கம்பு குதிரைவாலி வடாம்
தேவையான பொருள்கள்:
கம்பு மாவு-1கிண்ணம்
குதிரை வாலி அரிசி மாவு -
அரை கிண்ணம்
பச்சை மிளகாய் விழுது -
1 மேஜை கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அனைத்துப் பொருள்களையும் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாகக் கரைக்கவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும், கரைத்து வைத்த மாவை ஊற்றி வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு சிறு சிறு வட்டங்களாக ஊற்றி, வெயிலில் 2-3 நாள்கள் காய வைக்கவும். ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடலாம்.
அவல் முறுக்கு வடாம்
தேவையான பொருள்கள்:
கெட்டி அவல் - மூன்று கிண்ணம்
எலுமிச்சம்பழம் - 1
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பெருங்காயப் பொடி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: அவலை களைந்து, நீரில் ஊறவைக்கவும். 20 நிமிடங்களுக்குப் பின், நீரை வடித்து, அதனுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிறகு அதில் சீரகம், பெருங்காயப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசைந்து, முறுக்கு அச்சில் நிரப்பி, பாலிதீன் பேப்பரில் பிழிந்து, வெயிலில் காய வைக்கவும்.
மரவள்ளிக் கிழங்கு வடாம்
தேவையான பொருள்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
பச்சை மிளகாய் - 8 முதல் 10
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 மேஜை கரண்டி
அரிசி மாவு - 4 மேஜை கரண்டி
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை: மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கி நன்றாகக் கழுவிக் கொள்ளவும். சிறிய துண்டுகளாக நறுக்கி, குழைய வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, சூடு குறைந்த பின் நன்றாக மசிக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை மசித்த மரவள்ளிக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு, பெருங்கா யம், எலுமிச்சைச் சாறு, அரிசி மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். கையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிய உருண்டைகளாக உருட்டி, முறுக்கு குழாயில் போட்டு விருப்பப்பட்ட வடி வத்தில் பிழியவும். வெயிலில் 2-3 நாள்கள் காய வைக்கவும். ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எண்ணெய்யில் பொரித்துச் சாப்பிடலாம்.
முருங்கைக் கீரை அரிசிச் சோறு வடாம்
தேவையான பொருள்கள்:
முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் -6
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். குக்கரில் ஒரு கிண்ணம் அரிசிக்கு மூன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும். இன்னொருபுறம் மிக்ஸியில் முருங்கைக்கீரை, மிளகாய், சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கவும். மொத்த கலவையும் அரிசியுடன் சேர்த்து 5 விசில் விட்டு குழைய வேக வைக்கவும். பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து நன்கு கிளறி முறுக்கு குழாயில் போட்டு விருப்பப் பட்ட வடிவத்தில் பிழியவும். 2-3 நாள்கள் வெயிலில் நன்கு காயவைத்தால் வடாம் ரெடி.
குட்டி குட்டி போண்டா
தேவையான பொருள்கள்:
கடலை மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
சின்ன வெங்காயம் 6 -8 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் -தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்க்கவும். அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக மாவு கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சிறிய சிறிய உருண்டைகளாக மாவைப் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வந்ததும் எடுத்து விடுங்கள்.
-நாகஜோதி கிருஷ்ணன், சென்னை - 5.
சமையல் குறிப்புகள்...
* புதினாவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி அரைத்து, அதனை தக்காளிச் சூப்புடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால், சுவையும் சத்தும் அதிகமாகும்.
* பொரியல், கூட்டு ஆகியவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால், தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



