வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கதம்பம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த வீரமங்கை அஞ்சலையம்மாள் துணிச்சலுடன் களம் இறங்கினார்.

News image
Updated On :9 பிப்ரவரி 2021, 4:28 pm


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த வீரமங்கை அஞ்சலையம்மாள் துணிச்சலுடன் களம் இறங்கினார். இவர் 1890 - ஆம் ஆண்டுகடலூரில் பிறந்தார். 5- ஆம் வகுப்பு வரை படித்த இவருக்கு சிறுவயதில் இருந்தே போராட்ட குணம் உண்டு. மகாத்மாகாந்தி 1921- ஆம் ஆண்டு நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் தமிழ்ப் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர். இதன் மூலம் அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார்.

1927- ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று தனது ஒன்பது வயது மகளான அம்மாப்பொண்ணுவையும் பங்கேற்க செய்தார். அம்மாப்பொண்ணுவின் தேசப் பணியை பாராட்டிய மகாத்மா காந்தி, அம்மாப்பொண்ணுவை தன்னுடைய வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு அம்மாப் பொண்ணுக்கு லீலாவதி என்று பெயரிட்டார்.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 1930- ஆம் ஆண்டில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறைத் தண்டனை பெற்றார்.

1932-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டபோது அஞ்சலையம்மாள் கர்ப்பிணியாக இருந்தார். இதற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அஞ்சலையம்மாள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பிறந்தவர்தான் கடைசி மகன் ஜெயவீரன்.

1933- ஆம் ஆண்டு சட்டமறுப்பு மறியலில் ஈடுபட்டு மூன்று மாதம் சிறை தண்டனை பெற்றார். 1940- ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாகிரகம், 1941, 1942 - ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் பங்கேற்று அஞ்சலையம்மாள் சிறை சென்றுள்ளார்.

அஞ்சலையம்மாள் பெரும்பாலான காலத்தை கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளிலேயே கழித்தார்.

அஞ்சலையம்மாளின் மகன் ஜெயவீரன் கூறுகையில், ""என்னுடைய தாய், தந்தைக்கு நான் கடைசி மகன்.

1941- ஆம் ஆண்டில் நடந்த டெல்லியை நோக்கிய நடைப் பயண சத்தியாகிரக போராட்டத்தின்போது என்னுடைய தாய் அஞ்சலையம்மாளை எங்களது வீட்டிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது நானும் அவருடன் சென்றேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்யவில்லை. என்னுடைய தந்தை நான் எட்டு வயதுச்சிறுவனாக இருந்த போது கடலூரில் நடந்த அன்னிய துணிகள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். சிறையில் அவரை போலீசார் தாக்கியபோது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் மூன்று மாதம் தங்கி எனது தந்தை சிகிச்சை பெற்றார். இப்படி எங்கள் தாயும், தந்தையும் பல்வேறு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டை விட்டு பெண்கள் வெளியே வராத காலத்தில் அஞ்சலையம்மாள் துணிச்சலுடன் நாட்டுக்காக பாடுபட்டதை கௌரவிக்க வேண்டும்'' என்றார்.

உலகின் சிறந்த ஆசிரியராக தமிழ்ப் பெண்!

Story image


உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெறும் 10 பேரில் ஒருவராகத் தேர்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப்பெண் யசோதை செல்வகுமாரன்.

இந்த விருது ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. உலகின் 179 நாடுகளில் இருந்து சிறந்த ஆசிரியர்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களின் இருந்து இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட பத்து பேரில் ஒருவர்தான் யசோதா கற்பித்தல், கற்றலில் பல புதிய முறைகளை யசோதை அறிமுகம் செய்திருக்கிறார்.

முதல் பெண் அதிபர்!

Story image


சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹாலிமா யாக்கோப் (63) தேர்ந்தெடுக்கப்பட்டார். மலாய் வம்சத்தைச் சேர்ந்த ஹாலிமா, போட்டி வேட்பாளர் எவருமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளுக்குப் பின் மலாய் வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராகி உள்ளார். 1954 -இல் பிறந்த ஹாலிமாவின் தந்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.