பெண்கள் தயாரிக்கும் பாரம்பரிய கச்சம்புளி!
குடகு மாவட்டம் மடிகேரியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் மட்டுமே விளையக் கூடிய "கார்சினியா கம்மி கட்டா' எனப்படும் ஒருவகையான மலபார் புளிய மரத்தில், காய்த்து பழுத்து விழும் பழங்கள்


குடகு மாவட்டம் மடிகேரியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அப்பகுதியில் மட்டுமே விளையக் கூடிய "கார்சினியா கம்மி கட்டா' எனப்படும் ஒருவகையான மலபார் புளிய மரத்தில், காய்த்து பழுத்து விழும் பழங்கள் மிகவும் பிரபலமானதாகும். இந்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் கச்சம்புளி அல்லது புளி நீர் என்று கூறப்படும் பிளாக் வினிகர், குடகு மக்கள் விருந்துகளின்போது அசைவ உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.
மடிகேரியில் உள்ள பெண்கள், குடிசைத் தொழில்போல் இந்த கச்சம்புளியை தயாரித்து நல்ல லாபமடைந்து வருகின்றனர். கச்சம்புளி தயாரிப்பில் 25 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் குடும்பங்களும் உள்ளன. இதை எப்படி தயாரிக்கின்றனர் என்று பார்ப்போம்:
அங்குள்ள பெண்கள் மழைக்காலத்தில் விடியற்காலையிலேயே மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் எழுந்து சென்று, மரங்களிலிருந்து பழுத்து தரையில் உதிர்ந்த பழங்களை சேகரித்து வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். பழங்களில் உள்ள விதைகளை நீக்கியப் பின்னர் பெரிய மர உருளைக்குள் இட்டு மழைநீர் புகாவண்ணம் அதன்மீது பெரிய தட்டினால் மூடுவார்கள்.
பின்னர் மேற்புறத்தில் நெருப்பை மூட்டுவார்கள். இந்த நெருப்பு , இரு தினங்கள் வரை தொடர்ந்து எரியும். இதன் உஷ்ணத்தால் உருளைக்குள் உள்ள பழங்கள் உலர்ந்துவிடும், மீண்டும் அவைகளை எடுத்து பெரிய பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி ஊற வைப்பார்கள். ஒருநாள் முழுக்க ஊறும் இப்பழத்தின் சதைப் பகுதிகள் தனியே பிரிந்துவிடும். பின்னர் அடுப்பின் மீது வைத்து இரு தினங்கள் கொதிக்க வைத்தால் தண்ணீர் இறுகி, கச்சம்புளி தயாராகிவிடும். வடிகட்டி பாட்டில்களில் சேகரித்துக் கொள்ளலாம். புளிப்பு சுவை கொண்ட இதை "பிளாக் வினிகர்' என குறிப்பிடுவதும் உண்டு.
கச்சம்புளி தயாரிக்க, மரத்தில் பழுத்து கீழே விழும் பழங்களையே சேகரிப்பதுதான் இப்பகுதி பெண்களின் வழக்கமாகும். இதை இரண்டே நாளில் தயாரிப்பதும் உண்டு. உயரமான மர நாற்காலி மீது புனல் போன்று அமைக்கப்பட்ட பாத்திரத்தில், விதைகளை நீக்கிய பழங்களை இட்டு, அதன் மீது வாழை இலைகளால் மூடி, கீழ் பாகத்தில் அமைந்துள்ள பாத்திரத்தில் பழச்சாறு வடிகட்டி வழியாக வந்து இறங்கும்படி வசதி செய்து, அடுப்பின் மீது வைத்து பற்ற வைத்து கொதிக்க வைப்பார்கள், கூடவே தண்ணீரும் ஊற்றுவதால் பழங்கள் இளகி, துளித்துளியாக, பாத்திரத்தில் இறங்கி இரண்டு நாள்களில் இறுகிவிடும்.
இப்படி சேகரிக்கப்படும் கலப்படமற்ற கச்சம்புளி 750 மி.லி, ரூ. 750 முதல் ரூ. 800 வரை விற்பதுண்டு. உள்ளூரில் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்து வருவதால், இதை தயாரிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் கச்சம்புளி மூன்று ஆண்டுகள் வரை கெடுவதில்லை. உணவுடன் இதை சேர்க்கும் போது சுவை அதிகரிக்கிறது. இவர்களிடம் மொத்தமாக வாங்கி சில்லரையில் விற்பவர்கள், தண்ணீர் கலந்து லாபமடைவதால், சீலிட்ட பாட்டில்களை வாங்குவது நல்லது. கச்சம்புளி தயாரித்த உடன் மிகுதியாகும் சதைப் பகுதிகளை உலர்ந்தவுடன் கிலோ ரூ.75. முதல் ரூ.100 என கேரளாவில் வாங்கிக் கொள்கிறார்கள்.
குடகு மாவட்டத்தில் இயற்கையாகவே வளரும் கார்சினியா கம்மி - கட்டா எனப்படும் மலபார் புளி மரங்களை பெருமளவில் விவசாயம் செய்யவும், புனரமைக்கவும் பொன்னம்பேட் வனத்துறை விவசாயக் கல்லூரி முன் வந்துள்ளது. குடகு மாவட்டத்தில் மட்டுமே வளரும் இந்த மரத்தின் கன்றுகளை விவசாயிகளுக்கு அளிக்க முன் வந்துள்ள கல்லூரி நிர்வாகம் கூடவே பாரம்பரிய கச்சம்புளி தயாரிக்கும் முறையையும் மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...