நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கதை சொல்லும் குறள் - 47: சேர்ந்தே இருப்போம்!

சமையல் அறையில், தன் கணவனுக்கு மிகவும் பிடித்த பிட்லையை சாந்தி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 12:30 am

DIN

சமையல் அறையில், தன் கணவனுக்கு மிகவும் பிடித்த பிட்லையை சாந்தி தயாரித்துக் கொண்டிருந்தாள். பிட்லை தஞ்சாவூரில் மிகவும் புகழ்வாய்ந்த உணவு வகை. பாகற்காய்களையும், கொண்டைக்கடலையையும் சேர்த்துச் செய்கின்ற சாம்பார்.
தஞ்சாவூர்க்காரரான சாந்தியின் கணவன் சிவாவுக்குப் பிட்லை என்றால் உயிர். வாரத்திற்கு ஒருமுறையாவது அதைச் செய்துவிட வேண்டும், இல்லை என்றால் ஏன் அதைச் சமைக்கவில்லை? என்று கேள்வி கேட்பான். சாப்பாடு வேண்டாம் என்று பொய்க்கோபம் காட்டுவான்.
சாந்தியின் மாமியார் சொல்லி இருக்காங்க,
""அம்மா சாந்தி, வாராவாரம் பிட்லையைச் செய்துவிடு இல்லை, சிவா கோபித்துக் கொள்வான்'' என்பார்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்த சாந்திக்கு, பிட்லையைச் செய்யக் கற்றுக் கொடுத்ததே அவளுடைய மாமியார்தான்.
சாந்தி டிபன்கேரியரில் சாப்பாட்டைக் கட்டி முடிக்கவும், கூடைக்காரன் வந்து காலிங்பெல்லை அடிக்கவும் சரியாக இருந்தது. பதினொரு மணிக்கு எல்லாம் சாப்பாட்டை எடுத்துச் செல்ல மணிசேகரன் வந்து விடுவான்.
சாந்தி தன் குடும்பத்தோடு வாழ்ந்து வருவது தேனாம்பேட்டையில், இங்கே முதலில் வந்தால்தான் வழி நெடுக பல இல்லங்களில் கேரியர்களை வாங்கிக் கொண்டு மணிசேகரன், மருத்துவமனையை அடைய நேரம் ஒன்றரையாகிவிடும்.
சாந்தியின் கணவர் சிவநாதன் சிறுநீரகவியலில் இளநிலை மருத்துவராகப் பணியாற்றுகிறார். சாந்திக்கும், சிவநாதனுக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே முடிந்திருந்தது. மூன்று வயதில் மகள் மமதி இருந்தாள்.
பகல் பனிரெண்டு மணிக்கு, மமதியைப் பிளே ஸ்கூலில் இருந்து அழைத்து வர வேண்டும். ஆகையினால் அவசரம் அவசரமாகக் கிளம்பி காரை ஓட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் நோக்கி விரைந்தாள்.
மருத்துவமனையில் சாப்பிடுவதற்கான இடைவேளை வந்தது. சிவநாதன் வார்டுகளில், ரவுண்ட்ûஸ முடித்துக் கொண்டு, சாப்பிடும் அறைக்குள் நுழைந்தான்.
""வாடா சிவா, உன் வீட்டு சாம்பார் ரொம்பப் பிரமாதம்டா'' என்றான் டாக்டர். வரதராஜன்.
""டேய், அது சாம்பார் இல்லைடா, பிட்லை'',
"" அப்பப்பா என்ன சுவை'' என்றான் டாக்டர். கண்ணன்.
""அடப்பாவிகளா, எனக்கு கொஞ்சமாவது பாக்கி வெச்சீங்களா'' என்று சிவநாதன் பதற்றத்துடன் கேட்டான்.
""அடப்போடா, மிச்சமாம், எல்லாம் எங்கள் வயித்துக்குள்ளே போயிடுச்சு; பிட்லைக்கு தோதா உருளைக்கிழங்கு வறுவல், வெள்ளரிக்காய் பச்சடி, அப்பளம், தேவாமிர்தம்பா. உன் பெண்டாட்டியின் நளபாகத்திற்கு நாங்க எல்லாம் அடிமைடா'' என்று நாக்கைச் சப்புக் கொட்டினான் டாக்டர் மதன்.
""நான் எதைடா சாப்பிடறது'', பொய்க் கோபம் காட்டினான் சிவநாதன்.
""டேய், எங்க வீடுகளிலிருந்து எல்லாம் சாப்பாடு வந்திருக்கு, நீ அதையெல்லாம் சாப்பிடு'' என்றனர்.
வேறுவழி, தன் மனைவி சாந்தியை நினைத்து சிவநாதன் பெருமை அடைந்தான். மூன்று டிகிரிகள் வாங்கிய பட்டதாரி. கல்யாணத்திற்குப் பிறகு தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேரக் குடும்பத் தலைவி ஆகிவிட்டாள். சமையலே தெரியாதவள், இந்த நான்கு வருடங்களில் சமைக்கக் கற்றுக் கொண்டு இன்று விதவிதமாகச் சமைக்கிறாள். கணவன், குழந்தை, குடும்பம் என்று பம்பரமாகச் சுழன்றுப் பராமரிக்கிறாள். 
அன்று இரவு, கிளினிக்கில் பிராக்டிசை முடித்துக் கொண்டு வந்தான் சிவநாதன்.
""சாப்பிட வாங்க'' என்றாள் சாந்தி.
""சாந்தி, இன்றைக்கு...'' என்று சிவா முடிக்கும் முன் சாந்தி குறுக்கிட்டாள்.
""என்ன, உங்க சிநேகிதர்கள் பிட்லையை உங்களுக்குக் கொஞ்சம் கூடக் கொடுக்காமல் சாப்பிட்டு விட்டார்களா'' என்றாள்.
""ஆமாம்'' என்றான் சோகமாக.
""கவலைப்படாதீங்க, இப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியும், உங்களுக்கு நிறையவே எடுத்து வைத்திருக்கிறேன்'' என்று சொல்லி, சுடச்சுட இட்லிகளையும், அவைகள் மீது பிட்லையையும் தாராளமாக ஊற்றினாள்.
""அப்பா'', என்று வந்து கால்களைக் கட்டிக் கொண்ட மகளை வாரி எடுத்து, மடியின் மீது இருத்தி, முத்தமிட்டு அவளுக்கும் இட்லிகளை ஊட்ட ஆரம்பித்தான்.
டாக்டர். சிவநாதன், முன்னுக்கு வரத்துடிக்கும் மருத்துவர், கடந்த வருடம்தான் சிறுநீரகவியலில் முதுநிலை படிப்பான டி.எம்மை முடித்திருந்தான். எதிர்காலத்தைப் பற்றிப் பல கனவுகளில் திளைத்திருந்தான். வெளிநாடுகளுக்குச் சென்று பணி ஆற்ற வேண்டும் என்ற அவாவைக் கொண்டவனாக இருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக இருந்ததால், சிவநாதன் நிதானமாக எழுந்தான். வழக்கத்தைவிட அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். காலை ஆகாரம் முடிந்தவுடன், ""சாந்தி, சாந்தி'' என்று ஓங்கிக் குரல் கொடுத்து அழைத்தான்.
""என்ன? இன்னைக்கு ஐயா, ரொம்பக் குஷியாக இருக்கறீங்க'' என்றாள் சாந்தி.
""குஷியான விஷயத்தைச் சொல்லப் போறேன், அதான் குஷியா இருக்கேன், சாந்தி இன்றைக்குப் பகல் உணவைச் சமைக்காதே, வெளியே ஹோட்டலில் சாப்பிடலாம், மாலையில் சினிமா போகலாம், இரவு உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன்'' என்றான் சிவா.
""அப்படியென்ன விஷயம் உடனே சொல்லுங்க, இல்லாட்டி நான் உங்கள் கூட வெளியே வரமாட்டேன்'' என்றாள் சாந்தி.

""சரியான அடக்காரியாச்சே நீ, சரி சொல்லுகிறேன்''.

""எனக்கு ஆஸ்திரேலியாவிலே ராயல் பிரின்ஸ் ஆல்பிரெட் ஹாஸ்பிடலிலே வேலை கிடைத்திருக்கிறது''.

""ஹைய்'' என்று சாந்தி வாய்விட்டுக் கூவி மகிழ்ந்தாள்.

""ஆனால்...''

""என்ன ஆனால், சொல்லுங்க'' என்றாள்.

""என்னை ரிசர்ச் செய்யற கேட்டகிரியிலே செலக்ட் செய்திருக்கிறதுனாலே உன்னையும், மமதியையும் என்கூட அழைச்சிக்கிட்டுப் போக முடியாது. நீ மூன்று வருஷம் இங்கே சென்னையிலே இருக்கணும். பிறகு என்னோடு வந்து ஜாயின் பண்ணிக்கலாம்''.

""என்ன சொன்னீங்க, இடியென சாந்தி முழக்கமிட்டாள். உங்களை அங்கே அனுப்பிட்டு இங்கே நான் மூன்று வருஷங்கள் தனியா வாழணுமா. அம்மா சாமி, அது என்னாலே முடியாது. பணமும், பதவியும் எனக்கு முக்கியம் இல்ல, உங்களோடு சேர்ந்து வாழறதுதான் முக்கியம். மமதிக்கு அவளுடைய அப்பாவினுடைய அரவணைப்பு வேண்டும்''.

""இல்ல சாந்தி, நிறைய பணம் கிடைக்கும், பிறகு...''

சிவநாதனை மேலே பேசவிடவில்லை, சாந்தி தொடர்ந்தாள்,

""இதோ பாருங்க, எனக்கு பணம் முக்கியமில்லை, தினந்தோறும் நூறு ரூபாய் கொண்டு வாங்க, நான் அதிலே நிறைவா குடும்பம் நடத்துறேன். இல்லை இருக்கவே இருக்கு என் படிப்பு, வேலைக்குப் போறேன், உங்களுக்கு வேண்டியப் பணத்தைச் சம்பாதித்துத் தருகிறேன். ஆனால் எங்களை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போவது என்பது கனவிலும் நடக்காது''.

சொன்னபடியே, சாந்தி தன் கணவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பவில்லை. வாழ்க்கையில் பணம், பதவி முக்கியமில்லை, சந்தோஷம்தான் முக்கியம், அது தன் கணவருடன் சேர்ந்து இருப்பதில்தான் கிடைக்கும் என்பதை அவள் அறிந்து சரியான முடிவை எடுத்து விட்டாள்.

நன்றாகச் சிந்தித்துச் செயலில் இறங்கிவிட்டாள், பிறகு சிந்திக்கலாம் என்பது சாந்தியைப் பொறுத்த வரையில் அர்த்தமற்றதாகி விட்டது.

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.

( குறள் எண்: 467)

பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும். இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.