மண்ணின் கலைகளைச் சுமப்பேன்...

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவிலை பூர்விகமாகக் கொண்ட சொர்ண மேரி...
சொர்ண மேரி
சொர்ண மேரி
Updated on
1 min read

'மண்ணின் கலைகளைச் சுமப்பதிலும், அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துதிலும் எனக்கு அதிக அளவில் விருப்பம். இளையத் தலைமுறையினரின் பரதநாட்டிய அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவதில் அலாதியான ஆனந்தம்' என்கிறார் சிறந்த தமிழ் உச்சரிப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் விருது பெற்ற அருணோதய சொர்ண மேரி.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவிலை பூர்விகமாகக் கொண்ட அவர், தற்போது குடும்பத்துடன் சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது தந்தை ஜோசப்ராஜ், விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். தாய் சாந்தி குடும்பத் தலைவி. இரு தம்பிகள், ஒரு தம்பி. தீப்பெட்டி ஒட்டுதல்தான் குடும்பத்தின் முக்கிய வருமானம். நானும் பள்ளியின் விடுமுறை நாள்களில் தீப்பெட்டிகளை ஒட்டுவேன்.

சிறுவயது முதலே தமிழார்வம் அதிகம். சங்கரன்கோவில் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியிலும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பள்ளி விழாக்களின்போது, நானே பாடல்களை எழுதி ஆடிப் பாடுவேன். நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்குவேன். பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகம், எனக்கு ஊக்கம் அளித்தார். அவர் ஓய்வு பெற்றபோது, நான் சக மாணவிகளை ஒருங்கிணைத்து வில்லிசையை இசைத்து விடை கொடுத்தேன். பின்னர், இளங்கலை தமிழ் படித்தேன்.

பெண் சிசுக் கலை, வரதட்சிணைக் கொடுமை போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை திருநெல்வேலியில் உள்ள செம்மணி கலைக்குழுவை நடத்தி வந்த அருட்தந்தை ஞானப்பிரகாசத்துடன் இணைந்து செய்துவந்தேன். பத்மஸ்ரீ விருது பெற்ற பறையிசைக் கலைஞர் வேலு ஆசானிடம் பறையிசை கற்றேன்.

மேலும் நாட்டுப்புற இசை, கரகாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு ஆட்டம், கழியாட்டம், கோலாட்டம் போன்ற கலைகளையும் கற்றேன். நாகர்கோவில் களரிக் குழுவிலும் பயிற்சி பெற்றேன்.

இசை ஆர்வத்தால், திருச்சி கலைக்காவிரி நுண் கலைக் கல்லூரியில் சேர்ந்து இளநுண்கலையில் கர்நாடக இசையைப் பயின்றேன். 'நமது கிராமம்', 'வாழ்ந்து காட்டுவேன்' உள்ளிட்ட அரசுத் திட்ட விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினேன். பள்ளியில் கர்நாடக இசை ஆசிரியராகவும் பணியாற்றினேன்.

செய்தி வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறேன். இதோடு, கல்வி நிலையங்களில் நாட்டுப்புறக் கலை, இசைப் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறேன். புராண, விழிப்புணர்வு, இலக்கிய, சமூக நாடகங்களிலும் நடித்து வருகிறேன். இசைக்காகவும், தமிழுக்காகவும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன்.

இசைக் கல்லூரியில் பயின்றபோது, வயலின் படிப்பைப் பயின்ற பாண்டியராஜியுடன் நட்பு ஏற்பட்டு காதலானது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தோம்'' என்கிறார் அருணோதய சொர்ணமேரி.

-தி.நந்தகுமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com