

உலக அளவிலான வேலைச்சந்தையில் பரபரப்பாக பேசப்படுவதாக செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்), தரவு பகுப்பாய்வு (டேட்டா அனாலிட்டிக்ஸ்) உயர்ந்து நிற்கின்றன. தரவுகள் தொட்டுப்பார்க்காத துறைகளே இல்லை. அந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் தரவுபகுப்பாய்வுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது. அதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவது, வேலையை எளிதாக்குகிறது. இந்த வேலையில் ஆண்களே திணறும் நிலையில், தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த முத்துமாரி தனது விடாப் பிடியான முயற்சியால் உலக அளவில் அறியப்படும் தரவு பகுப்பாய்வு நிபுணராக உயர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரில்லியோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவராக பங்காற்றி வரும் முத்துமாரி, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தரவுகளை பகுத்தாய்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வருகிறார். எண்களோடு எழுந்து, எண்களோடு தூங்கப்போகும் முத்துமாரி, எண்கள் மீதான காதலே தன்னை உயர்த்தியிருப்பதாக கூறுகிறார். இளைஞர்கள், இளைஞிகளால் மொய்க்கப்படும் இப்பணியில் சாதனை புரிந்தது குறித்து விவரிக்கிறார் முத்துமாரி:
""திருச்சி ஆர்.எஸ்.கிருஷ்ணன் மேல்நிலை பள்ளியில் படித்த பிறகு, சென்னை, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் பெங்களூரில் தொடங்கியிருந்த "மியூ சிக்மா' நிறுவனத்தில் முதலில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தபோது தரவு பகுப்பாய்வு குறித்து அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. இது கணிதம் சம்பந்தமானது என்பதை மட்டும் உணர்ந்திருந்தேன்.
கணிதம் மீது எனக்கு எப்போதும் காதல் இருந்ததுண்டு. மிகவும் சிக்கலான கணக்கையும் புரியும்படி சொல்லி தருவதில் என் அப்பா கைதேர்ந்தவராக இருந்தார். நான் கற்கும் கணிதத்தை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அதை எதற்காக கற்க வேண்டுமென்பதையும் அப்பா உணர்த்தியிருந்தார். கணிதத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு கூடுதல் சிரமங்களை எடுத்துக் கொள்வார். திருச்சியில் அரசுப் பள்ளியில் படித்திருந்த அப்பா, என்.ஐ.டி.யில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். எங்கள் தலைமுறையை போல அல்லாமல், பாடத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் பொறியியல் படித்திருந்தார்.
அப்பாவை போல கணிதத்தை முழுமையாக படித்தறியாவிட்டாலும், என் துறையில் முன்னேறுவதற்கு தேவையானவற்றை கற்றறிந்தேன். எண்கள், கணிதம் மீதான எனது காதல், தரவு பகுப்பாய்வுத் துறையில் ஆர்வத்தோடும், துடிப்போடும், அக்கறையோடும் பணியாற்றுவதற்கு ஊக்கத்தை தந்தது. சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு 70 சதம் பணி நேரத்தை சிக்கலை கண்டறிவதிலேயே செயல்படுவோம். விளையாட்டுத்தனமாக வேலையை ரசித்து செயல்படுவதற்கு ஏற்றதுறை இது.
ஒவ்வொரு நானோ நிமிடத்திலும் எண்ணிலடங்கா தரவுகள் உருவாக்கப்படுவதாலும், ஸ்மார்ட்போன்களின் வருகையாலும், கணக்கிடுவதில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாலும் கடந்த 10 ஆண்டுகளில் தரவு பகுப்பாய்வுத்துறை வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. நினைத்த நேரத்தில் சிக்கல்களை தீர்க்கும் மனித அறிவைபோல, எண்ணற்ற தரவுகள், அறிவாற்றல் தொழில்நுட்பத்துடன் சிக்கல்களை தீர்க்கும் பசியுடன் தரவு பகுப்பாய்வுத்துறை வேகமாக மாறி வருகிறது. நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது பரிந்துரைக்கும் தீர்வுகள், வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தில் தலைகீழாக மாற்றும் சூழலில் எதிர்படும் வேலை சார்ந்த சவால்கள், நெருக்கடிகளில் இருந்து விலகி செல்லாமல், அதை துணிவுடன் எதிர்கொண்டு வருகிறேன்.
கர்ப்பிணியாக இருந்தபோது: 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எனக்கு பணி உயர்வு கிடைத்தது. தளராத ஆர்வமும், இலக்கும் குவிந்திருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்திய தருணம் அது. வேலையில் முக்கிய பங்காற்றி வந்த சூழ்நிலையிலும், அதை செவ்வனே நிறைவேற்ற குழந்தையையும் பெற்றெடுத்தேன். இந்த அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது.
உணவு முதல் நிதி சேவைகள் வரையில் ஸ்டார்ட் அப் கலாசாரம் பெங்களூரில் வேகமாக உருவெடுத்து வந்தன. மிகப்பெரிய வர்த்தக சிக்கல்களை தீர்த்து வைத்து, வேகமாக வளர்ந்து வந்தன. இந்த நிறுவனங்களின் தலைமை அனுபவ அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த போது, வர்த்தக ரீதியாக தங்களுக்கு ஆலோசனை வழங்க பெரிய நிறுவனங்களை அணுக இயலவில்லை என்பதை அறிந்து, அந்த இடைவெளியை நிரப்ப சிலருடன் அறிவுப்பகிர்வு வேலையில் ஈடுபட தொடங்கினேன்.
இது எனது வணிக முயற்சியாக இருந்தது. தொழில்நுட்பமும், ஊழியர்களும் இல்லாமல் தனிநபராக செயல்பட்டதால், தரமான சேவைகளை வழங்க இயலாமல் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. தனி நிறுவனம் என்ற கனவை ஒதுக்கிவைத்துவிட்டு, மீண்டும் பணிக்கு செல்ல விரும்பி பிரில்லோ நிறுவனத்தில் இணைந்துள்ளேன். இந்நிறுவனம் பெண்களை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்கு தனியாக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து தந்துள்ளது.
தரவு பகுப்பாய்வுத்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது உருவாகும் புதிய புதிய தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு, நமது அறிவுப்பரப்பை விரிவாக்கிக் கொண்டிருப்பது, இத்துறையில் தாக்குப்பிடிக்க உதவும். நிறுவனத்தின் இலக்கு, நம்முடைய இலக்கையும் கவனத்தில் கொண்டு பயணிக்க வேண்டும். எது நடந்தாலும் நம்பிக்கை, இலக்கு, அதை அடைவதற்கான துடிப்பை இழக்கக்கூடாது.
என் மகன் ஒன்றரை வயதிருக்கும்போது, அவனை வீட்டில் விட்டுவிட்டு முக்கியமான அலுவலக வேலையாக நான் அமெரிக்கா சென்றிருந்தேன். என் மகனைவிட்டு செல்கிறேன் என்பதால் என் மனம் நொந்திருந்தது. விமானப்பயணத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன். என் முடிவுப்படி செயல்படும்படி கணவர் என்னை ஊக்கப்படுத்தி துணை நின்றார். திருமணத்திற்கு பிறகு வேலையை விட மறுத்ததால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. என் மகன் பிறந்த பிறகும், அமெரிக்கா சென்றிருந்தபோதும் என் வாழ்க்கையில் சம்பந்தபடாதவர்கள் கூட என்னை வசை பாடினார்கள்.
அண்மையில் என் மகன் தேர்வின்போது அமெரிக்கா சென்றிருந்தபோதும், வேலைக்கு செல்வது குறித்து விமர்சித்தார்கள். இதுபோன்ற விமர்சனங்களை கடந்துசென்று, குடும்பத்தையும் வேலையையும் சமநோக்கோடு கையாண்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் புரிந்து கொண்டாலும், குடும்பம், சுற்றம் பெண்களை வேலையில் ஊக்குவிக்க தவறிவிடுகிறது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் இருந்த ஆண்கள், எத்தனை பேர் மனைவிமார்களுக்கு வீட்டுவேலையில் துணைபுரிந்திருப்பார்கள்? திருமணத்திற்கு பிறகு வேலையில் தொடர முடியாமல் இடிந்துபோய், வேலையை துறந்த ஏராளமான பெண்களை பார்த்திருக்கிறேன்.
தேங்கிவிடக்கூடாது: வேலையை வேலையாக செய்யாமல் நம் எண்ணத்தோடு அவற்றை ஒன்றி செய்தால், பெண்களால் சாதிக்க முடியாத தொழில், வேலை இல்லை. எங்கும் பெண்கள் தேங்கிவிடக்கூடாது. தாங்கள் அடைய வேண்டியதற்கு குறைவான எவற்றுடனும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. வேலைக்கு செல்லவிரும்பினால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். என் அம்மா குடும்பத்தலைவியாக இருக்க விரும்பி, அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அம்மாவின் நம்பிக்கை, அணுகுமுறை, நேர்மை சிந்தனை என்னை கவர்ந்தன. வேலைக்கு செல்லவில்லையே என்று அம்மா வருந்தியிருந்தால், எங்களுக்கு நல்ல குழந்தை பருவம் கிடைத்திருக்காது.
நமது முயற்சிகளை பற்றி சுயசந்தேகப்படும் இயல்பு பெண்களிடம் உள்ளது. இதில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும். சிலநேரம் குடும்பத்திற்கும், சில நேரம் வேலைக்கும் முக்கியத்துவம் அளிக்க நேரிடும். அதற்கேற்ப முடிவுசெய்து செயலாற்றினால், பெண்களால் சாதனைகளை குவிக்க இயலும். தரவு பகுப்பாய்வுத் துறையில் நிறுவன தலைமைப் பொறுப்பு வரவேண்டும் என்ற கனவு உள்ளது. உலக அளவில் நிறுவனங்களின் தலைமை பொறுப்பை வகித்துவரும் பெண்கள் வெறும் 5.7 சதம் தான்.
ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரியாக 26 பெண்கள் மட்டுமே வேலை செய்து வருகிறார்கள்.
உலக அளவில் தொழில் நிறுவனங்களில் இதுதான் பெண்களின் நிலை. இந்த தடைகளை தகர்த்தெறிந்து, முன்னோக்கி செல்லும் எனது பயணம் ஒருநாள் தலைமைப்பொறுப்பில் ஒளிவிடும் நம்பிக்கை உள்ளது'' என்கிறார் முத்துமாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.