விதவிதமான பலாக்காய் ரெசிபி...!

பலாக்கொட்டை அல்வா
பலாக்கொட்டை அல்வா
Published on
Updated on
2 min read

பலாக்கொட்டை அல்வா

தேவையானவை:
பலாக்கொட்டை-25
பாசிப் பருப்பு- 200 கிராம்
பால் - 200 மில்லி
சர்க்கரை- 300 கிராம்
உப்பு- 1 சிட்டிகை
நெய்- 50 கிராம்
ஏலக்காய்- 4
செய்முறை: பலாக்கொட்டைகளின் தோலை நீக்கி இரண்டு மணி நேரம் ஊற வைத்து, இரண்டாக நறுக்கி வேக வைக்க வேண்டும். பாசிப் பருப்பில் உப்பை போட்டு வேக வைத்து அரைத்து எடுக்க வேண்டும். பலாக்கொட்டையையும் அரைத்து எடுக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த விழுதைப் போட்டு பால்விட்டு நன்றாகக் கரைத்து, சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறி நெய், ஏலக்காய் பொடி போட்டு சுருளக் கிளறி கீழே இறக்க வேண்டும்.

பலாக்காய்க் கூட்டு

தேவையானவை:
பலாக்காய் சிறியது-1
துவரம் பருப்பு- 100 கிராம்
பச்சை மிளகாய்- 4
சாம்பார் பொடி- 2  மேசைக் கரண்டி
பொடி வெங்காயம்- 7
சீரகம்- 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: பலாக்காயை எண்ணெய்யைத் தொட்டு கொண்டு மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.  துவரம் பருப்புடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து, தேவையான தண்ணீர்விட்டு பலாக்காய், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். பலாக்காய் வெந்தவுடன் வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டுத் தாளித்து வெந்த கூட்டை அதில் ஊற்றிக் கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.

<strong>பலாக்காய்க் கூட்டு</strong>
பலாக்காய்க் கூட்டு

பலாக்காய் குருமா

தேவையானவை:
பிஞ்சு பலாக்காய்-1
பெரிய வெங்காயம்-1
தக்காளி-3
பச்சை மிளகாய்-6
தேங்காய்- 1 மூடி
கடுகு- 1 மேசைக் கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 மேசைக் கரண்டி
சீரகம்- 1 மேசைக் கரண்டி
சோம்பு- கால் மேசைக் கரண்டி
உடைச்ச கடலை- அரை மேசைக் கரண்டி
பூண்டு- 1
கசகசா- அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: பலாக்காயின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி உப்புப் போட்டு குழையாமல் வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சீரகம், உடைச்ச கடலை, பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துகொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுகாய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலையைச் சேர்த்து தாளிதம் செய்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டை வதக்கி பலாக்காயை போட்டு கிளறி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதித்தவுடன்  அரைத்த தேங்காயை ஊற்றி மல்லித் தழையைப் போட்டு இறக்கிவைக்க வேண்டும்.

<strong>பலாக்காய் குருமா</strong>
பலாக்காய் குருமா


பலாக்காய் கறி

தேவையானவை:
பலாக்காய்- 500 கிராம்
உருளைக்கிழங்கு-3
தேங்காய்ப் பால்- 1 கிண்ணம்
சீரகம்- 1 மேசைக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
மஞ்சள் பொடி- அரை மேசைக்கரண்டி
தக்காளி-1
தயிர்- 1 மேசைக்கரண்டி
பூண்டு- 4 பல்
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
சர்க்கரை- அரை தேக்கரண்டி
பிரிஞ்சி இலை-4
நெய்- 1 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை: பலாக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். இஞ்சி, சீரகம், பூண்டு மூன்றையும் விழுதாக அரைத்துகொள்ள வேண்டும். மூன்று மேசைக்கரண்டி எண்ணெய்விட்டு அரை தேக்கரண்டி சீரகம், பிரிஞ்சி இலைகளைப் போட்டுப் பொரித்து  கொள்ள வேண்டும். இதனுடன்  உருளைக்கிழங்கு, பலாக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், தக்காளி, தயிர், அரைத்த இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, உப்பு, சர்க்கரை முதலியவற்றையும் சேர்க்க வேண்டும். நன்றாக வதக்கியவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காய்கள் நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பாலை விட வேண்டும். சற்று கொதித்தவுடன் கீழே இறக்கி கரம் மசாலாவைத் தூவி நெய்யைவிட வேண்டும்.

<strong>பலாக்காய் கறி</strong>
பலாக்காய் கறி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com