தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'220 வகை ஆசனங்களை செய்வேன்'

பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் குறும்புக்கார மாணவி என பெயரெடுத்த பூஜா தலாவர், இன்று பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தேசிய அளவில் சாம்பியனாக திகழ்கிறார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2021, 10:25 am

பூா்ணிமா

பள்ளிப் பருவத்தில் வகுப்பறையில் குறும்புக்கார மாணவி என பெயரெடுத்த பூஜா தலாவர், இன்று பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மாநிலம் மற்றும் தேசிய அளவில் சாம்பியனாக திகழ்கிறார்.

12 -ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமேஸ்வரா ஆட்சி காலத்தில், தற்போது கூறப்படும் மல்லர் கம்பம் என்பது "மான சொல்லாசா' என்ற பெயரில் வீரவிளையாட்டாக அறிமுகமானதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. 5.5.மீட்டர் உயரமும், ஒன்று முதல் இரண்டு செ.மீட்டர் சுற்றளவும் கொண்ட இந்த மல்லர் கம்பம் தேக்கு மரத்தில் தயாரிக்கப்பட்டு பூமிக்குள் வலுவாக நட்டு வைப்பார்கள். கம்பம் விரிசல் விடாமலிருக்க மேலிருந்து கீழ் வரை விளக்கெண்ணெய் தடவிவைப்பதுண்டு, பங்கேற்கும் வீரர்கள் கம்பத்தின் மேலிருந்து உறுதியாக தொங்கும் கயிற்றைப் பிடித்தபடி பலவித சாகசங்களை செய்வதுண்டு. மற்றொரு வகை மல்லார் கம்பம் நீளம் குறைவாக சாதாரண மரத்தில் செய்யப்பட்டு, மேற்புறத்தில் கொக்கியில் மாட்டப்பட்டு குறுக்காக சங்கிலியால் இணைத்துத் தொங்க விடுவார்கள். தொங்கும் கம்பத்திற்கும் தரைக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கும். அதில் கயிறு கட்டி தொங்கியபடி விளையாட்டு வீரர்கள் சாகசங்கள் செய்வார்கள்.

இதில் முதல் வகை மல்லர்கம்பத்தில் கயிற்றைப் பிடித்தபடி பல்வேறு நிலைகளில் சாகசம் செய்து விருது பெற்றதோடு, சர்வதேச அளவில் யோகினி என்ற சிறப்பையும் பூஜா தலாவர் பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டம் ஷிரகுப்பியை சேர்ந்த பூஜா தலாவர், ஆறாம் வகுப்பில் படிக்கும் போது பள்ளிக் கூட மைதானத்தில் சில மாணவர்கள் மல்லர்கம்பத்தில் கயிற்றைப் பிடித்தபடி சாகசங்கள் செய்வதை பார்த்தாராம். இதுபோன்று நாமும் செய்து பார்க்கலாமே என்ற ஆர்வம் தோன்றவே ராஜூ கவுடர் மற்றும் சிவயோகி விரக்தாமத் ஆகியோர் நடத்தும் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் மல்லர்கம்பம் அகாதெமியில் சேர்ந்துள்ளார். பெரும்பாலும் மாணவர்களே பயிற்சிப் பெறும் நிலையில் ஒரு பெண்ணால் பயிற்சிப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தாலும், பூஜா பயிற்சிப் பெறும் வேகத்தை பார்த்தபிறகே முழுமையாக பயிற்சிப் பெற அகாதெமியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மூன்று மாதங்கள் கயிறு மல்லர் கம்பத்தில் பயிற்சிப் பெற்ற பூஜாவை, மாநில அளவில் நடந்த போட்டிக்கு அனுப்பிய போது முதல் இடத்தைப் பிடித்து வெற்றிப் பெற்றார்.

இதன் பின்னர் பங்கேற்ற போட்டிகள், பெற்ற வெற்றிகள் பற்றி பூஜா தால்வர் கூறுவதைக் கேட்கலாமா? ""என்னுடைய முதல் வெற்றி பயிற்சிப் பெறும் மல்லர்கம்பம் வீரர்களுக்கு புது உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தந்தது. தமிழ் நாட்டில் விழுப்புரத்தில் நடைபெற்ற தென்மண்டல போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டேன்.

2013 -ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு முதல் இடத்தில் தேர்வு பெற்றேன். இந்தப் போட்டி பல்வேறு வயது பிரிவுக் கேற்ப நடந்தது. 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் நான் கலந்து கொண்டேன். ஒன்றரை நிமிடத்தில் யார் அதிக வித்தியாசமான நிலைகளில் அல்லது அக்ரோ பெடிக் சாகசங்களை செய்கிறார்களோ அவர்கள் வெற்றிப் பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். கம்பத்தின் மேலே வலுவாக கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்தபடி சாகசங்கள் செய்ய வேண்டும். அது ஒன்றுதான் சாகசங்கள் செய்வதற்காக ஆதாரம். பிடி நழுவினால் ஆபத்துதான். நான் அந்த பயத்திலிருந்து விடுபட்டு தலைகீழாக ஒரு காலில் கயிற்றை இறுக்கிக் கொண்டு கற்ற வித்தைகளை பயமின்றி செய்து காட்டினேன்.

நான் மல்லர்கம்பம் பயிற்சியோடு நின்று விடவில்லை. யோகா பயிற்சியும் கற்றுக் கொண்டேன். என்னால் 220 வகை ஆசனங்களை செய்து காட்ட முடியும். வில்லாக வளையும் உடல் தகுதி எனக்கிருந்ததால், மல்லர் கம்பம் பயிற்சியின் போதே என்னுடைய ஆசிரியர்கள் என்னை யோகா பயிற்சிப் பெறும்படி அறிவுறுத்தினர்.

2019 -ஆம் ஆண்டில் நடந்த இந்தியா நேபாளம் யோகா சாம்பியன்ஷிப் போட்டியின் போது 14 முதல் 16 வயதினருக்கான பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பிடித்ததோடு, இந்தியாவுக்கான தங்கப்பதக்கத்தையும் பெற்றேன்.

இரண்டாமாண்டு பியூசியில் தேர்ச்சிப் பெற்ற நான் தற்போது பிஏ பட்டம் பெற கல்லூரியில் சேர்த்துள்ளேன். பொது முடக்கம் இருந்தபோதும் நாள்தோறும் நான் மல்லர் கம்பம் மற்றும் யோகா பயிற்சிப் பெறுவதை நிறுத்தவில்லை. காலையிலும் மாலையிலும் இரண்டு மணிநேரம் அகாதெமியில் பயிற்சிப் பெற்று வருகிறேன். அடுத்து தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க ஆவலோடு, அதற்கான தேதி அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் பூஜா தலாவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.