கதை சொல்லும் குறள் - 52: உண்மைக்கு கிடைத்த பரிசு
சென்னைப் பாரிஸ் கார்னரில் இருக்கும் கந்தக்கோட்டம் முருகன் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றது.


சென்னைப் பாரிஸ் கார்னரில் இருக்கும் கந்தக்கோட்டம் முருகன் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றது. வள்ளலார் பெருமானால் பாடல் பெற்ற இடம். பூக்கடைகள், சந்தனக் கடைகள், மரச்சாமான்கள் விற்பனையாளர்கள், படங்களுக்கு பிரேம் செய்து தருபவர்கள், ஹோல்சேல் கடைகள் இவற்றோடு நாகம்மை பாத்திரக் கடையும் கோயிலைச் சுற்றி இருக்கும் சந்துகளில் கொலுவிருந்தன.
நாகம்மை பாத்திரக் கடைக்குள் நுழைந்தால், ஒரு கல்யாணத்திற்குச் சீர் கொடுக்கத் தேவையானப் பாத்திரங்கள் அத்தனையும் வாங்கி விடலாம். பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் சாமான்கள் மலைபோலக் கொட்டிக் கிடக்கும். அதுமட்டுமா குக்கர், மிக்ஸி, ரைஸ் குக்கர், கிரைண்டர் என்று ஒரு குடும்பத்திற்குத் தேவையானவைகள் அனைத்தையும் அங்கே வாங்கலாம். இதில் பிளாஸ்டிக் மற்றும் பீங்கான், கண்ணாடி ஐட்டங்களும் அடங்கும்.
ஒரு நாளைக்கு, லட்சங்களில் வியாபாரம் நடைபெறும் இடம். இந்தக் கடையின் முதலாளி ராமசாமி, செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்கள் என்று மொத்தம் ஐந்து பேர்களை வாரிசாகக் கொண்டவர்.
எல்லோருக்கும் திருமணம் செய்து பேரன், பேத்தி எல்லாம் எடுத்தாகி விட்டது. நாகம்மை என்பது அவருடைய மனைவியின் பெயர். நாகம்மையைக் கரம் பற்றிய கையோடு, இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், தங்களுடைய சொந்த ஊரான செட்டிநாட்டை விட்டுச் சென்னைக்கு வந்து குடியேறினார்.
ஒரு சைக்கிளின் பின்னால் கூடையில் அலுமினியப் பாத்திரங்களைக் கட்டி எடுத்துக் கொண்டு, தண்டையார்பேட்டையின் சந்து பொந்துகளில் எல்லாம் சுற்றி வியாபாரம் செய்வார்.
நாகம்மை கட்டுசெட்டாகக் குடும்பம் நடத்துபவள். கணவனின் சம்பாத்தியத்தில் பணத்தை மிச்சப்படுத்தி, இரண்டாயிரம் ரூபாய் வரையில் மூன்று வருஷத்தில் சேர்த்துவிட்டாள். அதற்குள் அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்து விட்டனர். மனைவியின் சேமிப்பைக் கொண்டு தண்டையார்பேட்டையிலேயே ஒரு சிறிய பாத்திரக் கடையை ராமசாமி ஆரம்பித்தார். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது, இதோ இன்று சென்னையில் கந்தக்கோட்டத்திற்கு அருகில் ஒரு பெரிய கடை, பனகல் பார்க்கில் ஒன்று என்று பாத்திர வியாபாரத்தில் ராமசாமி கொடி கட்டிப் பறக்கிறார்.
""டொக், டொக்'' என்கின்ற சத்தம், தாளம் தவறாமல் வந்துக் கொண்டிருந்தது. தலையைக் குனிந்தபடி, பாத்திரங்களுக்கு பெயரைத் தட்டிக் கொண்டிருந்தான் செல்லப்பன்.
வயது முப்பதுக்குள்தான் இருக்கும்.
அம்மிகல்லும், ஆட்டுக்கல்களும் உபயோகத்தில் இருந்தபொழுது செல்லப்பனின் அப்பா அம்மி பொழியறது என்ற தொழிலைச் செய்து வந்தார். ஒரு உளியைக் கொண்டு அழகான டிசைன்களைக் கற்களின் மீது போடுவார். தாமரைப் பூ தொடங்கி, மான்கள் வரைப் புள்ளிகளாக அம்மியின் மீது விழும் அழகை இன்று எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அப்பாவிடம் இருந்து செல்லப்பன் தொழிலைக் கற்றுக் கொண்டான். இப்பொழுதுதான் அம்மிக்கும், ஆட்டுக் கல்லுக்கும் மூடுவிழா நடத்திவிட்டாயிற்றே. அந்தக் கைத்திறமையை இப்பொழுது பாத்திரங்களுக்குப் பெயர்களைத் தட்டுவதில் காட்டுகிறான்.
இவ்வளவு எழுத்துக்கள் தட்டினால், இவ்வளவு பணம் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. அதில் கடைக்கு ஒரு தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கையில் ஒரு முந்நூறு ரூபாய் கிடைக்கும். இதற்காக கழுத்து வலிக்க, இடுப்பு உடைய உட்கார்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
""செல்லப்பா, இங்கே வா'' என்று அழைத்தார் ராமசாமி.
""ஐயா'', என்று பணிவுடன் எழுந்து நின்றான்.
""எனக்கு எண்பதாவது வயது முடியப் போகிறது. அடுத்த மாசம் விமர்சையாக சதாபிஷேகம் செய்ய என் பிள்ளைகள் முடிவு செய்திருக்கிறார்கள்''.
""ரொம்ப சந்தோசம் ஐயா, இதிலே என் பங்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க''.
""இருக்கு செல்லப்பா, இரண்டாயிரம் நாலு அடுக்கு டிபன் கேரியரை, வருகின்ற விருந்தாளிகளுக்குத் தர ஆர்டர் கொடுத்திருக்கோம். இந்த வாரம், எல்லாம் என் வீட்டுக்கு வந்திடும். நீ சனிக்கிழமை காலையிலே வந்துடு, ஞாயிற்றுக்கிழமைக்குள் "ராமு நாகு' என்ற பெயரை எல்லா டிபன் கேரியரிலும் அடிக்கணும். என்ன செய்வியா? இரண்டு நாள் சாப்பாடு, தூக்கம் எல்லாம் என் வீட்டு அவுட் ஹவுஸ்லதான், என்ன சம்மதம்தானே!''
""ஐயா, என்கிட்ட போய் சம்மதம் கேட்கறீங்க. செய்யுடான்னா, செய்யப் போறேன். நானும் என் பொண்டாட்டியும் இரண்டு பொட்டப் புள்ளைகளும் வாழறதே உங்க தயவுனாலேதானே அய்யா''.
""செல்லப்பா, நீ உழைக்கறே அதனாலே வாழறே, இதிலே என் பங்கு என்னப்பா இருக்கு?''
""அப்படிச் சொல்லாதீங்க சாமி, குடும்பத்தை ஊரிலே விட்டுட்டு சென்னைக்குப் பொழைக்க வந்தேன். எட்டாம் கிளாஸ் படிப்புக்கு என்ன பெருசா வேலை கிடைக்கும், பல இடங்களிலே அலைஞ்சு திரிஞ்சேன். சரி ஊருக்குத் திரும்பிப் போகறதுக்கு முன்னே கந்தக்கோட்ட முருகனைக் கும்பிடலாம்னு வந்தேன். உங்கக் கடையைப் பார்த்தேன். முதலாளியா நீங்க கல்லாவிலே உட்கார்ந்து இருந்தீங்க. உடனே உங்ககிட்ட என் கஷ்ட நிலைமையைச் சொன்னேன். எனக்கு என்ன வேலை தெரியும்னு கேட்டீங்க. அம்மி பொழிக்கத் தெரியும்னு சொன்னேன்.
கடகடன்னு சிரிச்சீங்க, சரி இங்கே உனக்கு வேலை தரேன் அம்மி பொழிக்கறாப் போலத்தான், ஆனால் பாத்திரங்க மேலே பெயர்களைப் பொறிக்கணும் என்று வேலை கொடுத்து அதை எப்படிச் செய்யறதுன்னு சொல்லிக் கொடுக்கவும் வெச்சீங்க.
இன்னைக்கு மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கறேன். குடும்பத்தை இங்கே கொண்டாந்துட்டேன். என் இரண்டு பொண்ணுங்களுக்கான ஸ்கூல் பீûஸயும் நீங்களே கட்டறீங்க; இதை விட இந்த ஏழைக்கு வேறே என்ன வேண்டும் சொல்லுங்க?''
இந்த வேலை கொடுத்ததற்கே என் மேல் இவ்வளவு நன்றி பாராட்டரானே என்று ராமசாமி உள்ளம் நெகிழ்ந்து போனார்.
வாரக் கடைசியில், செல்லப்பன், ராமசாமியின் வீட்டுக்குச் சென்றான். குனிந்த தலை நிமிராமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்தான். மாளிகை போல் இருந்த ராமசாமியின் பங்களாவின் பின்புறம் இருந்த கோடவுனில் கொட்டிக் கிடந்த டிபன் கேரியர்களில் "ராமு நாகு' என்ற பெயரைத் தட்டிக் கொண்டே இருந்தான்.
இப்படிப்பட்ட அறுசுவையான உணவு வகைகளைச் செல்லப்பன் தன் வாழ்நாளிலேயே உண்டதில்லை. சாப்பிடும் பொழுது தன் குடும்பத்தை நினைக்கச் செல்லப்பன் மறக்கவில்லை. ஒரு நாளாவது இப்படி அவங்களைச் சாப்பிட வைத்து அழகு பார்க்க அவன் உள்ளம் துடித்தது.
சரி, ஐயாவின் சதாபிஷேகத்தில் இப்படித்தான் இலைச் சாப்பாட்டில் பல ஐட்டங்கள் இருக்கும், அப்பொழுது என் குடும்பத்தை அழைத்துச் சென்று சாப்பிட வைக்க வேண்டும் என்று செல்லப்பன் எண்ணி மகிழ்ந்தான்.
ஞாயிற்றுக்கிழமை, இரவு ஒன்பது மணிக்குத் தன் வேலையை முடித்து முதலாளியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, செல்லப்பன் சென்றான்.
""செல்லப்பா, இந்தா இந்த கவரைப் பிடி'' என்றார் ராமசாமி.
""ஐயோ ஐயா, பணம் எல்லாம் எனக்கு வேண்டாம், உங்களுக்குச் செய்ய நான் கொடுத்து வைத்திருக்கணும்''.
""டேய் இது உன் உழைப்புக்கு, என் சதாபிஷேகத்திற்கு, புதுத் துணிகளை வாங்கி உன் குடும்பத்தாருக்குக் கொடு. மிச்சத்த உன் கைச்செலவுக்கு வெச்சிக்க''.
எவ்வளவோ வற்புறுத்தியும் செல்லப்பன் காசு வாங்க மறுத்துவிட்டான்.
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு ஆளா என்று ராமசாமி மலைத்துப் போனார்.
சதாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. செல்லப்பன் சுழன்று சுழன்று வேலை பார்த்தான். உதவி தேவையான இடங்களில் எல்லாம் கைக் கொடுத்தான். இலை முழுவதும் பரப்பப்பட்டு இருந்த உணவு வகைகளைக் குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தான்.
யார் கண்பட்டதோ, நன்றாக திடகாத்திரமாக உலா வந்த ராமசாமியைப் பாரிசவாயு நோய் தாக்கியது. வலது பக்கம் செயலிழந்து படுக்கையில் சாய்ந்து விட்டார்.
மருத்துவமனையில் ஒரு மாதம் படுத்த படுக்கையாகக் கிடந்து, பிழைத்து வீடு வந்து சேர்ந்தார். பிசியோ தெரபிஸ்டுகள் வந்து ராமசாமிக்கு எழுந்து நடக்கப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு இரண்டு மாதங்களுக்கு அவரோடு தூங்கி அவர் தேவைகளைக் கவனித்துக் கொள்ள ஒருவரை நியமிக்க எத்தனித்த பொழுது ராமசாமி சொன்னார்,
""செல்லப்பனைக் கூப்பிட்டு வாருங்கள், அவன் என்னோடு இருக்கட்டும்''.
ராமபிரானிடம், ஹனுமான் காட்டிய பக்தி, நேசம், பணிவு, அன்புக்கு இணையாகச் செல்லப்பன் ராமசாமியிடம் காட்டினான்.
அவனுடைய கவனிப்பில் மெதுவாக ராமசாமி தேறிவர ஆரம்பித்தார். வேளா வேளைக்கு மருந்து, உணவை ஊட்டி விடுவது, இயற்கை உபாதைகளைக் கழிக்க உதவி செய்வது என்று பார்த்துப் பார்த்துச் செய்தான்.
ராமசாமி, இப்பொழுது எல்லாம் ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தாற்போல, ஆர்க்கிடெக்டை வரவழைத்தார். திருவான்மியூர் அருகிலே அவருக்கு இருபது கிரவுண்டில் காலிமனை இருந்தது. அதில் முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி பணித்தார்.
""அப்பா, திருவான்மியூர் எவ்வளவு காஸ்டிலியான ஏரியா, அங்கே போய் முதியோர் இல்லமா? வேணும்னா பூந்தமல்லியிலே இருக்கிற இடத்திலே முதியோர் இல்லத்தை ஆரம்பிங்க'' என்றான் மூத்த மகன்.
""உஷ், யாரும் இதைப்பற்றிப் பேசாதீங்க. இது என் சம்பாத்தியத்திலே வாங்கிய இடம். இதை எப்படி உபயோகிக்கணும் என்று எனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. நான் படுத்த படுக்கையா இருந்தப்போ, பெத்த புள்ளைகளான நீங்கள் எல்லாம் எப்படி நடந்துக்கிட்டீங்க என்பதைப் பார்த்துக்கிட்டுதானே இருந்தேன். பண பலம், ஆள் பலம் கொண்ட எனக்கே வயோதிகத்தில் இந்த நிலை என்றால், பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ இங்கே கஷ்டப்படும் முதியவர்கள், அநாதைகளாகப் பெற்ற பிள்ளைகளால் வெளியே விரட்டப்படும் முதியவர்கள் என்ன பாடுபடுவார்கள். அதற்காகவே இந்த முதியோர் இல்லத்தைத் தொடங்குகிறேன்'' என்றார்.
மூன்று வருடங்கள் ஓடி மறைந்தன. "ராமு நாகு' முதியோர் இல்லம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எண்பத்து நாலு வயசு ராமசாமி தன் மனைவியுடன் இங்கேதான் வாழ்கிறார். சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்.
ராமு நாகு முதியோர் இல்லத்தின் மேலாளர் யார் தெரியுமா? நம்ப செல்லப்பன்தான். அவன் தன் குடும்பத்தோடு முதியோர் இல்லத்துக்கு அருகிலேயே வாழ்கிறான். தன் சொந்த இடத்தில் அந்தப் பாக்கியத்தை அவனுக்குக் கொடுத்தது ராமசாமி தான். அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப்படாத நெஞ்சம் கொண்ட செல்லப்பனுக்கு இந்தப் பதவியைத் தந்தது வெகு பொருத்தம்தானே!
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
( குறள் : 513)
பொருள் :
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப்படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்து பதவி தருவதுதான் தெளிவு.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...