உடல் எடை குறைய வழிகள் என்ன?

உணவிலுள்ள நார்ச்சத்தும், அதன் செயல்பாடுகளும். அதிக நார்ச் சத்துள்ள உணவுகள், உடல் எடை குறைப்பில் மிக முக்கிய காரணியாகச் செயல்படுகின்றன.
உடல் எடை குறைய வழிகள் என்ன?
Published on
Updated on
2 min read

உணவிலுள்ள நார்ச்சத்தும், அதன் செயல்பாடுகளும். அதிக நார்ச் சத்துள்ள உணவுகள், உடல் எடை குறைப்பில் மிக முக்கிய காரணியாகச் செயல்படுகின்றன.

உடல் எடை குறைப்புக்காக உணவு எடுக்கும்போது, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளில் அதிக கவனம் செலுத்தினால், தேவையற்ற கொழுப்பு எளிதில் குறைவதுடன், அதிக எடையும் குறைகிறது.

நடுத்தர வயதுள்ள, சராசரி உயரம், உடல் எடை கொண்டவர்கள், ஒரு நாளைக்கு, 25 கிராம் அளவில் உணவு மூலமாக நார்ச்சத்து எடுத்துகொள்ள வேண்டும். அதுவே, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், குறைப்பதற்கு முயலும்போது 35 கிராம் அளவில் நார்ச்சத்து உடலுக்குள் செல்ல வேண்டும்.

பச்சை கீரை, பழங்கள், காய்கறிகளில் 100 கிராமுக்கு 2-16 கிராம் நார்ச்சத்தும், முழு தானியங்கள், பருப்பு வகைகளில் 5-12 கிராமும் நார்ச்சத்து உள்ளது. இதனால், உடல் எடை குறைப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 200-500 கிராம் காய்கள், கீரைகள், பழங்களும், 250-300 கிராம் அளவுக்கு தானியங்களும் எடுத்துக் கொண்டால், அதிக நார்ச்சத்து கிடைத்து, உடல் எடை குறையும்.

அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் கொண்ட கீரைகள், பச்சை காய்கள், பழங்கள், முழு தானியங்கள், பருப்புகள் நிச்சயமாக தினசரி உணவில், ஒவ்வொரு வேளை உணவிலும் இடம்பெற்று இருக்க வேண்டும். அவை, மொத்த கலோரியைக் குறைக்கும்.

எடை குறைப்புக்கு எடுக்கும் உணவின் அளவு குறையும்போது, நுண் சத்துகளான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிச்சயமாகக் குறைந்து விடும். பழங்கள் மற்றும் காய்கறிகள் வழியாகத்தான் அவை சமன் செய்யப் படுகின்றன.

உணவின் அளவு குறையும்போது, வயிறு நிரம்பாத உணர்வு ஏற்படும். இதனால், மேலும் அதிக உணவை எடுத்துக் கொள்ளுமாறு ஹார்மோன்கள் கட்டளையிடும். உணவின் அளவும் அதிகரித்து, உடல் எடை குறைக்க முடியாமல் போகும். ஆனால் நார்ச்சத்துள்ள கீரைகள், காய்கள் சாப்பிடும்போது, வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும் (இதை கீரை சாப்பிட்டாலே உணருவோம்). அதனால் உணவின் அளவும் அதிகரிக்காது.

உடல் எடை குறைவதற்கு, உணவின் அளவைக் குறைக்கும்போது, நம்முடைய இரைப்பை, குடலின் அலை இயக்கம் மெதுவாகும். இதனால் மலம் இறுகி தேவையற்ற வயிறு, குடல் பிரச்னைகள் மொத்த செரிமான மண்டலத்தையும் சிரமப் படுத்திவிடும்.

இதுவே, நார்ச்சத்துள்ள கீரைகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால், அவை அதிகம் நீரை தன்னகத்தே உறிஞ்சிக் கொண்டு, குடலின் அலை இயக்கத்தை சீராக்கி, மலத்தை இலகுவாக்கி, மலத்தின் அளவை அதிகரித்து சிரமம் இல்லாமல் வெளியேற்றும்.

நார்ச்சத்துள்ள உணவுகள், தேவையான நல்ல நுண்ணுயிரிகளை குடலில் உற்பத்தி செய்து, குடலின் நுண்ணுயிரிகள் படலத்தை சம நிலையில் வைத்திருக்க உதவும். உடல் எடை குறைய எடுக்கும் உணவுடன் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சேர்ந்தால், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைக்கப்படும். பழங்கள், காய்களில் உள்ள பெக்டின் போன்ற நுண்பொருட்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவி செய்கின்றன.

ரத்தக் குழாய்களில் ரத்தக் கட்டிகள் உருவாகி அடைப்பை ஏற்படுத்தும் ரத்தப் பகுப்புப் பொருளின் அளவும் குறைகிறது. இதனால், அதிக உடல் எடை, கொழுப்பு உள்ளவர்களுக்கு இதய நோய்களும் வராமல் தடுக்கப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக, உடல் எடை குறைக்க உதவும் உணவில் அதிக நார்ச்சத்துள்ள காய்கள், கீரைகள், பழங்கள் இருந்தால், வாயால் மென்று சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், உணவின் அளவும் தானாகவே குறைந்து விடும்.

எனவே, உடல் எடை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு பின்பற்றுபவர்கள், அதிக நார்ச்சத்துள்ள முழு தானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள்

போன்றவற்றை ஒவ்வொரு வேளையும் கட்டாயம் சேர்த்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com