கதை சொல்லும் குறள் - 50: உரைகல்!
காலை மணி எட்டு முப்பது ஆகியிருந்தது. கலைமகள் பெண்கள் கல்லூரி களைகட்டத் தொடங்கியிருந்தது.


காலை மணி எட்டு முப்பது ஆகியிருந்தது. கலைமகள் பெண்கள் கல்லூரி களைகட்டத் தொடங்கியிருந்தது. பட்டாம்பூச்சிகளாய் வண்ண உடைகள் அணிந்து இளம் பெண்கள் கல்லூரியை நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டிருந்தனர்.
சரியாக ஒன்பது மணிக்குக் காலைப் பிரார்த்தனைக்கான மணி அடித்துவிடும். கல்லூரிப் பெண்கள் அனைவரும், பேராசிரியர்களோடு மைதானத்தில் கூடி விடுவார்கள். இறை வழிபாடு பாடலோடு தொடங்கும், பிறகு ஆழ்ந்த அமைதியோடு கூடிய பிரார்த்தனை, அன்றைய நற்செய்தி; பிறகு கல்லூரியின் முக்கிய நிகழ்ச்சிகள் என்று பதினைந்து நிமிடங்கள் ஓடிவிடும்.
பூங்கொடி, தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், இன்னும் பிரார்த்தனைத் தொடங்க இருபது நிமிடங்கள் இருந்தன. அவளுடைய கால்கள் நேராகப் பெண்கள் விடுதியை நோக்கி செல்லத் தொடங்கின.
அன்றைக்கு, முதல் ஆடி வெள்ளிக்கிழமை, பூங்கொடி யின் அம்மா, அதிகாலையிலேயே எழுந்து குளித்து, பூஜையைச் செய்துவிட்டாள். சுடச்சுட நெய் ஒழுக கேசரியைச் செய்து அம்மனுக்குப் படைத்தாள்.
கேசரியின் சுவையில் மயங்கிய பூங்கொடி, அம்மா, கேசரி பிரமாதம். என் சிநேகிதி அர்ச்சனாவுக்கு ஒரு டிபன் பாக்ஸிலே கேசரியைப் போட்டுக் கொடும்மா. பாவம் அவள் ஹாஸ்டல் சாப்பாட்டைப் சாப்பிட்டு வாய் செத்துப் போய் கிடக்கறா.
ஏண்டி பூங்கொடி, தூத்துக்குடியிலே இருந்து சென்னைக்குப் படிக்க வந்திருக்கா, அவளுக்கு இங்கே சென்னையில் யாரும் சொந்த பந்தம் இல்லைன்னு, எங்களைக் கார்டியனாக ஆக்கி வாராவாரம் இங்கே நம்ம வீட்டுக்கு அர்ச்சனாவைக் கூட்டிக்கிட்டு வந்துடறே. இதைத் தவிர அரசாங்க விடுமுறைகளையும் நீ விட்டு வைக்கறது இல்லை.
அவளுக்கு, நான் வக்கணையா ஆக்கிப் போடறேன். உங்க நட்புக்கு மரியாதை கொடுக்கறேன். போன மாசம் டைபாயிடு வந்து படுத்த அர்ச்சனாவை, அவளுடைய ஊருக்கு அனுப்பாமல், இங்கே கொண்டாந்துட்டே; நானும், உன் அப்பாவும் பெத்த மகளா, அவளுக்குச் சேவகம் செய்தோம்.
இது பத்தாதுன்னு, இப்ப டிபன் பாக்ஸிலே வேறே கட்டிக்கிட்டுப் போறே.
அம்மா, செய்யறதைச் சொல்லிக் காட்டாதே. அவ, ரொம்ப நல்லவம்மா. நாம இவ்வளவு செய்யறதை நினைத்து நன்றி பாராட்டமலா இருப்பாள். சரி சரி, நான் காலேஜூக்குக் கிளம்பறேன், என்று பூங்கொடி தன் தாயிடம் விடை பெற்றாள்.
இந்தா, சீக்கிரம் சாப்பிடு, இப்ப மணி அடிச்சுடுவாங்க என்று கூறிப் பூங்கொடி, கேசரி நிறைந்த டிபன் பாக்ûஸ, அர்ச்சனாவின் கையில் திணித்தாள்.
பிரமாதம், அம்மாவுக்கு நன்றி சொல்லுடி என்று அர்ச்சனா கேசரியை விழுங்கத் தொடங்கினாள்.
பூங்கொடிக்கு இரண்டு, மூன்று சிநேகிதிகள் இருந்தாலும் அதில் முதலாவது இடத்தை அர்ச்சனாவே பிடித்து இருக்கிறாள்.
அர்ச்சனா பேரழகி, சிவந்த நிறம், அளவு எடுத்தாற் போன்ற உடல் வாகு, இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற யாரையும் ஒரு நொடியில் கவர்ந்திழுக்கும் முகம். அவளுடன் நட்புக் கொள்ள பலர் முயல, பூங்கொடிக்கே முதலிடம் கிடைத்தது. அழகில் மட்டும் அல்ல, படிப்பிலும் அர்ச்சனா சிறந்து விளங்கினாள்.
பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்தப் பெண்கள், ஏதாவது படிப்பில் சந்தேகம் வந்தால்கூட, அர்ச்சனாவிடம் சென்று விளக்கம் கேட்கிற அளவுக்கு அவள் புத்திசாலியாக விளங்கினாள். பேராசிரியர்கள்கூட அவள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டு கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு, கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய அர்ச்சனாவையே, தலைமைப் பணியில் அமர்த்தினர்.
சாகுந்தலத்தை நாடகமாக நடத்த அர்ச்சனா முடிவு செய்தாள். சகுந்தலையாக அர்ச்சனாவைத் தவிர வேறு யார் பொருத்தமாக இருப்பார்கள். அவளே கதாநாயகி, அதுசரி மற்ற பாத்திரங்களுக்கு, தேர்வை அர்ச்சனாவே செய்து கொண்டிருந்தாள்.
ஏய், பூங்கொடி உன் உயிர்த் தோழி நாடகம் போடப் போறாளாமே, என்றாள் மல்லிகா.
ஆமாண்டி, அதுக்கு என்ன?
ஏண்டி, நிச்சயமாக உனக்கும் ஏதாவது ரோல் தருவாள் பாரேன்.
தருவாளா என்ன? என்று பூங்கொடி ஆர்வமாகக் கேட்டாள்.
தராமல், நீ அவளுக்கு எவ்வளவு உதவிகள் செய்யற, நீ ஒன்று செய், அவளிடம் துஷ்யந்தன் ரோலைக் கேட்டு வாங்கு. உங்க இரண்டு பேரையும் ஜோடியா மேடையில் பார்க்க நாங்க எல்லோரும் ஆவலா இருக்கிறோம்.
கட்டாயமாக, அர்ச்சனா தனக்கு ஒரு கதாபாத்திரத்தைத் தருவாள் என்று பூங்கொடியும் எதிர்பார்த்தாள். அர்ச்சனா அளவுக்கு பூங்கொடி அழகி இல்லை என்றாலும், இவளும் மூக்கும் முழியுமாக மாநிறத்திலும் அழகியாகத்தான் இருந்தாள்.
கதாபாத்திரங்கள் எல்லாம் தேர்வாகி, நாடக ரிகர்சலும் தொடங்கி விட்டது. அந்தோ பரிதாபம்! பூங்கொடிக்கு துஷ்யந்தன் பாத்திரமென்ன, ஒரு காவலாளியாகக் கூட நடிக்கப் பூங்கொடி சான்ஸ் தரவில்லை.
பூங்கொடி, என்று மூச்சிரைக்க ஓடி வந்தாள் மல்லிகா.
என்னடி? என்றாள் பூங்கொடி.
என்ன அநியாயம்டி இது, உனக்கு அர்ச்சனா ஒரு கதாபாத்திரம் கூடத் தரவில்லை. யார் யாருக்கோ நடிக்கச் சான்ஸ் கொடுத்திருக்கிறாள். நீ அவளுக்குச் செஞ்ச
உதவிகளைக் கூட அந்த நன்றி கெட்டவ நினைக்கலையே.
மனசு பொறுக்காமல் நானே அர்ச்சனா கிட்ட இதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவள் திமிரா, நீ உன் வேலையைப் பாரு, யார் யாருக்கு என்ன ரோல் தரணும் என்று எனக்குத் தெரியும். திறமை உள்ளவங்களுக்குத் தான் தருவேன் என்கிறாள். அப்படின்னா நீ திறமை இல்லாதவளா-?
குபுக்கென்று பூங்கொடியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது, அதைச் சமாளிக்க முயன்று தோற்றுப் போனாள்.
மல்லிகா, நீ ஏன் போய் அவளிடம் இதைப் பற்றிப் பேசினே என்று சிடுவிடுத்தாள்.
ஆமாண்டி, நான் எதுக்கு இப்படி கேட்கணும்? எனக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று கத்திவிட்டு மல்லிகா சென்றுவிட்டாள்.
மல்லிகா சொன்னதில் என்ன தப்பு இருக்கு, பூங்கொடியின் உள்மனது அதட்டியது. எனக்கு நடிக்க வராதா? அர்ச்சனா என்ன பிறவி நடிகையா? இவ்வளவு பெரிய பிராஜெக்டை ஏற்றுச் செய்யும் பொழுது எனக்கு அதிலே ஒரு பங்களிப்பு தரவேண்டும் என்று தோன்றவில்லையே.
பூங்கொடிக்கு மனதில் ஒரு எண்ணம் இருந்தது. அது அர்ச்சனாவைத் தன் அண்ணி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. பூங்கொடியின் அண்ணன் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான், கைநிறையச் சம்பளம், அமெரிக்காவில் வாழும் அவனைக் கட்டிக்க நான், நீ என்று பெண்கள் போட்டி போடுவார்கள்தானே, ஆனால் என் அருமை அர்ச்சனா அண்ணியாக வந்தால், இந்த ஆசையைப் பூங்கொடி தன் மனதில் வளர்த்து வந்தாள், ஆனால் இன்று அதற்கு மூடுவிழா நடத்திவிட்டாள்.
ஒரு வாரமாக அர்ச்சனாவும் பூங்கொடியும் சரியாகப் பேசிக் கொள்வது இல்லை. அர்ச்சனா, ஆண்டு கலைவிழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளிலேயே மூழ்கிப் போய் இருந்ததால் இரண்டு வாரமாகப் பூங்கொடியின் வீட்டுக்கு வருவதில்லை.
பூங்கொடி, ஏன் அர்ச்சனா வீட்டுக்கு வரலே? அவளுக்குப் பிடிக்குமேன்னு மாம்பழ ஐஸ்கிரீமைப் பண்ணி வெச்சிருந்தேன்.
அம்மா, அவ பிஸியா இருக்கா.
ஐஸ்கிரீமை உன்கிட்ட கொடுத்து அனுப்ப முடியாதே, சரி, இப்ப அவ வரலைன்னா என்ன? என்று பூங்கொடி சிடுசிடுத்தாள்.
என்னடி, உன் உயிர்த்தோழின்னு அவ பின்னாலேயே சுத்துவே? இப்ப வெறுப்பாப் பேசறே.
மனம் பொறுக்காமல், நடந்ததைத் தன் அம்மாவிடம் பூங்கொடி கொட்டித் தீர்த்தாள்.
போகட்டும் விடு, உலகமே அப்படித்ததான் இருக்கு. அர்ச்சனாவை மட்டும் எப்படி மாறி நடப்பாள்? என்று சிம்பிளாக அம்மா முடித்துக் கொண்டாள்.
கலைவிழாவுக்கு, சரியாகப் பத்து நாட்களே பாக்கி இருந்தது.
பூங்கொடிக்கும், அர்ச்சனாவுக்கும் ஆன இடைவெளி அதிகரித்துக் கொண்டே போனது.
""பூங்கொடி என்று'', அன்று அன்பொழுகக் கூப்பிட்டுக் கொண்டு அர்ச்சனா வந்தாள்.
சுரத்தில்லாமல் "'என்ன?'' என்றாள் பூங்கொடி.
இந்தா இதைக் கையில் பிடி, என்று ஒரு கொத்துப் பேப்பர்களைப் பூங்கொடியின் கைகளில் திணித்தாள்.
இது எதற்கு? என்று பூங்கொடி புருவங்களை உயர்த்தினாள்.
பூங்கொடி, உன் பேச்சுத் திறமையும், ஆளுமையும் எனக்குத் தெரியும். அதனால் உன்னை ஆண்டுவிழாவின் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகத் தேர்வு செய்திருக்கிறேன். சாகுந்தலை நாடகம் என்றால், நாலைந்து சீன்களில் மட்டும் தான் வருவாய். எழுதிக் கொடுத்ததை ஒப்புவிப்பாய். ஆனால் தொகுப்பாளினியாக வரும்பொழுது உன் பேச்சுத் திறமை, கற்பனை வளம், முக பாவனைகள், உடலின் மொழி எல்லாம் வெளிப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முன்னாலும் வெவ்வேறு விதமாகப் பேசி, அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய சுருக்கத்தைச் சொல்லி, பங்கு பெறுவோர்களை அறிமுகப்படுத்தி, என் உயிர்த் தோழி பூங்கொடியை எல்லோரும் மேடையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கு முன்னாலும் பார்ப்பார்கள், அவளின் திறமையைப் புரிந்து கொள்வார்கள். இந்தக் காகிதங்கள், அன்று நடைபெறப் போகும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றியது. இதில் பங்குபெறுவோர்களின் பெயர்களும் உள்ளது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு சந்திப்போம். அதற்கு நீ உன்னைத் தயார்படுத்திக் கொள். என்ன பேசப் போகிறாய் என்பதை நீயே முடிவு செய். சிறு மாற்றங்கள் இருந்தால் நாம் இருவரும் கலந்து முடிவு செய்யலாம். சரி, வேலை தலைக்கு மேல் இருக்கு, வரேன் என்று பூங்கொடியை அணைத்து விடைபெற்றுக் கொண்டாள்.
அர்ச்சனா, நடந்து சென்று புள்ளியாக மறைந்து விட்டாள், ஆனால் பூங்கொடியின் மனதில் இமயமென உயர்ந்து விட்டாள்.
அர்ச்சனா தரமானவளா அல்லது தரம் கெட்டவளா என்பதை அவளுடைய இந்தச் செயலே உரைகல்லாக உரைத்துக் கொண்டிருக்கிறது.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
( குறள் : 505)
பொருள் :
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...