திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தமிழில் ரஷ்ய மொழியின் மணம்

ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் அரிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் அரும்பு சுப்பிரமணியன்.

News image

அ​ரும்பு  சுப்​பி​ர​ம​ணி​யன்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 9:05 pm IST

ரஷ்ய  மொழியிலிருந்து  தமிழுக்கு  நேரடியாக  மொழிபெயர்க்கும்  அரிய  மொழிபெயர்ப்பாளர்களில்  ஒருவர் அரும்பு  சுப்பிரமணியன்.  ஆங்கில  இலக்கியம்  பயின்ற  அரும்பு,  ரஷ்ய  மொழியை  அந்த  நாட்டிற்கே  சென்று,  ஒன்பதாண்டுகள்  தங்கிப்  படித்து,  ரஷ்ய  மொழியில்  முனைவர்  பட்டமும்  பெற்றவர்.  சென்னை  ரஷ்யக்  கலாசார  மையத்தில்  மொழி  ஆசிரியராகப்  பணியாற்றியவர்.  

கோவை  விஜயா  பதிப்பகம்  வழங்கும்  'கே.எஸ். மொழிபெயர்ப்பு விருது' பெறும்   வேளையில்,  அரும்பு  சுப்பிரமணியனின்  பணி  ஈடுபாடு,  அர்ப்பணிப்பு,  அவரது   மொழிபெயர்ப்பு உழைப்புக்குக்  கிடைத்துள்ள  அங்கீகாரம்  குறித்து   மனம் திறக்கிறார்  ஆவணப் பட இயக்குநர்  ரவி சுப்பிரமணியன்.

'கடந்த  25  ஆண்டுகளுக்கும்  மேலாக  அரும்புவை நான் அறிவேன்.  மொழிபெயர்ப்பதை   வெறும்  சொற்களை மாற்றுகிற  பணியாக  அவர்  கருதியதே  இல்லை.  ஒரு  மொழியின்  இதயத்  துடிப்பை  அப்படியே  கவனமாகக் கையிலேந்தி  இன்னொரு  மொழியின்  இதயத்தில்  துடிக்க வைப்பதே  அவரது  பணி  என்பதை  உணர்ந்திருக்கிறேன்.

ஒரு  படைப்பை  மொழிபெயர்ப்பதற்கு முன்,  அந்த  நூலின் கதையையோ   கருத்தையோ  மட்டும்  தெரிந்துகொண்டால்  போதாது.  அந்த  எழுத்தாளரது  படைப்பு  மனநிலையையும்  புரிந்து  கொள்ள  வேண்டும்.  அவர்  எதிர்கொண்ட  சமூகம்,  அரசியல்,  அவரை  எவ்வாறு  வடிவமைத்தது  என்பதையும்  அறிந்தால்தான்,   அந்தப்  படைப்பை  இன்னொரு  மொழிக்கு  உயிர்ப்புடன்   கொண்டு  செல்ல  முடியும் என்று  அரும்பு  சொல்லுவார்.  அதற்காக  அந்த  எழுத்தாளரின்  உலகத்துக்குள்  நுழைய  அவர்  மேற்கொண்ட  தேடலையும்  நான் கண்டிருக்கிறேன்.

அதோடு  மட்டுமல்ல,  ரஷ்யாவின்  நான்கு  பருவங்களும்  அந்நாட்டு  இலக்கியத்தின்  உயிர்நாடிகள்  என்பதை  அவர்  அங்கேயே  வாழ்ந்து  உணர்ந்தவர்.   குளிர்காலம்,  கோடைக்காலம், இலையுதிர்காலம்,  வசந்த

காலம்  இவை  வெறும்  காலநிலை  மாற்றங்கள் அல்ல;  மனிதர்களின்  உடை,  உணவு,  வாழ்க்கை  முறை,  மனநிலை,  உறவுகள்  அனைத்தையும்  மாற்றும்  சக்தி  கொண்டவை.  அந்த  மாற்றங்களின்  நுண்ணிய  அதிர்வுகளைக்கூட  மொழிபெயர்ப்பில்  கொண்டு  வந்தவர்.  அதை  அவர்  உணர்ந்து  செய்த  மொழிபெயர்ப்புதான்  தஸ்தயேவ்ஸ்கியின்  'கரமாசவ்  சகோதரர்கள்'  நாவல்.

அவர்  ஏற்கெனவே  சில  தமிழ் நூல்களை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலும்,  இந்த  ரஷ்ய  இலக்கியத்தை  அம்மொழியில்  இருந்து  மொழி

பெயர்ப்பது  வித்தியாசமானது  என்பதை  அவர் மொழிபெயர்க்கும்  காலங்களில்  எனக்கும்   எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தத்துக்கும்  வாசித்துக்  காட்டியிருக்கிறார்.  

அரும்புவின்  கரமாசவ்  புத்தக  வெளியீடு  28  ஜூன்  2014-இல்  ரஷ்யக்  கலாசார  மையத்தில்  நடந்த போது,  மேடை  விருந்தினர்களுக்கு   வழங்கப்பட்ட  வெள்ளை நிறச்  சட்டைகளில் கருப்பு  வண்ணத்தில்  தஸ்தயேவ்ஸ்கியின்  சிறு கோட்டோவியத்தை  அரும்புவே  வரைந்திருந்தார்.  ரஷ்ய மொழியின்  நீண்ட  வாக்கியங்கள்  வெறும்  இலக்கண  அமைப்புகள்  அல்ல;  அவை  ஒரு  நீண்ட  இசைக் கோர்வையின் நொட்டேஷன்கள்.  ஒரு  வாக்கியம்  பதினைந்து,  பதினாறு  வரிகளைக் கொண்டவையாக   இருக்கும்.  அவற்றைச்  சிறு சிறு  வாக்கியங்களாகச்  சுருக்கி  மொழிபெயர்த்துவிடலாம்.  ஆனால், அப்படிச்  செய்தால்,  அந்தப்  படைப்பு  பங்கப்படும்  என்பதை  உணர்ந்த  அரும்பு , அந்த  நீண்ட  வாக்கியங்களை  நேரிடையாக  மூல மொழியில்  உள்ளதைப்  போலவே  மொழி

பெயர்ப்பார்.  நான்  ஒரு முறை  அவரிடம், 'இது  தமிழ் வாசகர்களுக்கு  அயர்ச்சி  தராதா?' என்று  கேட்டேன். 

அவர்  கூறிய  பதில்: 'மூல மொழியின்  அந்த  வித்தியாச மனப் போக்கை  தமிழ்  வாசகர்கள்  உணரட்டுமே.  ஒரு  படைப்பை  மொழிபெயர்க்கும் போது,  அந்த  எழுத்தாளருடன்  மொழிபெயர்ப்பாளர்  கை கோர்த்து  அவரது  காலத்திற்குள் வாழ வேண்டும். இது  இரண்டு  உலகங்களுக்கு  இடையில் பயணிப்பதைப்  போன்றது.'

அதற்குச்  சிறந்த  சான்றாக,  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின்  உலகப்  புகழ் பெற்ற  ஏறத்தாழ  ஆயிரம்  பக்கங்களைக்  கொண்ட,  'கரமாசவ்  சகோதரர்கள்' என்ற   மகத்தான  நாவலை  மொழிபெயர்ப்பதற்காக  அவர்  மூன்று  ஆண்டுகள்  இடைவிடாது  உழைத்தார்.  

மனித   மனத்தின்  அடி ஆழத்திலிருக்கும்  அடர்  கரும்  இருளைத்  துளைத்தெடுத்து  வந்து,   இதோ,  இதுதான் மனிதனின்  இன்னொரு  முகம்,  உங்கள்  உள்ளுக்குள்  பதுங்கியிருக்கும்  வேறொரு  முகம்  என்று  'கரமாசவ் சகோதரர்கள்'  நூல்  காட்டிய  அம்சம்தான்   என்னை  அந்த நூலை  மொழிபெயர்க்க  உந்தித்  தள்ளியது என்ற  அரும்பு,  அந்த  நாவலை  நேரடியாகத்  தமிழுக்குக்  கொண்டு  வருவதை  ஒரு  தவம்  போலச்  செய்தார். 

அந்தக்  காலகட்டத்தில்  சைவத்  தமிழ்  அறிஞர்  டி.என். ராமச்சந்திரனை பற்றிய  ஆவணப்பட  விவாதத்துக்காக  நானும்  கி. அ. சச்சிதானந்தமும்  அடிக்கடி  அவர்  வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது.  அரும்பு  உதவி  இயக்குநராகப் பணியாற்றினார்.  அப்போது  அவரது  மொழிபெயர்ப்புப்  பணியின்  உழைப்பையும்  ஈடுபாட்டையும்  நேரில் கண்டோம். அவர்  எந்தப்  பணியைச் செய்தாலும்  மிக  நேர்த்தியாக  நறுவிசாகச்  செய்வார்.

ராய் ரத்தின வேல்  எழுதிய  'கைதி  எண் லி 1056'  என்ற  ஆங்கில நூலையும்,  'மூன்று  கடல்களுக்கு  அப்பால்' என்கிற  அஃபனாசி நிகிதின்  எழுதிய  பயண  நூலையும்  தமிழுக்கு மொழிபெயர்த்தவர்  அரும்பு.  அதோடு  மட்டுமல்லாமல்,   மிக  முக்கிய  ரஷ்ய  எழுத்தாளர்களான  சிங்கிஸ் ஐத்மாத்தவ்,  மரியா ஸ்தெப்பனோவா,  எவ்கேனி வதலாஜ்கின்  போன்றோருடைய  படைப்புகளையும்   தமிழுக்குத்  தந்தவர். 

எவ்வித  எதிர்பார்ப்புகளுமில்லாமல்  அவர்  செய்த,  செய்து வருகிற  மொழிபெயர்ப்புப்  பணிகளுக்காக 2026-ஆம் ஆண்டின்  கே.எஸ். மொழிபெயர்ப்பு  விருதை கோவை விஜயா பதிப்பகம்  வழங்கியுள்ளது. அவரது   அமைதியான  தவத்துக்குக்  கிடைத்த  கௌரவம்  இதுவாகும்.   அவர்  உழைப்புக்குக்  கிடைத்த அங்கீகாரம். 

மொழிகள்  வேறாக  இருக்கலாம்;  மனிதனின்  கண்ணீரும் கருணையும்  ஒன்றுதான்  என்பதைத்  தன்  மொழிபெயர்ப்புகளால்  மறுபடி  மறுபடி  நிரூபித்தவர்  அரும்பு  சுப்பிரமணியம். ஒரு மொழியின்  விளக்கிலிருந்து  ஒளிபெற்று  இன்னொரு  மொழியில்  விளக்கேற்றிச்   செல்லும்  அரும்புவுக்கு   வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.