நினைவுகள் மறப்பதில்லை!
மதுபாலா, 36-ஆவது வயதில் 52-ஆண்டுகளுக்கு முன்பு காலமான ஹிந்தி நடிகை. அவருடைய சகோதரி மதுர் பூஷண்(ஜகிதா)மதுபாலாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், தயாரிப்பாளர்


மதுபாலா, 36-ஆவது வயதில் 52-ஆண்டுகளுக்கு முன்பு காலமான ஹிந்தி நடிகை. அவருடைய சகோதரி மதுர் பூஷண்(ஜகிதா)மதுபாலாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், தயாரிப்பாளர் இம்தியாஸ் அலி மதுபாலாவின் வாழ்க்கையைப் படமாக்கும் உரிமையை ஏற்கெனவே பெற்றிருந்தார். ஆனால், மதுபாலாவுடன் பிறந்த மற்ற சகோதரிகள் மதுரின் முயற்சிக்கு ஒப்புக் கொள்ளாததால், படமாக்கும் உரிமையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று.
இருப்பினும், ""இது என்னுடைய கனவு திட்டம். என்றாவது ஒருநாள் மதுபாலாவின் வாழ்க்கையைத் திரைப்பட மாக்குவேன்'' என்று உறுதியுடன் கூறும் மதுர், மதுபாலாவுடனான தனது நினைவுகளை இங்கு கூறுகிறார்:
""மதுபாலா நடிகையானதை விதி என்றே கூற வேண்டும். மும்தாஜ் ஜஹான் பேகம் தெஹல்வி என்ற பெயருடன் பிறந்தவர், 9 வயதில் மதுபாலாவாக மாறி, குழந்தை நட்சத்திரமாக "பஸந்த்' ( 1942) என்ற படத்தில் அறிமுகமானார், 13-ஆவது வயதில் ராஜ்கபூருடன் "நில்கமல்' ( 1947) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அவரே எதிர்பாராத வகையில் மதுபாலா பிரபலமான நட்சத்திரமானார். அவரது அழகு, என்னையும் மற்ற உடன் பிறந்தவர்களையும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்வதற்கே அச்சப்பட வைத்தது. அவரது இயற்கையான அழகு காரணமாக மேக்கப்போட மாட்டார். பெரும்பாலும், வெள்ளை நிற உடைகளையே அணிவார். திரைப்படங்களில் நடித்தாலும், பார்ட்டிகளில் கலந்து கொள்ள மதுபாலாவை எங்கள் தந்தை அனுமதித்ததில்லை.
திலீப்குமாருடன் "மொகலே ஆலம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாகியும் முடியவில்லை. அதற்குள் திலீப்குமார், கமர்அம்ரோஹி ஆகியோருடன் இவரை இணைத்து வதந்திகள் பரவின. இதனால் தேவையற்ற பிரச்னைகளை அவர் சந்தித்தார். திலீப்குமார், மதுபாலாவை இணைத்து வந்த வதந்திகளை நம்பிய இந்தித் திரையுலகம் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களென்றே எதிர்பார்த்தது. அதற்கேற்ப "மொகலே ஆலம்' படம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போயிற்று.
இதற்கிடையில் பி.ஆர். சோப்ரா "நயாதவுர்' (1957) படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு தீலிப்குமார் - மதுபாலாவை ஒப்பந்தம் செய்தார். இதன் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்த பகுதி கொள்ளைக்காரர்கள் சூழ்ந்த பகுதி என்பதால், மதுபாலாவின் பாதுகாப்பை கருதி எங்களுடைய தந்தை படப்பிடிப்பு நடத்தும் பகுதியை மாற்றும்படி தயாரிப்பாளிடம் கேட்டுக் கொண்டார். தயாரிப்பாளரோ அந்தப் பகுதியில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். எங்களுடைய தந்தை திலீப்குமாரை அணுகினார். அவரும் தயாரிப்பாளருக்கு ஆதரவாக இருந்ததால், மதுபாலாவை படப்பிடிப்புக்கு அனுப்ப எங்கள் தந்தை மறுத்துவிட்டார். ஒப்பந்தத்தை மீறி எங்கள் தந்தை படப்பிடிப்பு விஷயத்தில் குறுக்கீடு செய்வதாக தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார். மதுபாலாவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து எங்கள் தந்தை கொடுமைப்படுத்துவதாக ரசிகர்களும் பத்திரிகைகளும் கருதினர்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. திலீப்குமார் எங்கள் வீட்டிற்கு வந்து, நடந்ததை மறந்து படத்தில் மீண்டும் நடிக்க வரும்படி அழைத்தார். விதி இங்கே விளையாடியது. மதுபாலாவோ நடந்த சம்பவத்திற்காக எங்களுடைய தந்தையிடம் மன்னிப்பு கேட்கக் கூறினார். அதற்கு திலீப்குமார் மறுத்துவிட்டார். மதுபாலா தன் தந்தையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. மதுபாலாவுக்கு பதில் வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டு "நயாதவுர்' படம் தயாரிக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் திலீப்குமார்- மதுபாலா திருமணம் நடந்திருக்கலாம்.
இடையில் கிஷோர்குமாருடன் "சல்தி காராம் காடி' (1958) மற்றும் "ஹாப் டிக்கெட்' (1962) ஆகிய படங்களில் நடித்தபோது ஏற்பட்ட காதலால் மதுபாலா, கிஷோர்குமாரை மணந்து கொண்டார்.
1960- ஆம் ஆண்டு சென்னையில் நடந்த படப்பிடிப்பொன்றில் கலந்து கொண்ட மதுபாலா, திடீரென ரத்தவாந்தி எடுத்ததால் கணவர் கிஷோர்குமார் மறுநாளே அவரை சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் சென்றார். அங்கு மதுபாலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும், அறுவைச் சிகிச்சை செய்தாலும் பிழைப்பது அரிது என கூறிவிட்டனர். இந்தியாவிலும் நவீன மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். அப்போது மதுபாலாவின் வயது 27. மருத்துவர்கள் ஒய்வெடுக்க கூறியபோது, "மொகலே ஆலம்' படத்தின் இறுதிகட்ட காட்சிகள் நடித்து கொடுத்தார். படம் 1960- ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை.
ஒன்பது ஆண்டுகள் நோயுடன் போராடினாலும் எப்படியும் குணமாகிவிடுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இறுதி காலத்தில் பெரும்பாலும் நான் அவருடனேயே இருந்தேன். அந்த நேரத்தில் திலீப் குமாரை சந்திக்க வேண்டுமென்று தகவல் அனுப்பக் கூறினார். மதுபாலாவின் உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்த திலீப்குமார், சென்னை படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வருவதற்குள் மதுபாலா இறந்துவிட்டார். அவரது வாழ்க்கை எத்தனை அழகாக மலர்ந்ததோ, அதேபோல் வெகு சீக்கிரத்தில் உதிர்ந்துவிட்டது.
ஒன்பதாண்டு காலம் நோயுடன் போராடி 36-ஆவது வயதில் மரணமடைந்த மதுபாலாவின் கடைசி கால வாழ்க்கையையும் "மதுபாலாவின் ஒன்பது ஆண்டுகள்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுத உள்ளேன்'' என்றார் மதுர்பூஷண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...