பாரதி என்னும் ஏகன்!
தமிழின் சிறப்பு ழகரம் பாரதி, தமிழின் அகரம், சிகரம் பாரதி. தமிழின் ஆயுத எழுத்து பாரதி, தமிழின் மெல்லினம்,


தமிழின் சிறப்பு ழகரம் பாரதி, தமிழின் அகரம், சிகரம் பாரதி. தமிழின் ஆயுத எழுத்து பாரதி, தமிழின் மெல்லினம், இடையினம், வல்லினம் பாரதி. தமிழின் நேற்று, இன்று, நாளை பாரதி. தமிழ் இனிமை பாரதி. தமிழ் வலிமை பாரதி. தமிழ் இலக்கியம் பாரதி. தமிழ் இலக்கணமும் பாரதி.
தென்றலாகவும், புயலாகவும், சிறு தூறலாகவும், பெருமழையாகவும், காதலாகவும், ரெளத்திரமாகவும், வீச்சாகவும், மூச்சாகவும், ஒரு சேர இருக்கும் ஒற்றை மகாகவி பாரதி. பாரதியோடு ஒப்புநோக்கவும், சமதளத்தில் பாவிக்கவும், பாரதிக்கு முன்னும் இல்லை. பின்னும் இல்லை. அன்றும் இல்லை. இன்றும் இல்லை. பாரதி ஏகன். பாரதி தனியன். பாரதி ஒருமை. பாரதி பெருமை.
இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு முதற்சங்கம், இடைச்சங்கம், சங்க இலக்கியம், சங்கம் மருவிய காலம், நீதி நூல் காலம், என வகைப்பாடுகள் இருந்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் முதலே தமிழ் இலக்கியத்தின் ஒற்றை அடையாளமாக, துவக்கமாக, விஸ்வரூபமாக, ஆதி அந்தமாக இருப்பவர் மகாகவி பாரதிதான். இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்பு உருவான இலக்கிய வகைமைகள் அனைத்துக்குமான ஆதிவிதை எங்கே இருக்கின்றன? எல்லாமே பாரதியில் இருக்கின்றன.
அதுவரைக்கும் இலக்கியம் புலவர்களுக்கான சொத்து என அடையாளம் காணப்பட்டது. பாடல், கவிதை என்பது அரசனுக்கு சாமரம் வீசுவதற்கான வார்த்தை விசிறி என்றே அடையாளம் காணப்பட்டது. கவிதை என்பது பெரும் அலங்காரம். அதற்கு எதுகை, மோனை, யாப்பு, இயைபு எல்லாமே அத்தியாவசியம். இப்படி இருந்த பொதுச் சிந்தனையைப் புறந்தள்ளி சொல் புதிது சுவை புதிது சோதி மிக்க நவகவிதை என்பதாகப் புதுத்தடம் உருவாக்கிய நவீனன் பாரதி. மக்கள் மொழியில் கவிதை என்று புதிய வசியம் செய்த மாயன் பாரதி.பாடலின் பொருளைப் புரிந்து ரசிக்கப் புலவர்களின் இலக்கண விவரிப்பு அவசியம் என்ற நிலை மடைமாற்றம் கண்டது. நேரடியாகப் பொருள் உணர்ந்து உடல் சிலிர்க்க, உள்ளம் சிலிர்க்க, உயிர் சிலிர்க்க கவிதானுபவத்தைப் பிழிந்து கொடுத்த புதியவன் பாரதி. உரையாசிரியர்கள் துணை இன்றி, அனுபவத்தின் துணை கொண்டு கவிதாவனத்துக்குள் நுழைந்து பேரின்பம் பெறுகின்ற எளிமையை நிலைநிறுத்திய ஜனநாயகன் பாரதி.
புதுமைச் சூரியன் பாரதி எனில் அதற்கு முன்பு ஓராயிரம் இருட்டுப் பள்ளம் இருந்ததை உணரமுடியும். பாரதிக்கு முன்பு இலக்கியத்திலும், சமூகத்திலும் பழமை இருள் மண்டியிருந்தது. முனைந்து நீக்க வேண்டிய அறியாமை இருள் இருந்தது. காலாதீத இருண்மை இருந்தது. கசடும் இருந்தது. பழமைவாதச் சிந்தனையும், அடிமைத்தனையும் இருந்தது.
ஆள்பவருக்கும், ஆங்கிலேயருக்கும் அடிவருடும் நீசத்தனம் இருந்தது. உச்சபட்சமான பெண்ணடிமைத்தனம் இருந்தது.
பாரதி அனைத்துப் புதுமைக்குமான ஒற்றை வெளிச்சமானான்.
மகாபாரதம், திரெளபதி, பாண்டவர்கள், கெளரவர்கள் என்ற நேற்றைய வானத்தில் பாஞ்சாலி சபதம் என்ற புதிய ஒளியானான். அதில் நிகழ்காலச் சமூகத்தை இணைத்தான். அதன் நீசத்தனத்தை இணைத்தான். நேர்மை இன்மையை இணைத்தான். நீதிக் குறைபாட்டை இணைத்தான். முதுகு வளைந்து கூனிக் குறுகிக் கிடந்த சமூகத்தைக் கேள்விகளால் முறுக்கேற்றினான்.
காலம் காலமாக, யுகம், யுகமாக எழுதப்பட்ட, பேசப்பட்ட, கற்பிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட, புனைந்து உரைக்கப்பட்ட உளுத்துப்போன உத்தரங்களை நொறுக்கிப்போட்டு வலிமையான சிந்தனைக் கூடு சமைத்தவன் பாரதி. "பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன். கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்" என்று பாரதி சொன்னது தமிழ் இலக்கியப் பரப்பின் முதல் குரல், முதல் பிரகடனக் குரல், முதல் ரெளத்திரக் குரல்.
மனித உயிர் மட்டுமே மகத்துவம் வாய்ந்தது. புனிதம் வாய்ந்தது. இந்தப் புவியில் வாழும் உரிமை பெற்றது என்பதான உயர்வு நவிற்சி சித்தாந்தம் உடைத்த ஒரே கவிஞன் பாரதி.
""மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள் பூச்சிகள், புல் பூண்டு, மரங்கள் யாவும் என் செயலால் துன்பம் நீங்கி இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட வேண்டும்"
இப்படிப் புதுமையான, சமமான உயிர் வாழ்த்தும், சமத்துவமும் சொன்ன கவிஞன் பாரதி.
விடுதலை, சுதந்திரப்பள்ளு என்கிற உத்வேகச் சிந்தனையின் ஆதி பாரதியே. அதுவெறும் பாடல் அல்ல. அடிமைச் சங்கிலியால் நூற்றாண்டுகளாகப் புரையோடியிருந்த சமூகத்துக்குப் புதிய புதிய தேசியக் கொள்கைப் பிரகடனம். சமூகப் பொருளாதார, அரசியல் மாற்றம் செய்து காட்டும் ஞானோபதேசம் அடிமைச் சுழலில் அவரோகணம்பாடிய சமூகத்துக்கு ஆரோகணம் தந்த புதிய பாஞ்ச ஜன்யம்.
புதுமையான அரசியலமைப்புச் சட்டம், சகலருக்கும் சமத்துவம் சொல்கிற சட்டம், ஒரு குழுவை உயர்த்தி, ஒரு குழுவைத் தாழ்த்தி என்பதாக இல்லாமல் எல்லோரையும் சமத்துவத்தராசில் நிறுவும் சட்டம் என வழி காட்டியவன் பாரதி.
இந்தப் புரட்சிப் பிரகடனம் எத்தனை புதுமையானது. விளிம்பு நிலை மனிதர்கள், குரலற்ற மனிதர்கள், முகமற்ற மனிதர்கள், தாழ்வுற்ற மனிதர்கள் என எவருமே இல்லை. அவர்களின் சார்பாக, அவர்களின் குரலாக, முகமாக, ஒற்றைப் பெரு நெருப்பாக உயர்ந்தோங்கிய கவிதைப் பிழம்பு பாரதி.
புதிய சமூக நீதியாக புவி முழுமைக்கும் பொருத்தமான விதி சொன்ன பாரதியின் மனிதாபிமானமும் மகோன்னதமும் உலகத் தரத்தில் தமிழ்க் கவிதையை நிலை நிறுத்துகிறது. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்.
கல்வி மேன்மையும், பசி இன்மையும் மட்டுமே மனிதகுல மேம்பாட்டின் அடையாளங்கள் என்பது உலகப் பொதுமை தானே! மனிதனை மனிதன் அடிமை செய்வதை நிறுத்தி நொறுக்குவதற்கான இரட்டை ஆயுதங்கள் - கல்வியும், வருவாய் ஈட்டல் மூலம் நிலை பெறுகின்ற பசியின்மையும் என்று ஆட்சியாளர்களுக்கு ஞானக்கண் திறந்த நடைமுறை நீதிமான் பாரதி. "பாரததேசம்' பாடலில் பாரதி பட்டியலிடும் 44 தொழில்களில் உயர்வு தாழ்வு இல்லை. புனிதமானது, புனிதமற்றது இல்லை. தொழில்கள் மேன்மையடைவது, தொழில் செய்வோரின் மனமொப்புதலாலும், அர்ப்பணிப்பாலும்தான். சந்திர மண்டலத்திலும் சந்தி தெருப் பெருக்குதலும் அதனதன் தளத்தில் முக்கியத்தவமானவையே என்கிற சமத்துவ நோக்கு பாரதி நமக்குத் தரும் புதிய பார்வை.
இப்போதைய ஊடகச்சூழலில் உடனடிச் செய்தி காண்கிறோம். அண்மைச் செய்தி காண்கிறோம். செய்தி அலசல் காண்கிறோம். இத்தனையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே செய்து பத்திரிகையாளர்களின் முன்னத்தி ஏர் என்று புதிய பாதை அமைத்தவன் பாரதி. சுதந்திரப் போராட்டத்தைப் பெருநெருப்பாகப் பரவச் செய்யும் கட்டுரைகள், சுதேசமித்திரன் இந்தியா, சக்கரவர்த்தினி மூலம் புரட்சிச் சிந்தனைகள், கருத்துப்படங்கள், கேலிச்சித்திரங்கள் இப்படியாக பத்திரிகைத் துறையின் முன்னோடியானார். ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்.
என்று பத்திரிகை உலக வரலாற்றிலேயே செய்திகளை முந்தித்தந்த ஊடகவியலாளன் பாரதி.
கரும்புத் தோட்டத்திலே கண்ணீரால் இனிப்புக் கரும்பைக் கட்டிக் காத்த பெண்களுக்காக விம்மி விம்மி விம்மி விம்மி அழுத ஒற்றைக் கருணையாளன் பாரதி.
"வேதம் புதுமை செய்' என மாற்றங்களின் துவக்கப் புள்ளியாகத் தன்னையே முன்னிறுத்திய புரட்சியாளன் பாரதி. "பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே'என்று தான் பூணூல் மறுத்தலும், கனக லிங்கத்துக்கு அணிவித்தலும் என்று சாத்திரச் சுழக்குகளுக்குச் சவுக்கடி கொடுத்தான். "கனகலிங்கம்... நீ இன்றையிலிருந்து பிராமணன்' எதற்கும் அஞ்சாதே. யார் உனக்குப் பூணூல் போட்டு வைக்கத் துணிந்தது என்று யாராவது கேட்டால் பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டியே பதில் சொல். இப்படியான புதுமை மந்திரோபதேசம் செய்த மகோன்னதன் பாரதி. "அச்சமில்லை அச்சமில்லை' என்று தோள் தட்டி எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்' எனப் பொதுமையும், பொதுஉடைமையும் எது என்றுநிரூபணம் செய்த நீதிமான் பாரதி.பெண்ணியம், பெண் சுதந்திரம் பெண் விடுதலை எனப் பலப்பலப் பெயரிட்டு அழைப்பதான கோட்பாட்டுக்கு ஒற்றைத் தீர்வாக எது இருக்க முடியும்? ஏது அனைத்து இருண்மைக்குமான தீர்வாக இருக்க முடியும்? சமதர்மப் பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம் கலாச்சாப் பெண்ணியம், மனைப் பெண்ணியம் கறுப்புப் பெண்ணியம், சூழல் பெண்ணியம் என்று பெயர்கள் மாறலாம்.
பெண் இருப்பின் விடியலுக்கான ஒற்றைத் தீர்வை பாரதிதான் அருளுகிறான்.
"அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவவமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்'
கலை என்பது கல்வியும், பொருளீட்டுதலும்
இணைந்த வாழ்வியல் இப்படி இருத்தலே
அமுத சுரபிகளான பெண்கள் திருவோடு
ஏந்தாமல் காத்துநிற்கும்.
இன்னும் கூடுதலாக
யதுகிரிக்கு ஐந்து கட்டளைகள் தருகிறாள்.
தலை நிமிர்ந்து நட, நேர்பார்வையில் பார்,
நிமிர்ந்து உட்கார், பேசுவதைத் தைரியமாகப் பேசு,
மேலுக்கு வேஷம் போடாதே'
என்று யுகாந்திரமாகப் பெண்ணுக்குத் தரப்பட்ட வாழ்வியலுக்கு எதிர்மாறான நேர்த்திசையில் பயணிக்கச் சொல்கிறார்.
குழைந்து, நெளிந்து, மண் பார்த்து நடந்து, முதுகு வளைந்து அமர்ந்து, கண்ணோடு கண் பார்க்காமல், நினைப்பதைப் பேசாமல் தொண்டைக் குழியில் புதைத்து, முகமூடிகளாக அணிவதையே பெண் இருப்பு என்றிருந்தது காலம் காலமாக புதுமைப் பெண்ணில்லை. நீ புதுமைப் பெண் என்று ரெளத்திரப் பிரகடனம் செய்த பாரதியே பெண் விடுதலைக்கான உச்சி சூரியன்.
நான் தீராத இளமை சார்ந்தேன் என்றும், எப்போதும் மாறாத இளமையுடையேன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர். நான் அதை வேண்டேன். நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன் எப்போதும் வாழ்வேன். நான் அமரன்"
தனது அமரத்தன்மையை உணர்ந்து உணர்த்தி, தெரிந்து, தெரிவித்து, நிறைந்து நிறைக்குச் செய்யும் பாரதி - கவிதை எழுத மட்டும் செய்யவில்லை. கவிதையே வாழ்க்கையானவர். வாழ்க்கையே கவிதையாகச் செய்தார். அதனால் பாரதியே மகாகவி அமரகவி. ஆதியும் அந்தமுமான கவி!
கட்டுரையாளர்: கவிஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...