ஆன்மிக உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று, செவ்வாடை பக்தர்களின் ஞான குருவாக, விளங்கி வருபவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார். அவரின் கரம் பற்றி, அவருடன் இணைந்து 52 ஆண்டு கால திருமண வாழ்வில், ஆன்மிகவாதியாக, சமூக சேவகியாக, கல்வியாளராக, எழுத்தாளராக பங்காற்றி முன்மாதிரி பெண்மணியாக இருந்து வருபவர், லட்சுமி பங்காரு அடிகளார். அவர், தனது வாழ்க்கைப் பயணம் குறித்து
நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
ஆன்மிகம், பேச்சாளர், எழுத்தாளர், சமூகப் பணி, கல்விப்பணி, நிர்வாகப்பணி ஆகியவைகளில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?
ஆன்மிகம் பக்தியை வளர்க்க கூடியது. எனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த பேறாக ஆன்மிக பணியை கருதுகிறேன். எழுத்துப் பணியைப் பொருவத்தவரை எனக்கு தோன்றக்கூடிய எண்ணங்களை, கருத்துகளைத் தொகுத்து நூல்களாக எழுதி வருகிறேன். சமூகப் பணி என்பது, ஆன்மிகத்தின் மூலம், சமுதாயத்துக்கு செய்ய கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். கல்விப்பணி என்பது அறநிலையக் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற கல்வி நிறுவனங்களுக்கு செய்கின்ற தொண்டு.
பேச்சாளர் என்பது, அடிகளார் கூறுகின்ற கருத்துகளை ஆன்மிக விழா மேடைகளில் செவ்வாடை பக்தர்களுக்கு, எடுத்து பேசி வருகிறேன். பொது மேடைகளில், பட்டிமன்றங்களில், பொது கூட்டங்களில், பேசுகின்ற வாய்ப்பு எனக்கு இதுவரை கிட்டவில்லை. அதேசமயம், எந்த கருத்தினையும், எந்த மேடைகளிலும் தைரியமாக சொல்லக்கூடிய அனுபவம் உள்ளது.
ஆன்மிக பணி, எழுத்துப் பணி, சமூகப் பணி உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்தது தான் நிர்வாகப் பணி. கல்வி நிலையங்களை நடத்துதல், மருத்துவப்பணி செய்தல், சித்தர்பீடம் சார்ந்து நடக்கின்ற விழாக்களை நடத்த ஏற்பாடுகளை செய்தல். இவையெல்லாம் ஒரே தொகுப்பாக அமைந்ததுதான் நிர்வாகம் . இதில் இத்தனை ஆண்டுகால அனுபவங்கள்தான் என்னை வழி நடத்துகிறது. மற்றபடி, பெரிய திறமை, பெரிய ஆற்றல் என சொல்லக்கூடிய சக்தி எனக்கு இருப்பதாக தெரியவில்லை.
இவைகளில் எனக்கு அதிகம் பிடித்த துறை கல்விப்பணியே. ஏனென்றால் கல்வியே சமுதாயத்துக்கு நல்ல மேம்பாட்டை ஆற்றலை கொடுக்க கூடியது.
திருமண வாழ்க்கையில் ஆன்மிக பணி குறுக்கீடு செய்ததாக எண்ணுகிறீர்களா?
எனக்கு திருமணம் ஆகி 52 ஆண்டுகளாகின்றன. குடும்ப வாழ்க்கை வேறு. ஆன்மிகப் பணி வேறு. எங்களுக்கு இல்லறம் நல்லறமாக அமைந்துள்ளது. ஆன்மிகம் தெய்வீக பணியாகும். ஆகவே எப்போது ஆன்மிகம், எப்போது குடும்பம் என்பதை உணர்ந்து கொண்டதால் நான் இரண்டையும் வைத்து குழப்பிக் கொள்வது இல்லை. இரண்டும் எப்படி நடக்க வேண்டுமோ அதுபடி நடந்துக் கொண்டே இருக்கிறது.
வெற்றியின் ரகசியம்?
நமக்கு கிடைத்திருக்கிற வாய்ப்புகளை எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் நமது வாழ்க்கையின் வெற்றி ரகசியம் இருக்கும்.
நான் மேல்மருவத்தூர் ஊராட்சிமன்றத் தலைவராக, 10 ஆண்டுக்காலம் பணியாற்றி இருக்கிறேன். அப்போது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு அதிகாரிகள் மூலம் செய்து தூய்மைமிக்க ஊராட்சியாக இருக்க பணியாற்றி இருக்கிறேன். அதனால் எனது ஊராட்சிமன்ற பணிகளை பாராட்டி, மத்திய அரசின் மூலம் 2006-இல் இந்திய குடியரசு தலைவராக இருந்த, ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் சிறந்த சுகாதார கிராமத்துக்கான "நிர்மல் கிராம் புரஸ்கர்' விருதினை வழங்கி பாராட்டினார்.
பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு பணிக்காக தாங்கள் அளித்த விலை..
பொது வாழ்க்கையில், சில எதிர்ப்புகள், அவமானங்கள், தவறான கருத்துகள் எல்லாம் இன்றளவிலும் உள்ளன. இதில் வதந்திகளையும், எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, வதந்திகளை வாழ்த்துகளாக எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் எதையும் விலை கொடுத்து வாங்க முடியாது.
மகளிர் சமுதாயத்துக்கு உங்களது ஆலோசனை என்ன?
பெண்கள் தற்சமயம் எல்லா துறைகளிலும், சாதனைகளை படைத்து வளர்ந்து வருகிறார்கள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே சமயம், சில சமுதாய இடையூறுகளால், அவர்களால் முன்னேற முடியாமல் போகிற நிலைமையும் உள்ளது. இந்த நிலை ஆண்களே அதிகம் உள்ள துறைகளிலும் இருக்கிறது. அவர்கள் தங்களது தகுதியை மேம்படுத்திக் கொண்டு உயரிய நிலையை அடைகிறார்கள் அதேபோல பெண்களும் தங்களுக்கு நேரும் துன்பங்களை, படிக்கட்டுகளாக நினைத்து, நிலைத்து நின்று சாதித்துக் காட்ட வேண்டும்.
சமுதாயத்தின் மிகப் பெரிய குறையாக தாங்கள் கருதுவது?
சமுதாயத்தின் மிகப் பெரிய குறையாக நான் நினைப்பது பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, கடைசியில் அவர்கள் கொலை செய்யப்படுவதும்தான். இந்த நிலை மாறவேண்டும். ஆணாதிக்கம் இல்லாமல், பெண்களுக்கு சம உரிமையை கொடுத்து நடத்தினால்தான் ஒரு நாடோ, ஒரு உலகமோ முன்னேற முடியும்.
- மதுராந்தகம் குமார்,
படம் : ஓம்சக்தி சரவணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


