தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளையடிப்பது: எங்களாலும் முடியும்!

ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவது என்பது இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்டது என்றாலும், இன்னும் பெண்கள் தொட வேண்டிய துறைகள் பலவும் உள்ளது என்பதை அவ்வப்போது ஆங்காங்கே

News image
Updated On :24 மார்ச் 2021, 12:30 am

ஸ்ரீதேவி குமரேசன

ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவது என்பது இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்டது என்றாலும், இன்னும் பெண்கள் தொட வேண்டிய துறைகள் பலவும் உள்ளது என்பதை அவ்வப்போது ஆங்காங்கே சில பெண்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பெயிண்டிங் துறையும் விதிவிலக்கல்ல என சாதித்துள்ளனர் மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண்கள் நால்வர். நால்வரில் ஒருவரான லலிதா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""மயிலாடுதுறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்லியநல்லூர் ரிச்சிதமங்கலம்தான் எனது ஊர். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒருநாள், என் தோழி ஒருத்தி, "மயிலாடுதுறையில் இலவச தொழில் பயிற்சி அளிக்கிறார்களாம், நாம் சென்று கற்று கொள்ளலாமா? நாமும் வீட்டிலிருந்தபடியே ஏதாவது வருமானம் ஈட்ட ஏதுவாக இருக்கும்' என்றார். ஆனால் அது என்ன தொழில் பயிற்சி என்ற விவரமெல்லாம் தெரியவில்லை.

அதனால், மறுநாளே நானும் தோழியும் மயிலாடுதுறை சென்று விசாரித்தோம். நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தினர், "என் சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கு வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் தொழில் பயிற்சியை அளித்து வருவது தெரிந்தது.

வெள்ளையடிக்கும் தொழில் பெண்களுக்கு எப்படி சாத்தியப்படும். வீட்டில் கணவர் என்ன சொல்வாரோ, அதனால் இது எங்களுக்கு ஒத்துவராது என்று நினைத்து அங்கிருந்து கிளம்பினோம்.

அப்போது, எங்களுக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் அங்கிருந்தார். அவர் எங்களைப் பார்த்துவிட்டு, பெயிண்ட்டிங் தொழில் பற்றி விளக்கினார். மேலும், "பெயிண்ட்டிங்கில் இப்போது நிறைய வகைகள் வந்துவிட்டன. அதில், டிசைன் பெயிண்டிங் எல்லாம் பெண்கள் கற்றுக் கொள்ளும் வகையில் சுலபமாகதான் இருக்கும். அதனால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்றார்.

வீட்டுக்கு வந்து கணவரிடம் சொன்னேன். அவர், "உன்னால் முடியும் என்றால் முயற்சி செய்து பார்' என்று நம்பிக்கை அளித்தார். அதன் பின்னர், நானும் தோழியும் பயிற்சியில் சேர்ந்தோம். அங்கே எங்களுடன் இன்னும் சில பெண்களும் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அந்த பயிற்சி வகுப்பில் அடிப்படையில் இருந்து தொடங்கி பெயிண்டிங் பற்றிய முழு விவரங்களையும் முறையாக பாடமாகவும், செயல் முறையாகவும், பயிற்சி அளித்தார்கள். உதாரணமாக, பெயிண்டிங்கில் எத்தனை வகை இருக்கிறது என்பதில் தொடங்கி, ஏன் பெயிண்ட் அடிக்க வேண்டும். எந்த மாதிரியான சுவருக்கு எந்த மாதிரியான பெயிண்ட் அடிக்க வேண்டும். எப்படி பெயிண்ட் அடிக்க வேண்டும். உயரங்களில் ஏறி பெயிண்ட் அடிக்கும் போது சாரம் எப்படி கட்ட வேண்டும் என ஒவ்வொன்றையும் முறையாக கற்றுத் தந்தார்கள்.

15 நாள் பயிற்சி முடிந்ததும். எங்களுக்கு ஒரு வாடிக்கையாளரையும் பிடித்து தந்தார்கள். அதில் என்னுடன், துர்கா, ராஜகுமாரி, ஸ்ரீதேவி என மூவர் வந்து சேர்ந்தனர்.

எங்களைப் பார்த்ததும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் சற்று ஆச்சரியமாக பார்த்தார்கள். இருந்தாலும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாய்ப்பு அளித்தார்கள். அதுவே எங்களுக்குள் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது. நல்லபடியாக அந்த பிரொஜக்ட்டை முடித்து கொடுத்தோம். அதிலிருந்து நாங்கள் நால்வரும் குழுவாக இணைந்து கடந்த 2 ஆண்டுகளில் 10 பிரொஜக்ட் எடுத்து செய்து கொடுத்துள்ளோம்.

ஆரம்பத்தில் எங்களாலும் ஏணியில் எல்லாம் ஏற முடியுமா என்று பயந்தோம். ஆனால் பயிற்சி வகுப்பிலேயே அந்த பயத்தை போக்கிவிட்டார்கள். இப்போது, எவ்வளவு உயராமானாலும் சர்வ சாதாரணமாக ஏணியில் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறோம். ஒருநாளைக்கு 500-600 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

ஆரம்பத்தில், எங்களது பெயிண்ட் யூனிப்பார்மை வெளியில் துவைத்துக் காயப்போடக்கூட தயக்கமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்று துவைத்த துணியை வீட்டுக்குள்ளேயே காயப் போடுவேன். ஆனால், இப்போது நான் ஒரு பெயிண்டர் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக நினைக்கிறேன். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் மாடியில் கொண்டுபோய் காயப்போட்டு எடுத்து வருகிறேன்.

அதுபோன்று, ஆரம்பத்தில் பொம்பளைங்க பெயிண்ட் அடிக்கிறார்களா என்று பார்த்தவர்கள் இப்போது தங்களது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க எங்களைத்தான் அழைக்கிறார்கள். அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறோம். இது சொந்த தொழில் போன்றது. அதனால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெண்கள் பலரும் இந்தத் துறைக்கு வரலாம் வெற்றி பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.