ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 7: பறக்கக் கற்றுக்கொள்ளலாம்!

பறவைகளை நேசிக்கும் இளவரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரண்மனைத் தோட்டத்தில் பல தேசங்களில் இருந்தும் வந்த பறவைகள் சுதந்திரமாகவும் உல்லாசமாகவும் பறந்து திரிந்தன.

News image
Updated On :23 பிப்ரவரி 2022, 12:30 am

DIN

பறவைகளை நேசிக்கும் இளவரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரண்மனைத் தோட்டத்தில் பல தேசங்களில் இருந்தும் வந்த பறவைகள் சுதந்திரமாகவும் உல்லாசமாகவும் பறந்து திரிந்தன. அவற்றைக் கண்டு இன்புறுவது இளவரசனின் வழக்கம். பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அடங்கா ஆர்வம் கொண்டவன். ஒருநாள் அவன் காதலி அவனுக்கு இரண்டு பெரிய பஞ்சவர்ணக் கிளிகளைப் பரிசாக அனுப்பி வைத்தாள்.

அழகான கிளிகள். அரண்மனையின்பறவைக் காப்பாளரை அழைத்து இரு கிளிகளையும் தகுந்த முறையில் கவனித்து பயிற்சி அளித்து நம் அரண்மனைத் தோட்டத்தில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ஒப்படைத்தான். பறவைக் காப்பாளரும் கிளிகளுக்கு நல்ல பழங்கள் தானியங்கள் என்று கொடுத்ததோடு அவற்றுக்குப் பறப்பதற்குப் பயிற்சியும் கொடுத்தார். ஒரு பஞ்சவர்ண கிளி எப்போதும் பாடிக் கொண்டு உல்லாசமாக சுற்றிச் சுற்றி வந்து எல்லா மரங்களிலும் அமர்ந்து விளையாடியது. மாலை நேரங்களில் அதன் அழகைக் கண்டு இளவரசன் மகிழ்ந்தான்.
மற்றொரு பறவை தான் அமர்ந்திருந்த கிளையை விட்டு நகரவே இல்லை. கிளையை இறுகப்பற்றியபடி தானும் இறுக்கமாகவே அமர்ந்திருந்தது. அதைக் கண்டு காரணம் புரியாத இளவரசன் பறவைக்காப்பாளரை அழைத்து விசாரித்தான். பறவைக்காப்பாளர்,

"இளவரசே எல்லாப் பறவைகளைப் போலவே இந்தப் பறவைக்கும் பயிற்சி அளிக்க என்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்தேன். ஆனால் இந்தப் பறவை சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. கிளையை விட்டு நகரவே இல்லை' என்று சொன்னான். பறவை நிபுணர்களை அழைத்து கிளிக்கு ஏதும் ஊனம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான். பறவை நிபுணர்கள் நன்கு சோதித்துவிட்டு பஞ்சவர்ணக்கிளி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஒரு குறைவும் இல்லை என்றும் தெரிவித்தனர். நாள்கள் கடந்தன. பறவை அசைவதாய் இல்லை. இதைக் கண்ட இளவரசன் மனம் வருந்தினான்.

பறவையின் மகிழ்ச்சி பறந்து திரிவதில் தானே இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். யாரேனும் அனுபவமிக்க பெரியவர்களைக் கேட்டால் காரணம் புரியலாம். இந்தப்பறவை பறப்பதற்கு அவர்கள் வழி காட்டலாம் என்று முடிவுக்கு வந்தான். நாடு முழுவதும் முரசறைந்து விஷயத்தை எடுத்துச் சொல்லித் தீர்வு காண இயன்றவர்கள் இளவரசனை அணுகலாம் என்று அறிவித்தான். கேட்டவர்கள் அதிசயப்பட்டார்களே அன்றி ஒருவரும் முன்வரவில்லை.

கிராமத்தில் இருந்து ஒரு முதியவர் வந்தார். கிளியைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இளவரசன் பறவைக் காப்பாளரை அழைத்து முதியவரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கிளியைக் காட்டுமாறு கட்டளையிட்டான். தோட்டத்தில் சற்றுநேரம் பஞ்சவர்ணக்கிளியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் "நான் கிளியைப் பறக்க வைக்க முயற்சிக்கிறேன் ஒரு கோடரி கொடுங்கள்' என்று கேட்டார். காப்பாளர் தயக்கத்துடன், "ஐயா, பஞ்சவர்ணக்கிளிக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளவரசரின் அன்புக்குரிய கிளி' என்று சொல்லி கோடரியைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அன்று மாலை இளவரசன் தோட்டத்திற்கு உலாவ வந்த பொழுது கிளையை விட்டு அசையாமல் இத்தனை நாளும் இருந்த பஞ்சவர்ணக்கிளி தோட்டத்தில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் பொங்க முதியவரை அழைத்து,

" என்ன செய்து பஞ்சவர்ணக்கிளியைப் பறக்க வைத்தீர்கள்?' என்று கேட்க, "இளவரசே, கிளியை நான் ஒன்றும் செய்யவில்லை. அது பற்றிக்கொண்டிருந்த கிளையை மட்டும் முறித்துவிட்டேன். பற்றிக் கொண்டிருந்த கிளை முறிந்ததால் அது பறந்தது. பறத்தலின் சுகம் அதற்குத் தெரிந்துவிட்ட பின் ஆனந்தமாக வானில் சிறகடித்துப் பறக்கிறது" என்று சொன்னார்.

இந்தக் கதையைப் படித்த பொழுது முதலில் சிரிப்பு வந்தது. பின்னர், இந்தக்கதை மனதில் பல கேள்விகளையும் ஏற்படுத்தியது. ஒரு பெண்ணாக, இந்தக் கதையின் உண்மை சற்றே சுடுவதாகவும் உணர முடிந்தது. நம்முடைய மனநிலையை இந்தப் பஞ்சவர்ணக்கிளியை வைத்து யாரோ வெளிப்படுத்த முயல்வதாகத் தோன்றியது. சிந்தித்துப் பாருங்களேன். இந்தக் கதை நம்மைப் பற்றியது என்ற எண்ணம் என்னைப் போலவே உங்களில் பலருக்கும் கூடத் தோன்றலாம்.

பிரச்னைகள் சிலசமயம் தானே உருவாவதுண்டு. சில நேரங்களில் நாமாக நம் அறியாமையால் போதாமையால் ஏற்படுத்திக்கொள்வதும் உண்டு. ஆனால், பல நேரங்களில் பிரச்னை ஒன்றும் இருப்பதில்லை. என்றாலும், ஏதோ பிரச்னைகள் சூழ்ந்திருப்பதாக நாமே நினைத்துக் கொள்கிறோம். இந்தக் கிளையை விட்டுவிட்டால் திக்கற்ற வெளியில் நாம் விழுந்து விடுவோம் என்பதான பிரமை நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

நமக்கெதற்கு வம்பு? நம்மால் ஆகக்கூடியதா? இருப்பதைத் தொலைத்து விட்டு எங்காவது சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? என்ற மனக்குழப்பத்தில் இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் கிளையில் நாமே நம்மைச் சிறைப்படுத்திக் கொள்வதே பல நேரங்களில் நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. உண்மையில் நாம் பிடித்திருக்கும் கிளையை விட்டுவிட்டவுடன் நமக்கு சிறகுகள் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். எல்லையில்லாத வானம் நமதாகலாம். சுதந்திரம் நமக்குள் கிடைக்கலாம். நாம் இந்த உலகை ரசிப்பதும் இந்த உலகம் நம்மை ரசிப்பதும் சாத்தியமாகலாம்.

உதாரணத்திற்கு சைக்கிள் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அனுபவத்தைச் சொல்லலாம். நாம் அனைவருமே வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்ட முதல் நாளில் வண்டியில் ஏறி அமர்ந்து கொள்வோம். ஆனால், கால்களை பூமியில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டிருப்போம். தரையில் இருந்து கால்களை எடுக்காமல் வாகனத்தை எப்படி ஓட்ட முடியும்? இது நமக்குத் தெரிந்தாலும் தரையில் இருந்து கால்களை எடுக்கத் தயங்குவோம். வண்டி வேகமாக ஓடி நம்மைக் கீழே தள்ளி விடும் என்ற எண்ணமே நமக்குள் இந்தத் தயக்கத்தை ஏற்படுத்தும். இந்தத் தயக்கம் தீர்ந்தால் மட்டுமே நாம் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வோம்.

ஒருவழியாக நமக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுப்பவர், இந்தக் கதையில் வரும் முதியவரைப் போல ஏதோ செய்து நமக்கு வண்டி ஓட்டுவதற்கான பயிற்சியை சாத்தியமாக்குவார். ஒருமுறை வாகனத்தை நாமாக ஓட்டக் கற்றுக் கொண்டபின் நமக்குள் ஏற்படும் நம்பிக்கையை மாற்றத்தை நம்மில் அனைவரும் அறிந்திருப்போம். அதுவரை எந்தத் தேவைக்கும் யாரையேனும் சார்ந்திருந்த நாம் இப்பொழுது நினைத்தவுடன் வெளியில் செல்வதும் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள் வதையும் சாதாரணமாக்கிக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஒரு சுதந்திர உணர்வு தன்னால் வந்துவிடுகிறது.

பொதுவாக பெண்களுக்கு இந்தத் தயக்கம் அதிகம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் நாம் இப்போதிருக்கும் நிலையே நன்றாகத் தான் இருக்கிறது. இப்படியே இருந்து விடுவோமே எதற்காகத் தெரியாத சூழலை எதிர்கொள்ள வேண்டும்? இந்த எண்ணம் தோன்றி மனதில் தடையை ஏற்படுத்தும். குறிப்பாக கல்வி விஷயத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்போம். வெளியூர் வெளிநாடு என்று படிப்பதற்காகச் செல்வதில் பல பெண்கள் விருப்பம் காட்டுவதில்லை. நான் இப்படிச் சொல்வதை உங்களில் சிலர் மறுக்கலாம். என்றாலும் உண்மை நிலவரம் இதுதான். ஒருவர் கல்வி கற்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றித் தெரிந்தால் நீங்களும் என் கருத்துக்கு உடன் படுவீர்கள்.

சுதந்திர இந்தியாவில் பெண்களை பேருந்தில் நடத்துநராக நியமித்த முற்போக்கு சிந்தனையாளரைத் தெரியுமா? பாரதத்தின் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி. உத்தரபிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக லால்பகதூர் சாஸ்திரி இருந்த பொழுது அவர்தான் பெண்களும் நடத்துநர் ஆகலாம் என்று அதனை செயல்படுத்தியவர். இவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஒன்றரை வயதில் தந்தையை இழந்தார். தாத்தா மற்றும் மாமா தயவில் சிறுவயதில் வாழ வேண்டிய நிலை. படிப்பில் ஆர்வம். அவருடைய கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை. வாரணாசிக்குப் படிக்கப் போனார். அங்கே பள்ளிக்கூடம் ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. அன்றாடம் தோணியில் போக வசதி இல்லை. அதற்காகப் படிப்பை விட்டுவிட முடியுமா? புத்தகங்களை ஒரு பையில் மூட்டையாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு அன்றாடம் நதியில் நீந்தி அக்கரை சென்று பள்ளியில் படித்தார். இந்த முனைப்பு நம்மில் எத்தனை பேருக்கு வருகிறது? நாம் கிளையை இறுக்கப் பிடித்திருக்கும் பஞ்சவர்ணக்கிளி என்பதை இப்போது நம்ப முடிகிறதல்லவா?

இன்று, அப்படி கிளையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்து பின்னர் வானில் பறந்த பறவையைப் போலப் புறப்பட்ட புதுமைப் பெண் என யாரைச் சொல்லப்போகிறேன் என்று யோசிக்கிறீர்களா? கண்ணாடியைப் பார்த்துக் கொள்ளுங்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண்மணிகளான நீங்களும் நானும் என்று நாம் அனைவருமே தான்.புதிய தொழில் தொடங்குவது, புதிய இடத்திற்குக் குடி பெயர்வது என்று புதிதாக ஒரு முயற்சியைத் தொடங்கும் பொழுது ஏற்படும் இந்தத் தயக்கம் நம் முன்னேற்றத்திற்குப் பெரிய தடையாகும். பறந்து விரிந்த வானமும் பூமியும் நமக்காகத் திறந்திருக்கும் பொழுது கிளையை விட்டுவிட்டு பஞ்சவர்ணக் கிளிகளாய் சிறகை விரிப்போம். வானில் பறப்போம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.