யூடியூப் மூலம் கதை!

​கோவையை மையமாகக் கொண்டு, கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் எழுத்தாளர் விமலா ரமணி.
யூடியூப் மூலம் கதை!


கோவையை மையமாகக் கொண்டு, கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் எழுத்தாளர் விமலா ரமணி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 600 நாவல்களை எழுதிக் குவித்தவர். பல்வேறு பத்திரிகைகள் நடத்திய சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகப் போட்டிகளில் பரிசு பெற்றவர். தற்போது, முகநூல், யூடியூப், மின்நூல் முதலியவற்றில் பிரபலமாக இருக்கிறார். அவரிடம் பேசுவோம்:

கடந்து வந்த உங்கள் எழுத்துலகப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

என் அம்மா ஒரு தீவிர வாசகி. எல்லா பத்திரிகைகளிலும் வரும் தொடர்கதைகளை பைண்டு செய்து வீட்டில் அடுக்கி வைத்திருப்பார். விடுமுறை நாட்கள் என்றால், நான் அந்தப் புத்தகங்களில் இருந்து தினமும் ஒன்றாக எடுத்து வைத்துக் கொண்டு முழுவதுமாகப் படித்து முடித்துவிடுவேன். அப்படிப் படித்த பல கதைகளில் நான் மிகவும் ஒன்றிப் போயிருக்கிறேன். சிவகாமியின் சபதம் படித்துவிட்டு, சிவகாமி நிஜமாகவே ஒரு காலத்தில் வாழ்ந்தவள் என்று கூட நினைத்தது உண்டு. அந்த வாசிப்புதான், எனக்குள்ளே பல கற்பனைகள் ஊற்றெடுக்க வழி செய்தது. ஆரம்பத்தில் நிறைய கதைகள் திரும்பி வந்திருக்கின்றன. போட்டி அறிவிப்புகளைப் பார்த்தால் உடனே அவற்றில் பங்கேற்கத் தயாராகிவிடுவேன். பல போட்டிகளில் பரிசு பெற்றது மன நிறைவைத் தந்தது. என்னுடைய எழுத்தை அங்கீகரித்து, பல்வேறு அமைப்புகளும் பட்டங்களும், விருதுகளும் கொடுத்தார்கள். என் கணவர், நான் எழுதுவதற்கு மிகப் பெரிய தூண்டு கோலாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது எனக்குக் கிடைத்த பெரிய வரம். இவை எல்லாமாகச் சேர்ந்துதான் எண்பது வயதாகியும் என்னை இன்னும் ஒரு எழுத்தாளராக சுறுசுறுப்பாக இயங்கச் செய்துகொண்டிருக்கின்றன.

பொதுவாக எழுத்தாளர்கள், பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட தங்கள் ஆரம்பகால எழுத்துக்கள் பற்றிப் பேசமாட்டார்கள். நீங்கள் அதை வெளிப்படையாக சொல்கிறீர்களே!

"இல்லை என்பதை நான் தயக்கமில்லாமல் சொல்லுவேன். எழுதி அனுப்பிய கதை திரும்பி வரும்போது, சற்று வருத்தம் ஏற்பட்டாலும், அந்தக் கதையில் ஏதாவது தவறு செய்திருக்கிறேனா என்று அறிய முற்படுவேன். ஆனால், நான் எழுதிய கதையல்லவா? அதில் என்னால் குறை கண்டுபிடிக்க முடியாது. எனவே, திரும்பி வந்த கதையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல், அடுத்த கதை எழுத உட்கார்ந்துவிடுவேன். அதை அனுப்பி வைப்பேன். அது தேர்வாகி, பிரசுரமாகும். அல்லது திரும்பி வரும். மீண்டும் அதைபற்றி அலட்டிக் கொள்ளாமல், அடுத்த கதை எழுதுவேன்.

முதல் கதை பிரசுரமான அனுபவம்?

திருமணமாகி, திண்டுக்கல்லில் இருந்த பெற்றோர் வீட்டில் இருந்து, புகுந்த வீடான கோவைக்கு வந்தேன். என் கணவரிடம் கதைகள் பற்றி நிறைய பேசுவேன். ஒரு நாள் எனக்குக் கூட கதை எழுத ஆசையாக இருக்கிறது என்று நான் சொன்னபோது, உடனே அவர், "ஒரு கதை எழுதேன்' என்று ஊக்கம் கொடுத்தார். "அமைதி' என்று ஒரு சிறுகதை எழுதினேன். என் கணவர் தன் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில்தான் "வசந்தம்' என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆபீஸ் இருந்தது. "இந்தக் கதையை நாளைக்கு ஆபீஸ் போகிறபோது, வசந்தம் ஆசிரியரிடம் கொடுக்கிறேன்' என்றார்.

மறுநாள், கதையை வசந்தம் ஆசிரியரிடம் சேர்ப்பித்துவிட்டார். சில நாட்கள் கழித்து, என் கணவர் ஆபீசில் இருந்து திரும்பியபோது கையில் வசந்தம் இதழ்கள் இருந்தன. அதில் என் கதை "அறிமுக எழுத்தாளர்' விமலாரமணி என்ற குறிப்பிட்டு பிரசுரமாகி இருந்தது. அச்சில் முதல் முறையாக என் கதையைப் பார்த்தபோது, எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. பலமுறை அந்தக் கதையைத் திரும்பித் திரும்பிப் படித்து சந்தோஷப்பட்டேன்.

வாசகர்களுடனான மறக்க முடியாத அனுபவங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்!

பல வருடங்களுக்கு முன்பு, "ஆண்டவன் கட்டளை' என்று ஒரு காதல் கதை எழுதினேன். அது பிரசுரமான ஒரு சில நாட்கள் கழித்து, எனக்கு ஒரு போன் வந்தது. உங்கள் கதையைப் படித்துவிட்டு, காதலித்துக் கொண்டிருந்த நானும், என்னுடைய காதலியும் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு எடுத்திருக்கிறோம். மருதமலை முருகன் கோயிலில்தான் திருமணம். நீங்கள் நேரில் வந்து கலந்துகொண்டு எங்களை வாழ்த்தவேண்டும்' என்று அவர் சொன்னதும், எனக்கு சட்டென்று என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சமாளித்துக் கொண்டு, "தற்போதைய எங்கள் வீட்டுச் சூழலை காரணமாக உங்கள் திருமணத்துக்கு நேரில் வரமுடியவில்லை. உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! நீங்கள் நல்லபடியாக நெடுங்காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

ரொம்ப வருடங்களுக்கு முன்பு ஒருநாள், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என் வீட்டுக்கு திடீரென்று வந்தார். என்னுடைய தீவிர வாசகர் என்று சொல்லி, நான் எழுதிய சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என எல்லாவற்றையும் பற்றி மிகவும் விரிவாகப் பேசினார். சிலவற்றைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார். கடைசியில், "நான் பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு, ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். என் பை, பர்ஸ் எல்லாம் களவு போய்விட்டது. உதவி செய்ய வேண்டும். நான் ஊருக்குப் போய் உங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறேன்' என்று உருக்கமாகக் கூறினார். நாங்கள் அவர் மீது மிகவும் பரிதாபப் பட்டு, அவரைக் கடைக்கு அழைத்துச் சென்று வேட்டி, சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவர் கேட்ட பணத்தையும் கொடுத்து, பத்திரமாக ஊர் போய் சேருங்கள்' என வழி அனுப்பி வைத்தோம். போனவர் போனவர்தான். அவரிடமிருந்து அதன் பிறகு ஒரு தகவலுமில்லை. இப்படியான சம்பவமும் நடக்கும். எழுத்தாளர் என்றில்லை. யாருக்கும் இது நடக்கும்.

எண்பது வயதிலும் முகநூல், யூடியூப், மின்னூல் என சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே! அது எப்படி சாத்தியப்படுகிறது?

"எப்போதும்போல அதிகாலை ஐந்து மணிக்கு எழுத ஆரம்பித்தால், ஏழு மணிவரை எழுதும் என் பழக்கத்தை நான் இன்னமும் விடவில்லை. முன்பெல்லாம் என் கையெழுத்து வேறு யாருக்கும் புரியாது என்று நான் எழுதியதை, வேறு ஒருவர் மூலமாக தட்டச்சு செய்து பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பேன். ஆனால், இப்போது நானே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் நானே எழுதுகிறேன். கதைகளை நானே மின்னஞ்சலில் அனுப்புகிறேன். என் கதைகளுக்கென்றே யூடியூபில் "விமலாரமணி நாவலிஸ்ட்' என்று ஒரு சேனல் வைத்திருக்கிறேன். அவற்றில் என் கதைகளை என் மகள் ரூபா ஹரிஹரன் வாசிக்கக் கேட்டு ரசிக்கலாம். என் எழுத்துக்கள் எல்லாம் இன்று மின்னூல்களாக அமேசான், புஸ்தகா, நாவல் ஜங்ஷன் ஆகியவற்றில் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com