்கும் நுரையீரலின் வளர்ச்சி இரண்டு நிலைகளில் நிகழ்கிறது. நுரையீரல் வளர்ச்சி என்ற வடிவம் அல்லது உருவாக்கத்தை உள்ளடக்கிய முதல் நிலை மற்றும் நுரையீரலின் முதிர்ச்சி என்ற செயல்பாடு அல்லது இயக்க நிலையை உள்ளடக்கிய இரண்டாம் நிலை. தாயின் வயிற்றில் 5 முதல் 16 வாரக் கருவிலேயே மூச்சுக் குழல்கள் (terminal bronchioles) உருவாக்கத்திலிருந்து குழந்தையின் சுவாச மண்டலம் வளரத் துவங்கிவிடுகிறது. குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆகும்போது, நுரையீரலின் காற்று நுண்ணறைகள் (alveoli) நன்றாக முதிர்ச்சியடைந்து நுரையீரல் முழுமையான இயக்கத்திற்கு வந்துவிடுகிறது.

குழந்தை கருவிலிருக்கும் போதே நன்றாக வளர்ச்சியடைந்து வரும் சுவாச மண்டல உறுப்புகளின்; நோய் எதிர்ப்புத் திறன் முதுமைக் காலம் துவங்கும்போது சிறிது சிறிதாகக் குறையத் துவங்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 4 மில்லியன் மக்கள் நுரையீரல் தொடர்பான தொற்று நோய்களால் இறக்கிறார்கள் என்று ஃபாரம் ஆப் இன்டர்நேஷனல் ரெஸ்பிரேட்டரி சொûஸட்டிஸ் (FIRS) ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்துள்ளது. இதுபற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதே இல்லயென்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.

நுரையீரலைப் பாதிக்கும் நோய்களான ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) போன்றவற்றை குணப்படுத்துவதில், மருத்துவத்துடன் சேர்ந்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் உணவுகளும், சிறப்பு உணவுகளும் மிக முக்கிய பங்கை அளிக்கின்றன என்பது பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

நுரையீரலின் முழுமையான செயல்பாடு, ஆரோக்கியம், பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத்திறன் ஆகியவை, ஆழ்ந்த சுவாசம், தூய்மையான காற்று, சரிவிகித உணவு, உடல் மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உடற்பயிற்சி, ஹார்மோன்களின் சீரான செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்படுகிறது. அதே சமயம், ஊட்டச்சத்து குறைபாடு, புகை பிடித்தல், மது, அதிக மாசுபாடு அடைந்த காற்றை சுவாசித்தல், சுவாச மண்டலத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பணிகள், நோய்கள் ஆகியவற்றால் பாதிப்படைகிறது. இவ்வாறான பழக்கங்கள் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியான சரிவிகித உணவும், ஆலோசனைகளும், சிறப்பு உணவுகளும் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொடுக்கும்.

சுவாசத்தின் மூலமாக காற்றை உள்ளே இழுத்து வெளியில் விடும் வேளையில், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை (உயிர்வாயு) செல்களுக்குக் கொடுத்து, கார்பன்}டை}ஆக்ûஸடை வெளியில் அனுப்பிவிடும் பிரதான வேலைகளுடன், காற்றைத் தூய்மைப்படுத்துவது, வெப்பப்படுத்துவது, ஈரப்படுத்துவது, கொழகொழப்புத் தன்மைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது, உடலின் அமில}காரத் தன்மையை சமன் படுத்துவது என்று முக்கிய வேலைகளையும் செய்கிறது நுரையீரல்.

இவ்வளவு வேலைகளையும் செய்யும் நுரையீரலின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உணவும் பிரதான காரணியாக இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நுரையீரலின் நோய் எதிர்ப்புப் பாதுகாப்பு வளையம் மூன்று நிலைகள் நிகழ்கிறது.

முதலில், சுவாச உறுப்புகளில் உள்ள சுவர் பகுதி சளியை உற்பத்தி செய்யும் நிலையில், தூசு, கிருமிகள், சிறு துகள்கள் இதில் ஒட்டிக் கொண்டு வடிகட்டப்பட்டு, சுத்தமான காற்று மட்டும் உள் செல்கிறது. இந்த நுண் அமைப்புகள் "ஸ்ரீண்ப்ண்ஹ' என்றழை க்கப்படுகின்றன. இவை சுவாச மண்டலத்தின் பாதை, நுரையீரலின் நுண்ணிய காற்றறைகள் (Tranchea, Bronchi, Bronchiolos) ஆகியவற்றில் உள்ளன. இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக படபடவென்று அடிக்கும் இயல்பான செயல்பாட்டைக் கொடுத்து, அப்பொருட்களை மேல் நோக்கி உணவுக்குழாயையும் வாயையும் இணைக்கும் pharynx வழியே வெளியேற்றுகின்றன. எனவே நாம் ஒவ்வொருமுறை உணவு உட்செல்லும்போதும் இந்த தூசு, கிருமிகள் அனைத்தையும் உணவுடன் சேர்த்து செரிமான மண்டலத்திற்குள் அனுப்பிவிடுகிறோம். இந்த இருவழி ஆபத்திலிருந்து காத்துக் கொள்வதற்கு, நுரையீரலுடன் இணையும் மூச்சுக் குழலும், உணவுக் குழலும், செரிமானப் பாதையும் உறுதியாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, நுரையீரலின் சிறு காற்றுப்பைகளின் எப்பிதீலியல் செல்கள் macrophages என்ற செல்களை வைத்துள்ளன. சுவாசத்தின் மூலமாக உள்ளிழுக்கப்படும் நுண்ணுயிரிகளை இந்த செல்கள் அழித்துவிடுகின்றன. இதற்கு phagocytosi என்று பெயர். இந்த செயல் நடைபெறுவதற்கு சரியான அளவில் ரத்த வெள்ளையணுக்களும், அவற்றால் கிடைக்கும் நோய் எதிர்ப்புத்திறனும், இவற்றைக் கொடுக்கும் ரத்தமும் சரியான அளவில் இருக்க வேண்டும். உடலின் கட்டமைப்பை உருவாக்கும் புரதமும் அவற்றின் அடிப்படை மூலக்கூறுகளாக இருக்கும் அமினோ அமிலங்கள் உள்ளடக்கிய உணவுமே இரண்டாவது பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.

மூன்றாவதாக, oxidiative பாதிப்புகளிலிருந்து ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நுரையீரலைப் பாதுகாக்கின்றன. ஆக, இந்த மூன்று நிலைகளைப் பார்க்கும்போது, சுவாச மண்டலத்தின் ஒவ்வொரு நுண்ணிய அமைப்பும் முழுமையாக வளர்ச்சி யடைந்து, அவற்றின் வேலைகளை முறையாகச் செய்தால்தான் சுவாசத்தின் சுழற்சியும், பலனும் முழுமையடையும். இதற்கு குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுக்கப்படும் சரிவிகித உணவுகளும், சிறப்பு உணவுகளும் அதன் மூலமாகப் பெறப்படும் கலோரி, கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு போன்ற பேரூட்டச் சத்துகளும், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துகளும், நுரையீரலின் உருவாக்கம், வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.

நீடித்த ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition) ஒருவருக்கு இருக்குமேயானால், அது அவரின் நுரையீரலின் வடிவம், சுருங்கி விரியும் திறன், தாங்குதிறன், நுரையீரலுக்கான நோய் எதிர்ப்புத்திறன் மற்றும் சுவாசத்தின் கட்டுப்பாடு போன்றவற்றை பாதிக்கிறது. இவ்வாறான பலவிதமான ஊட்டங்கள் குறைபாடு ஒருபுறமிருக்க, முக்கியமான ஒரு சில சத்துகளோ அல்லது இரண்டு மூன்று சத்துகளோ குறைபாடாக இருக்கும் வேளையில் அவற்றால் நடைபெறும் செயல்களும் பாதிக்கப்படுகின்றன.

குழந்தைகள், பருவ வயதினர், நடுத்தர வயதினர் என்று எவராக இருப்பினும், அவர்களுக்கு இருக்கும் ஊட்டச் சத்துக்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து, நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதாலும், ஓரளவிற்கு ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு functional foods என்னும் சிறப்பு நுண்பொருட்கள் அடங்கிய மஞ்சள், மிளகு, சீரகம், இஞ்சி, சுக்கு, தூதுவேளை, வெல்லம், எலுமிச்சை, அதிமதுரம், சித்தரத்தை, பூண்டு, துளசி, முசுமுசுக்கை போன்ற உணவுகளை நுரையீரலின் ஆரோக்கியத்திற்காகக் கொடுப்பதாலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல் நிலைக்கேற்றவாறு சத்துள்ள உணவுகளை சரியான அளவில், பக்குவத்தில் கொடுப்பதாலும், தற்போதிருக்கும் தொற்று ஏற்படும் அபாய நிலையிலிருந்து பாதுகாக்கலாம்.

புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு இருப்பின், அவை ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினைப் பாதிக்கிறது. இதனால், ரத்தத்தின் மூலமாக உடலின் பல பாகங்களுக்கும் கிடைக்கப்பெறும் ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது. புரதச் சத்து மட்டும் குறைபாடாக இருக்கும் நிலையில், நுரையீரல் வீக்கம், செல்களின் உள்ளிருக்கும் நீரின் சமநிலை மாறுவது போன்றவற்றை ஏற்படுத்தி, நுரையீரலின் சிறு சிறு காற்றுப்பைகளைப் (alvelous) பாதித்து, சுவாசம் இழுத்தது போல் மாறுவதற்கு வாய்ப்பளித்துவிடுகிறது. அந்தந்த வயதினருக்குத் தேவையான அளவில் பால், முட்டை, பருப்புகள், மீன், அசைவ உணவுகள் போன்றவற்றைக் கொடுப்பதால், புரதச்சத்து சரியான அளவில் கிடைக்கபபெற்று நுரையீரலின் செயல்பாடும் மேம்படுத்தப்படுகிறது.

தாது உப்புக்களான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றின் குறைபாடுகள், சுவாச உறுப்புகளின் செல்களின் வேலை மற்றும் இயங்கு தன்மையை பாதிக்கின்றன. மேலும், மூக்கினுள் காற்று நுழையும்போது, அதிலிருக்கும் தூசு, கிருமி போன்றவற்றை வடிகட்டி, இழுத்து வெளியில் அனுப்பும் சளிப்படலத்தில் நீர், கிளைக்கோ புரோட்டின் மற்றும் சோடியம்;, பொட்டாசியம் போன்ற அயனிகளே (electrolytes) இருப்பதால், இவைகளின் குறை பாடும், சுவாச உறுப்புகளுக்கு நோய்த்தொற்றை எளிதில் எடுத்துக்கொண்டு வருகின்றன. இந்த அயனிகள் எனப்படும் தாதுக்களும் கீரைகள், பச்சை காய்கள், கிழங்குகள், சிறு மீன்கள், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகள், பால், பழங்கள் போன்றவற்றில் நிறைந்துள்ளன.

நுரையீரலின் இணைப்புத் திசுக்கள் collagen என்னும் பொருளால் ஆனவை. இந்த collagen சரியான அளவில் இருப்பதற்கு வைட்டமின் "சி' அத்தியாவசியமாகிறது. வைட்டமின் "சி' நிறைந்த உணவுகளான நெல்லிக்காய், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசி, முளைக்கட்டிய பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளத் தவறும்போது; வைட்டமின் "சி' குறைபாடு ஏற்பட்டு, நுரையீரலின் செயல்திறன் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்புத் திறனும் குறைந்து, சுவாச மண்டல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், சுவாச மண்டலத்தைப் பாதிக்கும் தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், உடலில் நச்சுக்கள் சேர்ந்து பிற உள்ளுறுப்புகள் பாதிப்படைவதற்கும் வாய்ப்புகள் உருவாகின்றன.

ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளிலிருந்து நுரையீரலைப் பாதுகாப்பதற்கு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள், வைட்டமின் "ஈ' நிறைந்ததுள்ள கொட்டை உணவுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கள் உதவி செய்கின்றன. எனவே, ஒவ்வொரு ஊட்டச்சத்தும் ஒரு வகையில் சுவாச மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவி செய்கிறது என்பதையும், அந்த குறிப்பிட்ட சத்தின் குறைபாட்டைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலமாக சுவாச மண்டலத்தையும், அதன் பிரதான உறுப்பாக இருக்கும் நுரையீரலையும் நிச்சயம் பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரித்து, தொற்றுகள் வராமல் தடுக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.