வாடிய பூக்களில் வாசனை சாம்பிராணி
உதவாது என்று தூக்கி வீசியெறியும் பலவகைப் பொருள்களும் அண்மைக்காலமாக மறுசுழற்சியில் மாற்றுப் பொருளாகின்றன.
உதவாது என்று தூக்கி வீசியெறியும் பலவகைப் பொருள்களும் அண்மைக்காலமாக மறுசுழற்சியில் மாற்றுப் பொருளாகின்றன. அந்த வகையில், பூக்கள் விற்பனைச் சந்தையில் வீணானவை, விற்பனையாகாதவை, கோயில்களில் சுவாமிக்கு சாத்திய மலர் மாலைகள் போன்றவற்றைச் சேகரித்து, அவற்றை வெயிலில் உலர வைத்து, மணக்கும் வாசனை சாம்பிராணியாகத் தயார் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர் நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர்.
இந்தப் பணியை மேற்கொண்டுள்ள சர்வம் கல்வி அறக்கட்டளை நிர்வாகி ரம்யா கூறியதாவது:
'நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூக்கள் சந்தையில் வீணாகும் கழிவுப் பூக்களை பெறுவதற்கும், அவற்றை உலர வைக்கவும், சாம்பிராணி தயார் செய்வதற்குமான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது. ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் தென்பாண்டியன், சுவாமிக்கு சாத்தப்படும் பலவகை மாலைகளை எங்களது பயன்பாட்டுக்கு வழங்க முன்வந்ததோடு, சாம்பிராணி தயார் செய்யும் இயந்திரம் வாங்கவும் உதவினார்.
இதைத் தவிர, வாசனை சாம்பிராணி, அகல் விளக்குகள் தயாரிப்பில் மகளிர் சுய உதவிக் குழுவினரும், விற்பனைக்கான உதவிகளை பாரதிய கிசான் சங்கம், கொல்லிமலை ஆர்கானிக் அறக்கட்டளை போன்றவையும் உதவுகின்றன. ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக்குழுவினரின் பங்களிப்பு அபாரம்.
ஐந்து கிலோ பூக்கழிவுகளை வெயிலில் உலர வைத்து, அதற்கான இயந்திரத்தில் அரைத்து எடுத்தால் ஒரு கிலோவுக்கும் குறைவாகவே கிடைக்கும். அதனுடன், சாம்பிராணி வாசனை, எரியூட்டலுக்காக ஏழு வகையான பொருள்களைச் சேர்க்கிறோம். அதனை பதமாக்கி, இயந்திர அச்சில் வைத்து சிறிய, பெரிய அளவிலான சாம்பிராணிகளைத் தயாரிக்கிறோம். அதன்பிறகு, அதற்கான பெட்டிகளில் அடுக்கி விற்பனைக்கு அனுப்புகிறோம்.
அண்மையில்தான் தொழிலை தொடங்கி உள்ளோம். பலரிடம் எங்கள் மீதான எதிர்பார்ப்பு இருந்தபோதும், வாசனை சாம்பிராணி உற்பத்தி, விற்பனைக்கான வாய்ப்புகள் சற்றுக் குறைவாகவே உள்ளது. அதிகளவில் பூக்கள் கிடைக்க வேண்டும்; அதன்பிறகு தயாரித்த சாம்பிராணியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டாலும், தமிழக அரசும் அதற்கான உதவிகளைச் செய்தால், மணப்பது சாம்பிராணி மட்டுமல்ல, சுய தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் வாழ்வும் தான்!'' என்கிறார் ரம்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

