பிரம்மாண்ட நாயகன்!
பாம்பே ஞானம் என்கிற ஞானம் பாலசுப்ரமணியம் தமிழ் நாடக உலகில் கவனம் ஈர்த்த பெண்மணி. முழுவதும் பெண்களே நடிக்கும் "மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு'வை கடந்த 32 ஆண்டுகளாக நடத்தி வருபவர்.


பாம்பே ஞானம் என்கிற ஞானம் பாலசுப்ரமணியம் தமிழ் நாடக உலகில் கவனம் ஈர்த்த பெண்மணி. முழுவதும் பெண்களே நடிக்கும் "மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு'வை கடந்த 32 ஆண்டுகளாக நடத்தி வருபவர். சமூக நாடகங்களை எழுதி மேடையேற்றத் துவங்கியவர், அவற்றின் மூலமாக, முதியோர்களின் பிரச்னைகள். தலைமுறை இடைவெளி சிக்கல்கள் உள்ளிட்டவற்றை அலசியவர். ஒரு கட்டத்தில் போதேந்திரர், பக்த ஜெயதேவர், ரமணர், ஷீரடி சாய்பாபா, பகவான் ராமகிருஷ்ணர் ஆகியோரது வாழ்க்கை மற்றும் போதனைகளை மேடையில் எடுத்துச் சொல்லி, ஆன்மிக அன்பர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றவர். கடந்த பிப்ரவரியில் யூடியூபினை தனது தளமாக்கிக் கொண்டு, தியாக பிரம்மத்தின் வாழ்க்கையைப் படமாக எடுத்து வெளியிட்டார். அடுத்து, திருப்பதி வெங்கடேச பெருமாளின் வரலாற்றை "பிரம்மாண்ட நாயகன்' என்ற பெயரில் இப்போது படமாக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் யூடியூப்பில் அதனைக் காணலாம். பாம்பே ஞானம் தனது பிரம்மாண்ட நாயகன் பற்றிப் பேசுகிறார்:
மேடை நாடகத்திலிருந்து, யூடியூப் பக்கம் போனது ஏன்?
பொது முடக்கக் காலத்தில் சினிமா உலகமே கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்ட சூழ்நிலையில் மேடை நாடகம் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதே சமயம் என்னுடைய ஆன்மிகப் மகான்கள் பற்றிய நாடகங்களைப் பெரிதும் ரசித்துப் பார்த்த பலரும், "அடுத்து என்ன?' என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்த சமயத்தில், மேடை நாடகங்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் ஒரு ஆன்மிக சப்ஜெட்டை எடுத்துக் கொண்டு யூடியூபுக்காக ஒரு படம் பண்ணினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கேற்ப தியாக பிரம்மத்தின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டு "எந்தரோ மகானுபாவலு?" என்ற தலைப்பில் படமாக்கினேன். முதலில் அகலக் கால் வைக்கிறோமே என்ற பயம் கூட எனக்கு இருந்தது. ஆனால், என் கவலையை அந்த தியாகப் பிரம்மத்திடமே சமர்பித்துவிட்டு, ஸ்கிரிப்ட் எழுதி முடித்து, படப்பிடிப்பினை ஆரம்பித்தேன். ஒரு மாதம் ஷூட்டிங். கடந்த பிப்ரவரியில் யூடியூப் மூலமாக வெளியிட்டேன். முதல் நாளன்றே ஐம்பது நாடகம் போட்டதற்கு இணையான பாராட்டுக்கள்; எனக்கு பெரும் மகிழ்ச்சி. இன்று வரை மூன்றே கால் லட்சம் பேர் அதனைப் பார்த்துவிட்டார்கள். நான் எதிர்பாராத ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ்.
நீங்கள் செலவு செய்ததற்கு ஈடான பணமாவது வந்ததா?
தியாக பிரம்மம் போன்ற ஒரு தெய்வீகமான விஷயத்தைப் பார்க்கிறபோது அவருக்கு அவமரியாதை செய்வது போன்ற பொருட்களின் விளம்பரங்கள் இடையிடையே வருவதைத் தவிர்க்க நினைத்தேன். எனவே, யூடியூப் நிறுவனத்திடம், "நீங்கள் இடையில் விளம்பரங்களும் போட வேண்டாம்; எங்களுக்கு பணமும் தரவேண்டாம்" என்று சொல்லிவிட்டேன். ஆனாலும், ஏராளமானவர்கள், தாங்களாகவே முன்வந்து எங்கள் வங்கிக் கணக்கில் நன்கொடை அளித்து எங்களை நெகிழச் செய்துவிட்டார்கள்.
பெருமாளின் வரலாற்றைப் படமெடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?
அடுத்து எந்த சப்ஜெக்ட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அத்திகிரிவரதர் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் சென்றேன். அசாத்தியமான கூட்டம் காரணமாக, எங்களை தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. எனவே, ஓரிக்கை சென்று, காஞ்சிப் பெரியவரை தரிசித்தோம். அப்போது, நெற்றியில் பளீரென்று நாமம் அணிந்த ஆஜானுபாகுவான ஒருவர் என்னிடம் வந்து, "நான் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரி. உங்களைப் பார்த்ததும், இதைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது" என்று சொல்லி "சில முத்து மணிகளைக் கொடுத்தார். அந்தக் கணமே அடுத்த படம் திருப்பதி வேங்கடாசலபதிதான் என்று! முடிவு செய்துவிட்டேன்.
சென்னை திரும்பியதும், வழக்கமாக எனக்கு ஆண்டுதோறும் திருப்பதி தேவஸ்தான வெளியீடான டைரி கொடுக்கும் சிநேகிதியிடம், "இந்த வருட பெருமாள் டைரி கொடு! அதில்தான் ஸ்கிரிப்ட்டை எழுத விரும்புகிறேன்: என்று கேட்டபோது, "இந்த வருட டைரி வாங்க வில்லையே!" என்று சொன்னார். எனக்கு ஏமாற்றம். ஆனால், அடுத்த சில நாட்களில் என் இன்னொரு சிநேகிதி எங்கள் நாடகக் குழுவினருக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு சிக்னலில் காத்திருந்த நேரத்தில், முன் பின் அறிமுகமில்லாத ஒருவர் அவரிடம் ஒரு திருப்பதி டைரியைக் கொடுத்து, "இதை சேர்க்க வேண்டியவரிடம் சேர்த்துவிடுங்கள்!" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். இனிய அதிர்ச்சியுற்ற அந்த சிநேகிதி என்னிடம் திருப்பதி டைரியைக் கொடுத்து நடந்ததைச் சொன்னபோது மெய்சிலிர்த்துப் போனேன்.
"பிரம்மாண்ட நாயகன்" பற்றி...
திருப்பதி என்றதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவவது பெருமாள், லட்டு, மொட்டை இவைதான். ஆனால், திருப்பதிக்கும், அந்த ஏழு மலையானுக்கு பல்லாயிரம் வருட வரலாறு உண்டல்லவா? பெருமாள் அங்கே ஏன் வந்தார்? எப்படி வந்தார்? எதற்காக வந்தார்? என்பதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்? அதை விரிவாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த "பிரம்மாண்ட நாயகன்'. செங்கற்பட்டின் மலைப் பகுதிகளுக்குச் சென்று படம் பிடித்தோம். பிரம்ம தேசம், வைகுண்டம் போன்றவற்றுக்கு ஸ்டுடியோவுக்குள்ளேயே செட் போட்டோம். கிருஷ்ண பிரேமி சுவாமி, வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, விசாகா ஹரி ஆகியோரது உபன்யாசங்கள், திருப்பதி மற்றும் பெருமாளின் வரலாற்றைச் சொல்லும் ஏராளமான புத்தகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஸ்கிரிப்ட் எழுதினேன். விஷ்ணு, பத்மாவதி, ராமானுஜர், அன்னமையா, அனந்தாழ்வார், வகுளா தேவி என பல கேரக்டர்களுண்டு. ஷூட்டிங் முடிந்துவிட்டது. மூன்று மணி நேரத்துக்கு விரிவான படம். பின்னணி இசைதான் பாக்கி. அதையும் முடித்து இந்த டிசம்பருக்குள் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
படத்தின் பட்ஜெட் எவ்வளவு?
காஸ்டியூம், செட், மேக்-அப் என்று கை மீறி செலவு செய்திருக்கிறோம். தயாரிப்பு செலவு 75 லட்சத்தைத் தாண்டிவிட்டது. தியாக பிரம்மம் படம் போலவே, இதிலும் படத்தின் இடைஇடையே விளம்பரம் இருக்காது என்பதால் வருவாய் இருக்காது. ஆனாலும் நல்ல காரியம் என்று மனதில் பட்டதால் மற்றவை பற்றி யோசிக்காமல் இறங்கிவிட்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...