எழுத்தாளர் லக்ஷ்மி  100

பெண்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர்களில் லக்ஷ்மியும் ஒருவர். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதியவர் இவர்.
பெண்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர்களில் லக்ஷ்மியும் ஒருவர்.
பெண்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர்களில் லக்ஷ்மியும் ஒருவர்.

பெண்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர்களில் லக்ஷ்மியும் ஒருவர். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதியவர் இவர்.
லக்ஷ்மி அடிப்படையில் மருத்துவர்.
அதிலும் மகப்பேறு மருத்துவர். இதன் காரணமாக இவரிடம் வரும் நோயாளிகளை தனது சகோதரியாக, தாயாகப் பாவித்து அன்பு செலுத்தியதுடன், அவர்களின் மனங்களில் ஊடுருவி அவர்களது பிரச்னைகளை - நிராசைகளை எழுத்தில் வடித்ததுடன், அதற்கான தீர்வையும் கண்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
திருமணம் முடிந்து அவர் தென்ஆப்ரிக்காவில் வசிக்க நேர்ந்தபோதும் அவர் தமிழ் மண்ணை மறக்கவில்லை. இங்குள்ளவர்களையே கதை மாந்தர்களாக்கினார். காவிரிக்கரையில் வளர்ந்ததனால் இவரின் படைப்புகளில் ஏதாவதொரு இடத்தில் காவிரி வந்துவிடுவது வழக்கம்.
இவரது "காஞ்சனையின் கனவு' நாவல் கே.ஆர். ராமசாமி - லலிதா- பத்மினி நடிக்க ஸ்ரீராமுலு இயக்கத்தில் "காஞ்சனா' என்ற பெயரிலும், "பெண் மனம்' என்ற நாவல், சிவாஜி - சரோஜாதேவி நடிக்க, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில் "இருவர் உள்ளம்' என்ற பெயரிலும் திரைப்படமாக வந்து லக்ஷ்மிக்கு பெருமை சேர்த்தன.
லக்ஷ்மிக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு ஆகும்.
லக்ஷ்மியின் படிப்பு என்பது சுலபமாக அமைந்துவிடவில்லை. பிரச்னைகள் - தடைகள் எல்லாவற்றையும் தாண்டி அவர் மருத்துவர் ஆனார். எப்படி?
21.3.1921-இல் இவர் பிறந்தபோது, தலைச்சன் குழந்தை பெண்ணாகப் பிறந்ததால் தாத்தா இவரை பார்க்கவே விரும்பவில்லை. நாளடைவில் தாத்தா முத்துஸ்வாமி ஐயர் குழந்தை திரிபுரசுந்தரி மீது (அதுதான் இயற்பெயர்) அன்பைப் பொழிந்தாராம். குழந்தையைப் பார்க்க சென்னையிலிருந்து தந்தை சீனிவாசன் சிதம்பரம் அம்மாப்பேட்டைக்கு அவ்வப்போது வருவார். அப்படியொரு தடவை வந்தபோது, குழந்தையைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாமனாரிடம் கேட்டுக் கொண்டாராம். எனவே, ஒரு நல்ல நாளில் அம்மாப்பேட்டை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள்.
தந்தை படிப்பு முடிந்து விழுப்புரம் அருகேயுள்ள சிறுகனூரில் டாக்டராகப் பணி கிடைத்தது. தந்தையுடன் இருக்கப்போகிறோம் என்று திரிபுரசுந்திரி நினைத்த வேளையில், தாயாரின் மூன்றாவது பிரசவம் காரணமாக அம்மாப்பேட்டையிலேயே தங்க நேர்ந்தது.
பின்னர், தங்களது சொந்த ஊரான தொட்டியத்தில் வசித்தபோதுதான் அவரது படிப்பானது - ஆரம்பப்பள்ளியில் முறையாகத் தொடங்கியது.
இவர்களின் கிராமம், மின்னம்பள்ளி ஜமீன்தார் வெங்கடாசலபதி ரெட்டியாரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் தந்தை சீனிவாசனே மருத்துவம் பார்த்ததால், அந்த குடும்பத்து பிள்ளைகளுடன் பழகவும், படிக்கவும் வாய்ப்புக் கிட்டியது.
இது குறித்து லக்ஷ்மி தெரிவிக்கையில், ""கிராமத்தில் நான் வளர்ந்தேன். அங்கேதான் ஆரம்பக் கல்வி தொடங்கியது. என்னையொத்த பெண்களுக்கு கிட்டாத பல வாய்ப்புகள் எனக்கு ஜமீன்தாரிணியின் அன்பினால் கிடைத்தன'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பப்பள்ளிக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளி போக வேண்டும். முசிறியில்தான் உயர்நிலைப்பள்ளி இருந்தது. அதுவும் ஆண்கள் படிக்கும் பள்ளி. கடுமையான முயற்சிக்குப் பிறகு அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு இவருக்கு என்று தனி பெஞ்சு போடப்பட்டது.
பலத்த கட்டுப்பாடுகளுடன் முசிறி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில் ஐந்தாவது ஃபாரம் முடிந்தது. எஸ்.எஸ்.எல்.சிக்குப் போக வேண்டும். தொடர்ந்து முசிறியிலுள்ள பள்ளியில் படிக்க முடியாது என்று தலைமை ஆசிரியர் கூறிவிட்டார். ஆண் பிள்ளைகளுடன் பெண் சேர்ந்து படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை என்றாலும் ஒரே ஒரு பெண்பிள்ளை மாணவர்களுக்கு மத்தியில் படிப்பது மற்ற மாணவர்களுக்கு உவப்பாக இல்லை. அவர்கள் அவதூறு கிளப்பினார்கள். மொட்டைக் கடிதாசு போட்டார்கள்.
இதே நேரம் தந்தை சீனிவாசனுக்கு மண்ணச்சநல்லூரில் மாற்றாலாயிற்று. திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளிதான் இருந்தது. இங்கு சேர்ப்பது என முடிவு எடுத்தார்கள். பள்ளியிலும் சேர்த்தாகிவிட்டது. மண்ணச்சநல்லூரிலிருந்து திருச்சி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு காலை, மாலை இருவேளையும் பயணத்திலேயே நேரம் கழிந்தது.
சீனிவாசனின் நண்பர் வீடு பொன்மலையில் இருந்தது. அங்கிருந்து படிக்க முயன்றார்.
அதுவும் சரிவரவில்லை. பின்னர், திரிபுரசுந்தரி தன் முயற்சியாக சிஸ்டரிடம் வேண்டுகோள் வைத்து, கல்லூரி மாணவிகளுக்கான ஹாஸ்டலில் இடம் பெற்றார்.
அங்கு அசைவ சாப்பாடுதான். எனவே, இவருக்கும், இன்னொரு பெண்ணுக்குமாக மெஸ்ஸிலிருந்து சைவ சாப்பாடு தருவித்து வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாஸாகிவிட்டார். மேலே படிக்க வேண்டும் என்பது இவரின் ஆசை. தந்தையும் அதையேதான் விரும்பினர். ஆனால், தந்தை வழி பாட்டியோ, "கல்யாணத்துக்கேற்ற படிப்பு கொடுத்தாகிவிட்டது. போதும் படிப்பு' என்று முட்டுக்கட்டை போட்டார். முடிவில் தந்தை திருச்சி ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரியின் இன்டர்மீடியட்டில் சேர்த்துவிட்டார்.
மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சயின்ஸ் குரூப் வேண்டும். அதற்கும் நிர்வாகத்திடம் மனுபோட்டார். சயின்ஸ் குரூப்பும் கிடைத்தது. ஹாஸ்டலில் சேரவும் அனுமதி பெற்றார்.
இரண்டு ஆண்டுகள் படிப்பு பூர்த்தியாகி பரீட்சையிலும் தேர்வு ஆனார். அப்பாவின் நண்பர் மூலமாக சென்னை மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பப்படிவம் கிடைத்தது.
அப்பாதான் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தார்.
சென்னையில் முதல் இரண்டு லிஸ்ட் வெளிவந்துவிட்டது. ஆனால் திரிபுரசுந்தரிக்கு இடம் கிடைக்கவில்லை என்று நண்பர் தெரிவித்திருந்தார். கடைசி லிஸ்டில் இடம் கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில் திரிபுரசுந்தரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி வகுப்பில் சேர்வது என்ற யோசனையில் தந்தையுடன் சிதம்பரம் கிளம்பத் தயாரானார். அதேநேரம் தந்தை பெயருக்கு ஒரு தந்தி வந்தது. உடனே வந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேரும்படி அதில் உத்தரவிட்டிருந்தது. ஸ்டான்லியில் மருத்துவ மாணவியாக சேர்ந்தார்.
ஹாஸ்டலிலும் இடம் கிடைத்தது. அப்பா திரிபுரசுந்தரிக்கு ஏகப்பட்ட அட்வைஸ் கொடுத்தார். இதுவெல்லாம் முதல் ஆறு மாதம் ஃப்ரீ ரிஜிஸ்ட்ரேஷன் வகுப்பில் சேர்ந்து படித்த பின் சொல்ல வேண்டிய புத்திமதிகள். இதற்கடுத்த படிப்புகள் சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க முடியும். அனாடமி, பிசியாலஜி வகுப்புகள் அங்குதான் இருந்தது. மூன்றாம் ஆண்டிலிருந்து ஸ்டான்லியில் படிக்கலாம்.
இவ்வாறு தினமும் சென்னை மருத்துவக் கல்லூரி போய்விட்டு ஹாஸ்டல் வந்தபோது திரிபுரசுந்தரிக்கு தந்தையிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் கண்டிருந்த விஷயம்..
"தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மேற்கொண்டு வைத்தியப் படிப்பு படிக்க செலவு செய்ய முடியாது. நீ ஹாஸ்டல் பில்லைக் கட்டிவிட்டு ஊர் வந்து சேர்' என்பதுதான்.
திரிபுரசுந்தரிக்கு துக்கம் மேலிட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட்டால் மீண்டும் சேர்வது எப்படி? மனதை ஒரு வழியாகத் தயார்படுத்திக் கொண்டு மறுநாள் எழுந்து சென்னை மருத்துவக் கல்லூரி சென்றார்.
இந்தப் பயணம் வண்ணாரப்பேட்டையிலிருந்து வரும் டிராம் வண்டியில் ஏறி, பிராட்வே சந்திப்பில் இறங்கி, ராயபுரத்திலிருந்து வரும் டிராமில் ஏறி சென்ட்ரல் ஸ்டேஷன் நிறுத்தத்தில் இறங்கி மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் போக வேண்டும்.
பிராட்வே நிறுத்தத்தில் டிராம் நிற்கும்போதெல்லாம் எதிரே கண்ணில்படுவது "ஆனந்தவிகடன்' பத்திரிகை அலுவலகத்தின் பெயர்ப்பலகைதான். ஒருநாள் தோழி விசாலாட்சியை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். யாரையும் சந்திக்க முடியாத வாசனை சந்தித்தது ஆச்சரியம்தான். அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, "கதைகள் எழுத வாய்ப்பளித்தால் எனது மருத்துவப்படிப்பு தொடரும்' என்று கோரிக்கை வைத்தார்.
வாசன் மறுநாள் கதையுடன் வரும்படி சொன்னார். இரவு முழுவதும் கண்விழித்து "தகுந்த தண்டனையா?' என்ற சிறுகதையை எழுதி வாசனிடம் சமர்ப்பித்தார். அவரோ இந்தக் கதையை கல்கியிடம் சேர்ப்பிக்கச் சென்னார். கல்கியும் கதையை வாங்கிக் கொண்டு படித்துப் பார்த்து கதை சிறப்பாக இருக்கிறது. அடுத்த வாரம் வரும் என்று கடிதம் எழுதினார்.
கதை லக்ஷ்மி என்கிற பெயரில் எழுதப்பட்டிருந்தது.
சக மாணவிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே தனது அத்தையின் பெயரில் அந்தக் கதையை எழுதி இருந்தார். அடுத்தபடியாக ஓர் இன்ப அதிர்ச்சி. மாதம் 3 சிறுகதைகள் எழுத வாய்ப்பளிக்க முடிவு செய்திருப்பதாகவும், கதை ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கல்கி தெரிவித்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தந்தையாரின் பொருளாதாரம் மருத்துப்படிப்பை பாதியில் நிறுத்தச் சொன்னது. ஆனால், எழுத்து அதனை ஈடுகட்டியது. தந்தைக்கு இவற்றையெல்லாம் கடிதம் மூலம் தெரியப்படுத்தி, படிப்பைத் தொடர அனுமதி வேண்டினார்.
அடுத்த வாய்ப்பாக தொடர் ஒன்று எழுதும்படி கல்கி சொன்னதும் "பவானி' என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை ஒரே மூச்சில் எழுதிக் கொடுத்தார். சன்மானமாக ரூ.500 அளித்தார்கள்.
மருத்துவம் முடித்ததும் சென்னையிலேயே மருத்துவராகப் பணி புரிந்ததுடன், தனியாக பிராக்டீஸþம் செய்தார்.
அன்று தொடங்கிய எழுத்துப் பயணம் "மிதிலா விலாஸ்', "அரக்கு மாளிகை', "பெண் மனம்', "காஞ்சனையின் கனவு', "நாயக்கர் மக்கள்' உள்ளிட்ட ஏராளமான நாவல்களையும், நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் எழுதிக் குவித்தார்.
அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் ஒன்று "தாய்மை' என்ற மருத்துவ நூல். அந்நூல் பரிசுக்குத் தேர்வாயிற்று. விருது வழங்கும் நிகழ்ச்சி, இலங்கையில் அப்போது நடைபெற இருந்த தமிழ்மாநாட்டில் விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அம்மாநாட்டில் கலந்து கொள்ள லக்ஷ்மியும் இலங்கை சென்றிருந்தார்.
உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் இருந்து தமிழ்ப் பிரதிநிதிகள் பலரும் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அங்கு தென்ஆப்ரிக்காவில் இருந்து வந்த தமிழ்ப்பிரதிநிதியான கண்ணபிரானைச் சந்தித்தார் லக்ஷ்மி. இருவருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. காதல் வயப்பட்டனர்.
தனது கதைகளில் சாதி, மத பேதங்களை விமர்சித்து வந்தவர் லக்ஷ்மி, எழுத்தில் என்ன எழுதினாரோ வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் விதமாக கண்ணபிரான் - லக்ஷ்மி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் அதுவும் கலப்புத் திருமணம்.
திருமணத்தைத் தொடர்ந்து , 1955 -ஆம் ஆண்டில் கணவருடன் தென் ஆரிப்பிரிக்கா சென்றார். அவரது இருபத்திரண்டு ஆண்டு தென்ஆப்பிரிக்க வாழ்க்கையில் முதல் பதினோராவது ஆண்டிலேயே 1966- இல் கணவர் டாக்டர் கண்ணபிரான் மறைந்தார். அதன் பின்னர், தென்ஆப்பிரிக்காவில் 1977-ஆம் ஆண்டு வரை வசித்த லக்ஷ்மி பின்னர் சென்னை திரும்பினார்.
தென் ஆப்ரிக்காவில் இருந்த போதிலும் அவ்வப்போது தனது எழுத்துகள் மூலம் வாசகர்களின் நெஞ்சில் இடம் பெற்றார். சில ஆண்டுகள் நாவல்கள் எதுவும் எழுதாவிட்டாலும் அவரது வாசகர்கள் "மிதிலா விலாஸின்' தேவகி, "பெண்மனத்தின்' சந்திரா, "லட்சியவாதி'யின் கீதா, "அரக்குமாளிகை'யின் மஞ்சுளா ஆகிய கதாநாயகிகளின் தாக்கத்திலிருந்து விடுபடவே இல்லை.
பல வாசகியர் லக்ஷ்மி கதாபாத்திரங்களின் நற்குணங்களை - லட்சியங்களாக கடைபிடித்தனர் என்பது நிஜம்.
சென்னை திரும்பியதும் "ஒரு காவிரியைப் போல' கதாநாயகி காவேரியைப் படைத்தார். இத்தொடர் ஒரு வார இதழில் வெளிவந்து, அவருக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்று தந்தது. அதே பத்திரிகையில் "கதாசிரியரின் கதை' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார்.
லக்ஷ்மி - கண்ணபிரான் தம்பதியினரின் செல்லமகன் மகேஷ். அவரும் தனது தாயைப் போலவே ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து மருத்துவர் ஆனார்.
புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவராக - சிறந்த எழுத்தாளராக பரிணமித்த லக்ஷ்மி 1987 ஜனவரி 7-ஆம் தேதி நம்மைவிட்டு மறைந்தார்.

படம்: யோகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com