நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனசாட்சியின் குரலில் குன்னூர் பெண்மணி!

ராதிகா சாஸ்திரி. வடக்கே உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் பிறந்து வளர்ந்தவர்.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 12:30 am

தினமணி

ராதிகா சாஸ்திரி. வடக்கே உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் பிறந்து வளர்ந்தவர். தற்போது தெற்கே தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு ஐரோப்பிய உணவகம் நடத்திவருகிறார். கரோனா தொற்றின் உச்சகட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில், நீலகிரி மாவட்ட மக்களின் கரோனா சிகிச்சைக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ராதிகா துவக்கிய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய "மனதின் குரல்' (மன் கி பாத்) உரையில் இவரது சேவையைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டியது இவரது சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

ராதிகா சாஸ்திரியுடன் ஒரு பேட்டி:

வடக்கே, டேராடூனில் பிறந்த நீங்கள் தமிழ்நாட்டில் குன்னூரில் வந்து செட்டில் ஆனது எப்படி?

எனது சொந்த ஊரான டேராடூனில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். பட்டப்படிப்பினை முடித்தபின், பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் சேர்ந்து எம்.பி.ஏ. படித்தேன். அதன் பிறகு கனடாவில் மேக்கில் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பினை முடித்தேன். இந்தியா திரும்பியபின், பெங்களூரில் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் குழுமங்களில் உயர் பொறுப்புகளை வகித்தேன். அப்போதே அடிக்கடி ஊட்டி, குன்னூருக்கு வருவேன். எனக்கு குன்னூர் மிகவும் பிடித்துப் போனதால், 2012-இல் இடம் வாங்கினேன். 2016-இல், குன்னூருக்கே வந்து செட்டில் ஆகிவிட்டேன்.

குன்னூரில் உள்ள உங்களுடைய "கஃபே டிம்" உணவகத்தின் ஸ்பெஷாலிடி என்ன?

குன்னூரில் செட்டில் ஆனதும், ஒரு ஐரோப்பிய வெஜிடேரியன் உணவகம் ஆரம்பிக்கும் எண்ணத்தை சொன்னபோது, பலரும், அதைரியமூட்டினார்கள். சுற்றுலா மையமான குன்னூரில் அசைவம், மது இவை இல்லாமல் உணவகம் எடுபடாது என்றார்கள். ஆனாலும், என்னுடைய வீட்டு வளாகத்தின் ஒரு பகுதியிலேயே உணவகத்தை ஆரம்பித்தேன். உணவக பிசினஸ் எனக்கு புது அனுபவம் என்றாலும், அதை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்தேன். நல்ல, சுவையான, உடல் நலத்தை பாதிக்காத உணவைக் கொடுத்தால், நிச்சயம் வரவேற்பு இருக்கும் என நம்பினேன். என்னுடைய "கஃபே டிம்" சிறிய உணவகம்தான். ஆனாலும், அது அமைந்துள்ள இயற்கையான சூழல் அற்புதமானது. வண்ணச் செடிகள் நிறைந்த தோட்டத்தின் வழியே நடந்து உணவகத்துக்குச் செல்வது கூட ஒரு புது அனுபவம்தான். இயற்கையை ரசித்தபடியே நிதானமாக ருசித்து சாப்பிட்டு மகிழலாம். வழக்கமான அச்சிட்ட மெனு கார்டு போல இல்லாமல், கலைநயத்துடன், சித்திரங்களோடு கையால் எழுதிய மெனு கார்டு தயாரித்து வைத்திருக்கிறோம். குடிதண்ணீர் பாட்டில்கள் கூட புதுமையான வடிவ அமைப்பு கொண்டவை.

2016-இல் ஒரு செஃப், இரு ஊழியர்கள், நான் என நான்கு பேரோடு ஆரம்பித்த உணவகத்தில் இன்று மொத்தம் பத்து பேர் பணிபுரிகிறோம். அயல்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி நம் நாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் கூட வருகிறார்கள். எங்களுடைய ஐரோப்பிய , மத்திய தரைக்கடல் பகுதி சைவ உணவு வகைகளை விரும்பி உண்கிறார்கள்.

உணவகம் நடத்திவரும் நீங்கள் ஆம்புலன்ஸ் சேவையை துவக்க என்ன காரணம்?

கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது, வாகனப் போக்குவரத்து இல்லாமல், உடல்நலம் குன்றிய பொது மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு போவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசித்தேன். சமூக ஊடகங்கள் மூலமாக ஜபல்பூரில் ஆட்டோவையே ஒரு ஆம்புலன்சாக மாற்றி பயன்படுத்துவதாக அறிந்தேன். நாமும் அதுபோல ஏன் செய்யக்கூடாது? என்ற எண்ணம் ஏற்பட்டது. காரணம், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் சாலைகள் குறுகலானவை; பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் செல்லவேண்டுமெனில், குறுகிய தெருக்கள், சாலைகள் வழியே செல்ல வேண்டி இருக்கும். எனவே, ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றிப் பயன்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். ஜபல்பூரில் அந்த ஆம்புலன்சை வடிவமைக்கும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அது போல செய்துகொடுக்கும்படி கேட்டேன். ஆட்டோவின் பின் பகுதியை சற்றே நீட்டி, நோயாளிக்குப் படுக்கை, உடன் வருகிறவருக்கு இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், மின் விசிறி, தீ அணைப்பான் போன்ற எல்லா வசதிகளும் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்களில் இருக்கும். 21 லட்சம் ரூபாய் செலவில் ஆறு ஆம்புலன்ஸ்களை வாங்கி, கேத்தி, குன்னூர், நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும், இதர அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் இந்த ஆம்புலன்ஸ் சேவையினால் பயன் அடைந்திருப்பார்கள். எனது இம்முயற்சிக்கு பலரும் நன்கொடைகள் அளித்து உதவியதை மறக்க முடியாது.

உங்களுடைய ஆம்புலன்ஸ் சேவை முயற்சியைப் பற்றி பிரதமர் மோடி கூட தனது மன் கி பாத் உரையில் பாராட்டினாரே! அது எப்படி நிகழ்ந்தது?

திடீரென்று ஒரு நாள் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இதர தகவல்களைக் கேட்டார்கள். எதற்காக என்று அவர்கள் சொல்லவில்லை. இந்த சேவையை வேறு இடங்களில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கேட்கிறார்கள் என நான் நினைத்தேன். பிரதமர் உரை ஒலிபரப்புக்கு முந்தைய தினம் தூர்தர்ஷனில் இருந்து வந்து ஆம்புலன்ஸ் சேவையை படம் பிடித்துச் சென்றார்கள். அப்போது கூட, மறுநாள் பிரதமர் உரையில் என்னைப் பற்றி குறிப்பிடப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. மன் கி பாத் ஒலிபரப்பு துவங்குவதற்கு சுமார் பத்து நிமிடங்கள் முன்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைத்து, விஷயத்தைச் சொல்லி, "மன் கி பாத் உரையைக் கேளுங்கள்" என்று சொன்னார்கள். பிரதமர் வாயால் என் பெயர் உச்சரிக்கப்பட்டபோது, என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.

பிரதமரின் உரைக்குப் பிறகு என்ன ரெஸ்பான்ஸ்?

எங்கு சென்றாலும், உள்ளூர் மக்கள் பாராட்டி நன்றி சொல்கிறார்கள். வெளியூர்களில் இருந்தெல்லாம் தொடர்பு கொண்டு இது போல ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை துவக்குவது எப்படி என்று ஆலோசனை கேட்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.