
அள்ளித் தரும் அதிசயப் பெண்!
பெண்கள் உரிமைக்காகப் பேசுவது, போராடுவது மட்டும் என்றில்லாமல் அவர்களுக்காக பணத்தை கோடி கோடியாகச் செலவளிக்கும் அதிசயப் பெண்மணியாக மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் திகழ்கிறார்.
பெண்கள் உரிமைக்காகப் பேசுவது, போராடுவது மட்டும் என்றில்லாமல் அவர்களுக்காக பணத்தை கோடி கோடியாகச் செலவளிக்கும் அதிசயப் பெண்மணியாக மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் திகழ்கிறார். வீட்டிலும் அலுவலகத்திலும் ஆண் - பெண் என இருவருக்கும் சம உரிமை உண்டு என்பதே இவரது கொள்கை.
அமெரிக்காவில் டெக்ஸாஸில் டல்லாஸில் 1964-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் பிறந்த மெலிண்டா, பள்ளிப்படிப்பை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியில் முடித்தார். மேற்படிப்பு படிக்க முற்பட்டபோது, கல்வி ஆலோசகர் ஒருவர், 'நீ அதிகமாக ஆசைப்படக் கூடாது. உள்ளூர் கல்லூரிகளில் சேர்ந்து விடு. ட்யூக் அல்லது நார்த் டேம் என்றெல்லாம் ஆசைப்படாதே!' என்றார்.
வெகுண்டெழுந்த அவர், பெண்கள் பற்றிய பள்ளி ஆவணங்களை ஆராய ஆரம்பித்தார். அதில் ஒரு வாலெடிக்டோரியன் எங்கும் சென்று படிக்கலாம் என்பதைக் கண்டார். வாலெடிக்டோரியன் என்றால் தொடர்ந்து படிப்பில் 'ஏ' கிரேடு பெற்று, பட்டமளிக்கும் விழாவில் பேசும் திறன் படைத்தவர் என்று அர்த்தம்.
கடுமையாக உழைத்த மெலிண்டா 'ஏ' கிரேடு பெற்று முதன்மை மாணவியானார். ட்யூக் கல்லூரியில் சேர்ந்து, முதல் வெற்றியை அடைந்தார்.
1980-களில் கணினி யுகம் ஆரம்பித்தபோது, அதில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். மெலிண்டாவின் திறமையையும், உயர்நோக்கத்தையும் அறிந்த ஆசிரியை பார், நிர்வாகத்திடம் பரிந்துரைத்து, கணினியை வாங்கிக் கொடுத்தார். மெலிண்டா அதில் தேர்ந்து 1987-ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இளம் வயதுப் பெண் நிர்வாகியானார்.
இவருடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸூம் காதல் வயப்படவே 1994-ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர் மைக்ரோசாப்டில் ஏராளமான முன்னேற்றங்களைச் செய்தாலும், பில் கேட்ஸையே முதன்மைப்படுத்தினார். அதன்பின்னர், இருவருக்கும் வாழ்க்கையில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட, கோடிகள் குவிந்தன. மூன்று குழந்தைகளைப் பெற்ற அவர், 2021-ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.
வாழ்க்கையில் திருப்புமுனை
ஒருமுறை மலாவிக்கு மெலிண்டா பயணம் மேற்கொண்டபோது, அவரைச் சந்தித்த பெண்கள், 'நீங்கள் ஒருவர் மட்டுமே தான் எங்களின் குரலாக இருக்கிறீர்கள்' என்று உருக்கமாகக் கூறினர். இதனால் விழித்தெழுந்த அவர் கர்ப்பத் தடையைப் பற்றிப் பேசினார். அவருடைய கொள்கையை உலகமே ஏற்றது.
விவாகரத்து ஒப்பந்தப்படி பெற்ற 1,200 கோடி டாலரில் 'கேட்ஸ் ஃபவுண்டேஷன்' என்று பெயரில் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார். 'பிவடல் வெஞ்சர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். 2026-ஆம் ஆண்டில் 466 லட்சம் டாலர் பணத்தை இந்த நிறுவனம் முதலீடு செய்தது.
இவர் மாதவிலக்கு, பிரசவம், இதய நோய், மன நல மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவத் துறையில் முதலீடு செய்து பாடுபட்டு வருகிறார்.
இவரை உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர் என்று 'போர்பஸ்' பத்திரிகை எழுதியிருக்கிறது. பி.பி.சி. தனது 2021-ஆம் ஆண்டில் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் நூறு பேரில் இவரையும் சேர்த்துள்ளது. உலகில் உள்ள பணக்காரர்களில் 72-ஆவது இடத்தை இன்று வகிக்கும் மெலிண்டாவின் இன்றைய சொத்தின் மதிப்பு 3 ஆயிரம் கோடி டாலர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




