சிகரம்  ஏறும் சிங்கப் பெண்!

பூர்ணாமலாவத் இருபது வயது  முடிவதற்குள்  உலகின் பெரும்பாலான  கண்டங்களில்  உள்ள சிகரங்களில்  ஏறி சாதனை  படைத்திருக்கிறார்.
சிகரம்  ஏறும் சிங்கப் பெண்!
Published on
Updated on
1 min read

பூர்ணாமலாவத் இருபது வயது முடிவதற்குள் உலகின் பெரும்பாலான கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தின் பகலா என்ற ஊரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களான தேவிதாஸ், லட்சுமி தம்பதியரின் மகள் இவர்.

2013-ஆம் ஆண்டு மலையேற்றப் பயிற்சி தொடங்கியது. போங்கிர் பாறையில் ஏறுவதற்காக பயிற்சி மேற்கொண்டபோது பாறையின் உயரத்தைப் பார்த்ததும் அவரது கால் நடுங்க ஆரம்பித்தது. ஆனால், மலை உச்சியை அடைந்ததும் அடைந்த மகிழ்ச்சியில் மலையேற்றம் குறித்த பயம் முற்றிலும் மறைந்து போனதாகச் சொல்கிறார் பூர்ணா.

2014-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது பூர்ணாவுக்கு வயது 13. எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு முன் பயிற்சியாளர்கள் அவரது பெற்றோரை சந்தித்து அனுமதி கேட்டனர். பூர்ணா, அவரது பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் அம்மா பயந்திருக்கிறார். ஆனால் அப்பா மறுப்பு ஏதும் சொல்லவில்லை அம்மாவை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார் பூர்ணா.

பூர்ணாவும் அவரது குழுவினரும் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தனர். அந்த நேரத்தில் நேபாள பகுதியில் 17 ஷெர்பாக்கள் அவலாஞ்ச் எனப்படும் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் அவரது கல்விச்சங்க செயலாளர் இத்தகைய அபாயமான சூழலில் மலையேற வேண்டாம் என்று சொன்னாராம். "முன்வைத்த காலைப் பின் வைப்பது சரியல்ல என்று நீங்கள்தானே சொல்லியிருக்கிறீர்கள். நான் இதைச் செய்து முடிப்பேன்' என்று அவரிடம் சொல்லிவிட்டு மலையேற்றத்துக்கு தயாராகி யிருக்கிறார் பூர்ணா.

எவரெஸ்ட் சிகரத்தின் இறுதிப் பகுதியை அடைந்த தருணத்தில் மலையேற்றத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்களைக் கண்டதும் பூர்ணா அச்சமடைந்தார்.

தன் மனதிடத்தாலும் அசாதாரணமான உடல் பலத்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். உலகிலேயே மிகச் சிறிய வயதில் எவரெஸ்ட்டில் ஏறிய பெண் என்ற சாதனைப் படைத்தார்.

ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் எல்பிரஸ், தென் அமெரிக்காவின் அகங்காகுவா, ஓஷியானாவின் கார்ட்ஸ் னெஸ், அண்டார்டிகாவின் வின்சன் மாஸிஃப் என ஆறு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறி வெற்றி வாகை சூடியவர்.

தற்போது, வட அமெரிக்காவின் டெனாலி சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இவரது சாதனைகளுக்காக ஃபோர்ப்ஸ் தரவரிசைப் பட்டியலில் சுய முயற்சியால் உயர்ந்த பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ""உலகம் நம் மீது நம்பிக்கை வைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும்'' என்று பெருமையுடன் கூறுகிறார் பூர்ணா மலாவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com